spot_img
May 20, 2024, 4:58 am
spot_img

தமிழக மாணவர்கள் ஆராய்ச்சி அமைப்புகளில் விஞ்ஞானியாக பணியாற்ற இணைவது எப்படி? – இஸ்ரோ விஞ்ஞானி

தமிழக மாணவர்கள் ஆராய்ச்சி அமைப்புகளில் விஞ்ஞானியாக பணியாற்ற இணைவது எப்படி? – இஸ்ரோ விஞ்ஞானி எஸ். கௌரிமணி ராமராஜ் விளக்கம்

கடந்த குடியரசு தினத்தன்று திண்டுக்கல்லில் உள்ள அண்ணாமலையார் மில்ஸ் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி தோற்றுவிக்கப்பட்ட 1962 ஆம் ஆண்டு முதல் பயின்ற முன்னாள் மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான முன்னாள் மாணவிகளும் முன்னாள் மற்றும் இந்நாள் ஆசிரியர்களும்   கலந்து கொண்டனர். இதில் சிறப்பு விருந்தினராக இஸ்ரோ விஞ்ஞானி எஸ். கௌரிமணி ராமராஜ் கலந்து  கொண்டு பேசியதாவது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம், அணுசக்தி ஆய்வு நிறுவனம், அறிவியல் மற்றும் தொழில் துறை ஆய்வு நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு வகையான   மத்திய அரசின் ஆராய்ச்சி அமைப்புகள் மருத்துவம், வேளாண்மை, விண்வெளி, ராணுவம், அணுசக்தி, உயிரியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஆய்வுகளை நடத்தி வருகின்றன.  இந்த அமைப்புகளில் விஞ்ஞானிகளாக இணைந்து தேசத்தின் வளர்ச்சிக்கு பாடுபட தமிழக பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகள், மற்றும் ஆராய்ச்சி பட்டம் பெற்றவர்கள் முன் வர வேண்டும்.

விஞ்ஞானியாக பணிக்கு சேர விரும்புபவர்கள் இந்தியாவில் உள்ள அரசின் ஆராய்ச்சி அமைப்புகளை இணையதளம் மூலம் தகவல்களை திரட்டி அவற்றை பட்டியலிடுங்கள். இவற்றில் தாங்கள் படித்த துறைக்கு ஏற்றவாறு எந்த ஆராய்ச்சி அமைப்புகள் இருக்கின்றன என்பதை பாருங்கள். அவற்றில் எத்தகைய ஆராய்ச்சி பணிகள் தங்களுக்கு உகந்ததாக இருக்கிறது என்பதை கவனியுங்கள். இந்த ஆராய்ச்சி நிறுவனங்களில் விஞ்ஞானிகளுக்கான பணியிடங்களுக்கு இணையதளம் மற்றும் செய்தித்தாள்களில் விளம்பரம் வெளிவருகின்றன. அவற்றை தவறாது கவனித்து விண்ணப்பித்து போட்டி தேர்வுகளுக்கு தயார்படுத்தி வெற்றி பெற்று விஞ்ஞானிகளாக பாடுபட தமிழக மாணவர்கள் முன்வர வேண்டும்.

விண்வெளி திட்டங்களில் இந்தியா உலகில் முதல் ஐந்து இடங்களில் ஒன்றாக விளங்குகிறது.  பல வெளிநாட்டு செயற்கைக்கோள்களை நமது ராக்கெட்டுகள் மூலம் அனுப்பியுள்ளோம். செவ்வாய் கிரகத்திற்கு செயற்கைக்கோள் அனுப்பி சாதனை படைத்தோம். நிலவில் தென் துருவத்தில் உலகிலேயே முதல்   நாடாக நமது விண்கலத்தை இறக்கினோம். சூரியனுக்கான ஆய்வில் நமது விண்கலம் வெற்றி பெற்றுள்ளது. விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப இஸ்ரோவின் ககன்யான் திட்டத்தில் ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இஸ்ரோ விஞ்ஞானிகளாக பணியில் இணைந்திட தொடர்ந்து இஸ்ரோவின் இணையதளத்தில் வெளியிடப்படும் அறிவிப்புகளை கவனித்து  விண்ணப்பம் செய்ய வேண்டும். வாழ்க்கையில் வெற்றி பெற இலக்கை நிர்ணயம் செய்து காலத்தை சரியாக திட்டமிட்டு பயன்படுத்தி விடாமுயற்சியும் கடின உழைப்பையும் செய்தால் மாணவர்கள் உறுதியாக நல்ல நிலையை அடையலாம் இதற்கு தமிழ் வழி கல்வி ஒரு தடையல்ல.  

       S.Gowrimani ,Space Scientist ISRO

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே உள்ள கணக்கன்பட்டி என்ற கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்த எஸ். கௌரிமணி ராமராஜ் சொந்த   ஊரிலேயே ஊராட்சி ஒன்றிய பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரையிலும் அருகாமையில்  ஆயக்குடியில் உள்ள ஐடிஓ உயர்நிலைப் பள்ளியில் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலும் திண்டுக்கல்லில் உள்ள அண்ணாமலையார் மில்ஸ் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளையும் தமிழ் வழியில் படித்தவர் ஆவார்.  மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் பிரிவில் பி.இ., பட்டமும் கம்யூனிகேஷன் பிரிவில் எம்.இ., பட்டமும் பெற்றுள்ளார். பணியில் இணைந்த சில ஆண்டுகளில் சிறந்த இளம் விஞ்ஞானி என்ற  விருதை பெற்றுள்ளதோடு சில ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதி உள்ளார்.

இவர் கடந்த 23 ஆண்டுகளாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் செயற்கைக்கோள் மையமான பெங்களூரில் விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார்.  சந்திரியான் 2, சந்திரியான் 3 ஆகிய  செயற்கைக்கோள்கள் (satellites) உட்பட சுமார் 27 செயற்கைக்கோள்  திட்டங்களில் பணியாற்றியுள்ளார். குறிப்பாக சந்திரியான் 3 திட்டத்தின் ஆர்பிட்டர், லேண்டர் மற்றும்  ரோவர் ஆகியவற்றை இயக்க   தரை கட்டுப்பாட்டு மையத்திலிருந்து கட்டளைகளை பிறப்பிக்கும் டெலிகமாண்ட் சாப்ட்வேர் வடிவமைப்பாளராக செயல்பட்டுள்ளார்.

வலை பக்கங்கள்/செய்தித்தாள்கள்

க.கதிர்வேல்
க.கதிர்வேல்
க.கதிர்வேல், ஊடகவியலார்

தொடர்புடைய கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்