spot_img
July 27, 2024, 12:55 pm
spot_img

இருண்ட வணிக நடைமுறை –  பகுதி 1: பணத்தைச் செலுத்த அவசரப்படுத்தும் ஆபத்தான இருண்ட வடிவங்களை தெரியுமா?

நாம் வாங்கும் பொருட்களுக்கும் சேவைகளுக்கும் நிர்ணயம் செய்யப்பட்டதை விட கூடுதலாக பணத்தை வசூலிப்பது, குறைபாடு உள்ள பொருளை சேவையை விற்பனை செய்வது, வழங்கப்படும் சேவையில் குறைபாடு இருப்பது மற்றும் நியாயமற்ற வர்த்தக நடைமுறை போன்றவற்றை பற்றி 2019 நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் விளக்கப்பட்டுள்ளது.   இதற்கான பரிகாரங்களை நுகர்வோர் நீதிமன்றங்களில் பாதிக்கப்படும் நுகர்வோர் பெறுவதற்கான வழிவகைகளும் இந்த சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியாயமற்ற வர்த்தக   நடைமுறைகளால் (unfair trade practice) நுகர்வோர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது புதிதாக நுகர்வோர்களை பாதிக்கும் வகையில் இருண்ட வடிவ வணிக நடைமுறைகள் (dark pattern trade practice) சந்தையில் வலம் வருவது அதிகரித்துள்ளது. தற்போதைய இணைய உலகில் கைபேசி, கணினி ஆகியவற்றை பயன்படுத்துவது தவிர்க்க இயலாததாக உள்ளது.  இவற்றை பயன்படுத்தும் போது   நமக்கு தெரியாமலேயே வேறு ஒரு செயலில் ஈடுபடுத்தும் வகையில் அழைத்துச் செல்லும் முறைதான் இருண்ட முறை ஆங்கிலத்தில்   டார்க் பேட்டர்ன் என அழைக்கப்படுகிறது.

உடனடியாக பொருளை வாங்க அல்லது சேவையைப் பெற பணத்தை செலுத்த நுகர்வோரை   தவறான தகவல்கள் மூலம் அவசரப்படுத்துவது தற்போது இருண்ட வடிவ வணிக நடைமுறைகளில் ஒன்றாகும்.  அதாவதுவிற்கப்படும் ஒரு பொருள் அல்லது வழங்கப்படும் சேவைக்கு சந்தையில் அதிக தேவை உள்ளது போல   தோற்றத்தை உண்மைக்கு புறம்பாக உருவாக்கி நுகர்வோர் அதனை விரைவில் வாங்கும் வகையில் அவசரப்படுத்தி வியாபாரம் செய்வது.

உதாரணமாக, ஒரு சுற்றுலா நகரத்தில் உள்ள பிரபலமான தங்கும் விடுதி ஒன்றுக்கு இணையதளம் மூலம்   முன்பதிவு செய்ய முயற்சிக்கும் போது பல அறைகள் காலியாக இருந்தாலும் கூட தவறான தரவுகள் மூலம் இன்னும் இரண்டு அறைகளே உள்ளன. தற்போது 30 நபர்கள் இணையதளத்தில் முன்பதிவு செய்வதற்காக விவரங்களை பார்த்துக் கொண்டுள்ளார்கள் என்று இணையதளத்தில் உண்மைக்குப் புறம்பான தகவலை காட்டுவது. இதனை பார்க்கும் நுகர்வோர் ஒருவர் மற்ற விடுதிகளில் உள்ள வசதிகள் மற்றும் வாடகை ஆகியவற்றை அறிய  முயற்சிக்காமலேயே உடனடியாக இந்த  விடுதியிலேயே அறையை முன் பதிவு செய்யக்கூடிய மனநிலையை உருவாக்குவது இத்தகைய இருண்ட வடிவத்தின் நோக்கமாகும்.

ஒரு குறிப்பிட்ட தயாரிப்பு (பொருள்) அல்லது சேவையின் (சர்வீஸ்) அளவுகள் உண்மையில் அளவுக்கு அதிகமாக இருப்பினும் கூட குறைந்த அளவே இருப்பதாக நுகர்வோர்களுக்கு தெரிவிப்பது ஒருவகையான இருண்ட வடிவ வணிக முறையாகும். உதாரணமாக, குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே தள்ளுபடி விற்பனை குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டுமே தள்ளுபடி விற்பனை என்பது போன்ற உண்மைக்கு புறம்பான விளம்பரங்களை செய்வது. தங்களுக்கு மட்டுமே குறிப்பிட்ட சதவீதத்தில் பண தள்ளுபடி விற்பனை குறியீடு வழங்கப்பட்டுள்ளது என குறியீடு (code)  ஒன்றை அனைத்து நுகர்வோர்களுக்கும் மின்னஞ்சல், குறுந்தகவல், சமூக வலைத்தளம் மூலம் அனுப்பி குறிப்பிட்ட நாளுக்குள் குறியீட்டை பயன்படுத்தி தள்ளுபடி பெற்றுக்கொள்ளாவிட்டால் குறியீடு செயல் இழந்து விடும் என தெரிவிப்பது.

இவ்வாறு ஒரு பொருளின் அல்லது சேவையின் உண்மைத்தன்மையை மற்றும் உண்மையான மதிப்பை அறிந்து கொள்ள இயலாத நிலைக்கு நுகர்வோரை அழுதத்துக்கு உள்ளாக்கி அவசரப்படுத்தி பணத்தை வசூலிப்பது தற்போது மிகவும் அதிகரித்துள்ளது. நுகர்வோர் பணத்தைச் செலுத்த அவசரப்படுத்தும் இருண்ட வடிவம் ஆபத்தானதாக வளர்ந்து கொண்டிருக்கிறது. கடந்த 30 நவம்பர் 2023 -ல் மத்திய அரசு வெளியிட்டுள்ள இருண்ட வடிவ வணிக நடைமுறை குறித்த வழிகாட்டுதல்களில் முதலாவது அங்கமாக அவசரப்படுத்தி பணத்தை வசூலிக்கும் வணிக நடைமுறை கூறப்பட்டுள்ளது

அரசு வெளியிட்டுள்ள இருண்ட வடிவ வணிக நடைமுறை  குறித்த வழிகாட்டுதல்களின் இதர அம்சங்கள் ஓரிரு நாட்களில் இரண்டாம் பகுதியாக வெளியிடப்படும்.

நுகர்வோர் பூங்கா
நுகர்வோர் பூங்கா
நுகர்வோர் பூங்காவின் படைப்பு

தொடர்புடைய கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்