spot_img
May 14, 2024, 5:05 pm
spot_img

இந்திய தேசம் அதிபர் ஆட்சி, ஒற்றை ஆட்சி முறையை நோக்கி நகர்கிறதா? – பகுதி – 2

 இந்திய தேசம் அதிபர் ஆட்சி,  ஒற்றை ஆட்சி முறையை நோக்கி நகர்கிறதா? – பகுதி – 2

இந்திய தேசம் அதிபர் ஆட்சி,  ஒற்றை ஆட்சி முறையை நோக்கி நகர்கிறதா? என்று கட்டுரையின்   முதலாம் பகுதியில் கூட்டாட்சி, ஒற்றை ஆட்சி, பாராளுமன்ற ஆட்சி முறை, அதிபர் ஆட்சி முறை போன்றவை என்ன என்பதை பார்த்தோம்.  இந்தப் பகுதியில் இத்தகைய அம்சங்கள் பற்றி நம் தேசத்தில் நிலவும் சூழல்களையும் போக்கையும் பார்க்கிறோம்.

தற்போது ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது  குறித்து ஆய்வு செய்ய முன்னாள் குடியரசுத் தலைவர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு பரிசீலனையில் இருந்து வருகிறது. மக்களவைக்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால் செலவு குறையும் என்பதோடு அரசு இயந்திரம் தேர்தலுக்கான பணிகளை மேற்கொள்ளும் நேரமும் மிச்சமாகும் என்ற கண்ணோட்டத்துடன் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற கொள்கை பார்க்கப்படுகிறது.  

மக்களவை ஐந்தாண்டு காலத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இடைப்பட்ட காலத்தில்   கலைக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டால் ஐந்தாண்டுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளுக்கும் மக்களவைத் தேர்தலுடன் இணைந்து தேர்தலை நடத்த முடியுமா?   இதைப்போலவே மாநிலங்களில் ஐந்தாண்டுகளுக்கு மக்களவைத் தேர்தலோடு தேர்தல் நடத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சி கவிழ்ந்து அமைச்சரவை கலைக்கப்படும் போது வேறு எவரும் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்காத சூழ்நிலை ஏற்பட்டால் மக்களவை காலம் ஐந்து ஆண்டுகள் என்பது முடியும் வரை மாநிலத்தில் தேர்ந்தெடுக்கப்படாமல் அரசை இயக்குவது எப்படி?  என்ற வினாக்கள் முக்கியமானவை.

குறிப்பாக, மாநில அமைச்சரவை பெரும்பான்மை இல்லாததால்   ஐந்து ஆண்டு காலத்தை பூர்த்தி செய்யாததற்கு முன்பு கலைக்கப்படும் போது மாநில அரசை மாநிலத்தில் ஆளுநர் மூலமாக குடியரசுத் தலைவர் ஆட்சியை ஏற்படுத்த வேண்டிய சூழல்   ஏற்படும்.  ஏற்கனவே மத்தியில் ஆளும் அரசுக்கு எதிரான கட்சிகள் மாநிலங்களில் ஆட்சி செய்யும்போது மாநில ஆளுநர்கள் மாநில அரசுக்கு எதிரான  மனநிலையுடன் செயல்படுகிறார்கள் என்று குற்றச்சாட்டு உள்ளது.  ஒரு மாநிலத்தில் ஆட்சி கவிழ்ந்து மக்களவைத் தேர்தல் நடத்தப்படும் வரை மாநிலத்தில் தேர்தல் நடத்தப்படாமல் ஆளுநர் மூலமாக ஆட்சி நடத்தப்பட்டால் ஒற்றையாட்சி போன்ற சூழல் ஏற்படுமா? என்பது முக்கியமான கேள்வி.  இதுபோன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காணாமல்   மக்களவைக்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படும் என்ற நிலைப்பாட்டை   மேற்கொண்டால் அதன் பின்னர் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்ப்பதற்காக அதிபர் ஆட்சி முறையை இந்தியாவில் அமல்படுத்துவதற்கான சூழலை சிந்திக்க கூடிய நிலை ஏற்படுமா? என்பதையும் கவனிக்க வேண்டும்.

கடந்த 1976 ஆம் ஆண்டு 42 ஆம் அரசியலமைப்பு திருத்தம் மூலம் கல்வி, வனம் போன்ற துறைகள் மாநில அரசின் அதிகார   பட்டியலில் இருந்து மத்திய மாநில அரசுகளின் பொதுப்   பட்டியலுக்கு மாற்றப்பட்டது.  மத்திய, மாநில அரசுகளின் பொதுப் பட்டியலில் உள்ள விவகாரங்களிலும்   மத்திய அரசின் சட்டங்களே முதன்மையானவை. மேலும், மத்திய, மாநில மற்றும் பொது பட்டியலில் இல்லாத விவகாரங்கள் குறித்து மத்திய அரசு சட்டம் இயற்றக்கூடிய நிலை உள்ளது.  அமெரிக்காவில் இவ்வாறு எஞ்சிய பொருள்கள் குறித்து சட்டம் இயற்றும் அதிகாரம் மாநில அரசுக்கு மட்டுமே உள்ளது.

இருப்பினும் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற கருத்தை நோக்கி பயணிப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்று சமீபத்தில் பாரதப் பிரதமர் அவர்கள் பேசியுள்ளதும் மீண்டும் மத்தியில் தற்போதைய ஆளும் கட்சி ஆட்சிக்கு வந்தால்  மாநில அரசுகள் நகராட்சிகள் போன்று ஆகிவிடும் என்று சமீபத்தில் தமிழக முதல்வர் அவர்கள் பேசியுள்ளதும் ஆழமான சிந்தனையை உருவாக்கியுள்ளன.  இது குறித்த விவாதங்கள் மக்களிடையே நடத்தப்பட்டு சரியான முடிவுகள்   மேற்கொள்ளப்பட வேண்டிய தருணம் இதுவாகும்.  மாநில அரசு அமைப்பு முறையே இல்லாத இங்கிலாந்து பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு ஒற்றை ஆட்சி முறை சரியானது வேற்றுமையில் ஒற்றுமை என்ற அடிப்படையில் பல்வேறு கலாச்சாரங்களையும் மொழிகளையும் கொண்டுள்ள இந்தியாவில் கூட்டாட்சி பாராளுமன்ற முறையே சிறந்தது.    இந்திய அரசியலமைப்பு வழங்கிய கூட்டாட்சி தத்துவம் மற்றும் பாராளுமன்ற அமைப்பு முறையை பேணி காக்க வேண்டியது தேசத்தில் உள்ள மத்திய, மாநில ஆளும் கட்சிகள் உட்பட அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களின் கடமையாகும்.

நுகர்வோர் பூங்கா
நுகர்வோர் பூங்கா
நுகர்வோர் பூங்காவின் படைப்பு

தொடர்புடைய கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்