spot_img
July 27, 2024, 8:11 am
spot_img

மாவட்ட நுகர்வோர் சட்ட உதவி குழு ஏற்படுத்தப்பட வேண்டும்

சட்ட அமைச்சகத்தின் கீழ்

தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் மத்திய அரசின் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. இதைப் போலவே மாநில மற்றும் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையங்கள் மாநில அரசுகளின் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைகளில் செயல்படுகின்றன.  மத்திய, மாநில அரசுகளின் நுகர்வோர் பாதுகாப்பு துறை  நுகர்வோர் பாதுகாப்பு தொடர்புடைய பணிகளை மேற்கொண்டு வருவதால் நுகர்வோர் பாதுகாப்பு பணிகளில் குறைபாடு ஏற்படும் போது   நுகர்வோர் பாதுகாப்பு துறை மீது புகார் தாக்கல் செய்யப்பட்டால் நுகர்வோர் பாதுகாப்பு துறைகளுக்கு தகுந்த உத்தரவுகளை வழங்கும் அதிகாரத்தை நுகர்வோர் பாதுகாப்பு ஆணையங்கள் பெற்றுள்ளன.  இந்த சூழலில் நுகர்வோர்  ஆணையங்களுக்கு சுதந்திரத் தன்மை (independent) கேள்விக்குறியாகிறது என்பதை மறுக்க முடியாது.  இதனால் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையங்கள் சட்ட அமைச்சகத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும்.

தேர்வு குழு

அரசின் ஒரு துறை கையாளும் பொருள் தொடர்பான பிரச்சனைகளை விசாரணை செய்யும் பணியை செய்யக்கூடிய தீர்ப்பாயங்களின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்வு செய்யும் போது அந்த  துறையின் செயலாளர் தேர்வு குழுவில் இடம் பெறக் கூடாது என்று இந்திய அரசுக்கும் மெட்ராஸ் பார் அசோசியேசனுக்கும் நடைபெற்ற வழக்கு ஒன்றில் கடந்த 2021 நவம்பர் மாதத்தில் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம்  தெரிவித்துள்ளது.  இதன் அடிப்படையில் நுகர்வோர் ஆணையங்களின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்வு செய்யும் குழுவில் நுகர்வோர் பாதுகாப்பு துறை  செயலாளர்  இடம் பெறக்கூடாது. இதன் மூலமாகவே நுகர்வோர் ஆணையங்களின் தன்னாட்சி தன்மை பாதுகாக்கப்படும்.

சட்ட உதவி

நுகர்வோர் ஆணையங்களில் வசதியற்றவர்களுக்கு சட்ட ஆலோசனை மற்றும் உதவி வழங்கும் வகையில் சட்ட உதவி நிதியம் (legal aid fund) அமைக்கப்பட்டுள்ளது.  நுகர்வோருக்கு ஏற்படும் பிரச்சனைகளில்  ஐந்துக்கும் குறைவான சதவீத நுகர்வோர்களே நுகர்வோர் ஆணையங்களில் புகார் தாக்கல் செய்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நுகர்வோர் உரிமைகள் பாதிக்கப்பட்டாலும் பணம் செலுத்தி வழக்கறிஞர் அமர்த்தி நுகர்வோர் புகார்களை தாக்கல் செய்ய இயலாத வசதியற்றவர்கள் பலர் நுகர்வோர் ஆணையங்களை அணுகுவதில்லை.  

இந்த குறையை போக்கும் வகையில் நீதிமன்றங்களில் மாவட்ட சட்டப்பணிகள் குழு உள்ளதை போல ஒவ்வொரு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையங்களிலும் மாவட்ட நுகர்வோர் சட்டப்பணி குழுவை அமைத்து தேவையானவர்களுக்கு உதவி வழங்க வேண்டியது அவசியமாகும்.  இத்தகைய அமைப்பை நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்திலேயே அமைப்பதற்கு வழி செய்யும் வகையில் தகுந்த சட்ட திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும். இதன் மூலமே மாவட்ட நுகர்வோர் சட்டப்பணி குழுவுக்கு சட்ட அங்கீகாரம் கிடைக்கும்.

சட்ட விழிப்புணர்வு

மனித உரிமைகள் ஆணையங்களுக்கும் குழந்தைகள் உரிமைகள் ஆணையங்களுக்கும் சம்பந்தப்பட்ட சட்டத்தின்படி  முறையே மனித உரிமைகள் மற்றும் குழந்தை உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணி வழங்கப்பட்டுள்ளது.  இதைப் போலவே நீதிமன்றங்களில் செயல்பட்டு வரும் சட்டப்பணி குழுக்கள் சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியை பிரதானமாக செய்து வருகின்றன.  ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட நுகர்வோர் ஆணையத்தில் நுகர்வோர் சட்டப்பணி குழுவை சட்ட திருத்தம் மூலம் அமைத்து இந்த குழுவானது தேவைப்படும் நுகர்வோருக்கு சட்ட உதவியை வழங்குவதோடு மாவட்டம் முழுவதும்  நுகர்வோர் சட்ட விழிப்புணர்வு பணிகளை புரியும் வகையில் சட்ட திருத்தம்   செய்தால் நுகர்வோர் விழிப்புணர்வு பரவலாக்கப்படும்.

நுகர்வோர் குழுக்கள்

நுகர்வோர் ஆணையங்களில் தன்னார்வ நுகர்வோர் குழுக்கள் நுகர்வோர்களுக்காக வழக்கு தாக்கல் செய்ய   நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தில் வழிமுறை செய்யப்பட்டுள்ளது.  பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நுகர்வோருக்கு எதிரான வழக்குகளில் சர்வதேச வணிக நிறுவனங்களும்  பெரு நிறுவனங்களும்  எதிர் தரப்பினராக உள்ள நிலையில் தன்னார்வ நுகர்வோர் குழுக்களுக்கு தகுந்த சட்ட உதவியை மாவட்ட நுகர்வோர் சட்டப்பணி குழுவின் மூலம் வழங்கும் வகையிலும் தன்னார்வ நுகர்வோர் குழுக்களுக்கான வழிகாட்டுதல்கள் வழங்கல் மற்றும் தணிக்கை பணிகளை செய்யும் வகையிலும் மாவட்ட நுகர்வோர் சட்டப்பணி குழு அமைக்கப்பட வேண்டும்.

மத்திய சரக்கு மற்றும் சேவை வரி (CGST) சட்டத்தின் (2017) கீழ் அமைக்கப்பட்டுள்ள நுகர்வோர் நல நிதியிலிருந்து குறிப்பிட்ட நிதி ஒதுக்கீட்டை மாவட்ட நுகர்வோர்   சட்டப்பணி குழுக்களுக்கு வழங்கும் வகையில்   சட்ட  திருத்தம் செய்யப்பட வேண்டும்.

நுகர்வோர் பூங்கா
நுகர்வோர் பூங்கா
நுகர்வோர் பூங்காவின் படைப்பு

தொடர்புடைய கட்டுரைகள்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்