spot_img
July 27, 2024, 9:43 am
spot_img

நுகர்வோர் நீதிமன்றங்கள் நுகர்வோர் உரிமைகள் தொடர்பான அனைத்து வழக்குகளையும் விசாரிக்க வேண்டும்

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019-ன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையமும் ஒவ்வொரு மாநிலத்திலும் மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையமும் தேசிய அளவில் தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையமும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆணையங்கள் சிறப்பாக செயல்பட நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் சில திருத்தங்களை செய்வது அவசியமாக உள்ளது.

தீர்ப்பாயம்

நீதிமன்றங்களில் அதிக வழக்குகள் தேக்கம் அடைவதால் விரைவான நீதி வழங்கப்படுவது கால தாமதமாகிறது என்ற அடிப்படையில்தான் தீர்ப்பாயங்கள் மற்றும் நுகர்வோர்  ஆணையங்கள் போன்றவை ஏற்படுத்தப்பட்டன.  இந்தியாவில் செயல்பட்டு வரும் பல வகையான அரசின் தீர்ப்பாயங்கள் வழங்கும் உத்தரவுகளுக்கு ஒத்த மதிப்பை (equal value) நுகர்வோர் ஆணையங்களின் உத்தரவுகளும் கொண்டவை என்பதாலும் நுகர்வோர் ஆணையங்கள் நுகர்வோர் தாக்கல் செய்யும் புகார்களை விசாரித்து உத்தரவுகளை பிறப்பிக்கும் நீதி சார்ந்த பணிகளை செய்து வருகின்றன என்பதாலும் நுகர்வோர் குறைதீர் ஆணையங்களின் பெயர் நுகர்வோர் தகராறு குறைதீர் தீர்ப்பாயம் (consumer disputes redressal tribunal) என்று மாற்றப்படுவதே சரியானதாக இருக்கும்.

நுகர்வோர் உரிமைகள்

நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், 2019, இந்திய குடிமக்களுக்கு பாதுகாப்பு உரிமை, தகவலறியும் உரிமை, தேர்வு செய்யும் உரிமை, குறைகள் கேட்கப்படுவதற்கான உரிமை, தீர்வுக்கான உரிமை மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வுக்கான உரிமை   ஆகிய உரிமைகளை வழங்கியுள்ளது.  ஆனால், இந்த உரிமைகள் தொடர்பான அனைத்து வகையான புகார்களையும் நுகர்வோர் ஆணையங்களில் சட்டப்படி தாக்கல் செய்ய இயலாத நிலை உள்ளது. ஏனெனில், ஒரு பொருளை அல்லது சேவையை விலை கொடுத்து வாங்கினால் மட்டுமே நுகர்வோர் ஆணையங்களில் புகார் தாக்கல் செய்ய இயலும்.  ஒரு பொருளை அல்லது சேவையை விலை கொடுத்து வாங்காமல் நுகர்வோர் உரிமைகள் பாதிப்பு தொடர்பான புகார்களை நுகர்வோர் ஆணையங்களில் தாக்கல் செய்ய இயலாது. 

தேசிய மற்றும் மாநில மனித உரிமை ஆணையங்களில் மனித உரிமைகள் பாதுகாப்புச்  சட்டத்தில் (1993) மனித உரிமைகள் என வரையறுக்கப்பட்டுள்ள பிரச்சனைகள் குறித்து  அனைத்து வகையான புகாரையும் தாக்கல் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இதே போலவே, நுகர்வோர் பாதுகாப்பு  சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள நுகர்வோர் உரிமைகள் குறித்த பிரச்சினைகள் எதனையும் நுகர்வோர் ஆணையங்களில் புகாராக தாக்கல் செய்யலாம் என்ற வகையில் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும். இதன் மூலம்  நுகர்வோரின்   உரிமைகளை உறுதிப்படுத்த இயலும்.

தானாக முன்வந்து

மனித உரிமை மீறல்கள் தொடர்பான விவரங்கள் தேசிய மற்றும் மாநில மனித உரிமைகள் ஆணையங்களின் கவனத்துக்கு வரும் போது எவரும் புகார் தாக்கல் செய்யவில்லை என்றாலும் சம்பந்தப்பட்ட   பிரச்சனையை தானாக முன்வந்து (suomoto) விசாரிக்கும் அதிகாரம் மனித உரிமை ஆணையங்களுக்கு மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது.  குழந்தைகள் உரிமைகள் தொடர்பான பிரச்சனைகள் கவனத்திற்கு வரும்போது தாமாக முன்வந்து விசாரிக்கும் அதிகாரம் தேசிய மற்றும் மாநில குழந்தைகள் உரிமைகள் ஆணையங்களுக்கு   வழங்கப்பட்டுள்ளது.  

இதைப் போலவே நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள நுகர்வோர் உரிமை    மீறல்கள் தொடர்பான விவரங்கள் நுகர்வோர்  ஆணையங்களின் கவனத்திற்கு வருமானால் அவற்றை தானாக முன்வந்து விசாரிக்கும் அதிகாரம் நுகர்வோர் ஆணையங்களுக்கும் வழங்கும் வகையில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும். இதன் மூலம் நுகர்வோர் பாதுகாப்பு வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

நுகர்வோர் பூங்கா
நுகர்வோர் பூங்கா
நுகர்வோர் பூங்காவின் படைப்பு

தொடர்புடைய கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்