அரசியல், தொழில், விவசாயம் உள்ளிட்ட எந்தத் துறையில் வெற்றி பெற்றவர்களின் சரித்திரத்தை படித்துப் பார்க்கும் போது அவர்கள் வெற்றியை பெறுவதற்கு எத்தகைய நடைமுறைகளை கடைப்பிடித்தார்கள் என்பதை காண வேண்டியது அவசியமாகும்.
இலக்கு
தங்களது இலக்கு (goal) என்ன? என்பதை முடிவு செய்வது வெற்றிக்கு முதல் படியாகும். வாழ்க்கையில் தாம் எதை அடைய வேண்டும்? என்ற நோக்கத்தை முடிவு செய்யாமல் வெற்றியாளராக ஒருபோதும் மாறிவிட முடியாது. தாம் எந்த இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும்? என முடிவு செய்யும் நேரத்தில் அந்த இலக்கை அடைய வாய்ப்புகள் குறையுமானால் எத்தகைய மாற்று இலக்கு நமக்கு சிறப்பான வெற்றியைத் தரும்? என்பதை ஆய்வு செய்து ஓரிரு மாற்று இலக்குகளையும் (alternative goals) முடிவு செய்து கொள்வது அவசியமானதாகும்.
திட்டமிடல்
நாம் முடிவு செய்யும் இலக்கை அடைவதற்கு தகுந்த திட்டத்தை (planning) தயாரிப்பது மிக அவசியமானது. எந்த ஒரு திட்டமும் இன்றி இலக்கை நோக்கி பயணிக்க இயலாது. ஒரு சிலர் எந்த இலக்கும் இல்லாமல் எந்தத் திட்டமும் இல்லாமல் வெற்றி பெற்று இருப்பார்கள் எனில் அத்தகைய வெற்றி அவர்களது அதிர்ஷ்டம் காரணமாகவே இருக்கும். ஆனால், அந்த வெற்றியை தொடர்ந்து அவர்களால் தக்கவைத்துக் கொள்ள முடியாது. உங்களது திட்டத்தில் எவ்வாறு பயணிப்பது? என்பதற்கான கொள்கைகளை நிர்ணயம் செய்து கொள்ள வேண்டும். எந்த ஒரு சூழ்நிலையிலும் கொள்கையை விட்டுக் கொடுக்கக் கூடாது. உங்கள் கொள்கைகள் மீதான விமர்சனங்களை கண்டு கொள்ளாதீர்கள். தீய நோக்கம் உம்மிடம் இல்லை எனில் பிறரிடம் விம்மி அழ வேண்டிய அவசியம் இல்லை. எதிரி இகழ்கிறான் என்றால் நீங்கள் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
கடின உழைப்பு
கடின உழைப்புக்கு (hard work) ஈடு இணை ஏதுமில்லை என்பது மறுக்க முடியாத உண்மையாகும். இலக்கை முடிவு செய்து திட்டத்தை தயாரித்து விட்டால் வெற்றி தானாக வந்து விடுவதில்லை. திட்டத்தை நிறைவேற்ற கடின உழைப்பு மிக அவசியமானது. வேலை செய்வது என்பது அலுவலக நேரத்தில் மட்டும்தான் என்ற கொள்கையை கொண்டிருந்தால் சாதனை என்பதை மறந்து விட வேண்டியதுதான். ஒவ்வொரு நேரமும் வெற்றியாளருக்கு பணி நேரம்தான் (working time). ஞாயிற்றுக்கிழமை நான் எந்த வேலையும் செய்ய மாட்டேன். இன்று பொங்கல் திருவிழா – இந்த நாளில் விழா கொண்டாட்டங்களை தவிர வேறு எதிலும் பங்கெடுக்க மாட்டேன் என்பது போன்ற கொள்கைகளை விடாமல் கைபிடித்து கொண்டு இருந்தால் வெற்றி நம் கையை விட்டுப் போய்விடும். வெற்றியாளர்களுக்கு விடுமுறை கிடையாது. விடுமுறை நாட்களிலும் கொண்டாட்ட நாட்களிலும் வாய்ப்பு இருந்தால் அவற்றில் பங்கெடுக்கலாம். இல்லாவிட்டால் வெற்றியை நோக்கிய பயணத்துக்காக விடுமுறைகளை தியாகம் செய்ய வேண்டும். முற்றிலும் தியாகம் செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. சரியான திட்டமிடலின் மூலம் விடுமுறை நாட்களை கையாள வேண்டும். சுருங்கக் கூறின், இலக்கை நோக்கிய திட்டமிடலை கடின உழைப்பு மட்டுமே நிறைவேற்றித் தரும் ஆயுதமாகும்.
நேர மேலாண்மை
திட்டத்தை நிறைவேற்றுவதற்கு நேரத்தை பயன்படுத்தும் விதம் மிக முக்கியமானது. நேரத்தை நிர்வாகம் (time management) செய்யும் பணியில் வெற்றி பெற்றால் மட்டுமே உங்களது திட்டத்தை உங்களால் நிறைவேற்றி இலக்கை அடைய முடியும். ஒவ்வொரு நாளும் இரவு உறங்கச் செல்லும் முன் நாளைய வேலை திட்டத்தை தயார் செய்யுங்கள். ஒவ்வொரு வாரமும் இறுதி நாளில் அடுத்த வாரத்தில் வேலை திட்டத்தை தயார் செய்யுங்கள். ஒவ்வொரு மாதமும் அடுத்த மாதத்தின் வேலை திட்டத்தை (time table) தயார் செய்யுங்கள். தயாரித்த வேலை திட்டத்தை தவறாது அமல்படுத்துங்கள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு மாதமும் வேலை திட்டத்தை தயாரிப்பதற்கு முன்பாக இன்றைய நாளில், இந்த வாரத்தில், இந்த மாதத்தில் தயாரிக்கப்பட்ட வேலை திட்டத்தை முழுமையாக செய்திருக்கிறோமா? என்ற ஆய்வை (review) செய்யுங்கள். வேலைத்திட்டத்தை அமல்படுத்துவதில் குறைபாடுகள் இருந்தாலும் பிரச்சனைகள் இருந்தாலும் அதனை சரி செய்து கொள்ளுங்கள்.
விடாமுயற்சி
வாழ்க்கை நடத்துவதே பிரச்சினையாக இருக்கிறது – இதில் எங்கே வெற்றியை நோக்கிய பயணம்? இதில் எங்கே திட்டமிடுதல்? என்ற எதிர்மறை எண்ணங்களை தூக்கி எறியுங்கள். ஒருவேளை சோற்றுக்கும் உடுத்த உடையும் இல்லாமல் இருந்த ஏழை குடும்பங்களில் பிறந்த பலர் உலகின் மிகப்பெரிய செல்வந்தர்களாகவும் அரசியல் தலைவர்களாகவும் மாறி உள்ளார்கள் என்பதை மறந்து விடக்கூடாது. நான் சராசரி மனிதனாக இருப்பதற்கு பிறக்கவில்லை (not born to settle average) என்ற மனநிலையை வளர்த்துக் கொண்டால் தான் வெற்றியை எட்டிப் பிடிக்க முடியும். இவ்வாறு வெற்றிக்கோட்டை தொட விடாமுயற்சி மிக அவசியமானது. எந்த ஒரு சூழ்நிலையிலும் தோல்வியால் துவண்டு விடக்கூடாது. முயற்சி நம்மை கைவிடலாம். நாம் முயற்சியை கைவிடக்கூடாது. விடாமுயற்சிக்கு தன்னம்பிக்கை மிகவும் முக்கியமானதாகும். தோல்வி ஏற்படும் போதெல்லாம் பீனிக்ஸ் பறவை போல மீண்டும் உயர உயர பரப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
ஆயிரம் மைல்
வாழ்க்கை போராட்டத்தில் வாழ்க்கையை நடத்துவது பெரிய பிரச்சினையாக இருந்த நிலையில் தற்போதுதான் ஓரளவுக்கு வாழ்க்கையில் பிடிப்பை (settled) எட்டி உள்ளேன். தற்போது எனக்கு வயதாகிவிட்டது. இனி எங்கே வெற்றிக்கான பயணத்தை தொடங்குவது என்ற மனநிலையை கைவிடுங்கள். ஆயிரம் மைல் ஓட்டம் கூட ஒரு அடியில் தான் தொடங்குகிறது. என்பதை மறந்து விடாதீர்கள். எத்தனையோ தலைவர்கள், எத்தனையோ செல்வந்தர்கள், எத்தனையோ வெற்றியாளர்கள் 50 வயதுகளை கடந்த பின்னர்தான் இலக்கை நிர்ணயம் செய்து திட்டமிட்டு உழைத்து வெற்றியை எட்டிப் பிடித்துள்ளார்கள் என்பது சரித்திரம் கூறும் உண்மையாகும். அனைவருக்கும் இளமையிலேயே வாய்ப்பு கிடைத்து விடாது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். வாய்ப்பிருக்கும் இளைஞர்கள் இளமையிலேயே இலக்கை நிர்ணயித்து பயணித்தால் மிகப்பெரிய வெற்றியை விரைவில் அடைவார்கள் என்பதில் மாற்றம் இல்லை.
சவால்கள்
முடியாதது ஒன்றுமே இல்லையே! எளிதல்லவே என்றுமே சாதனை! இலக்கை அடைவதில் ஆயிரம் பிரச்சனைகள் வந்தாலும் அவற்றை சமாளிக்க கற்றுக் கொள்ளுங்கள். மக்கள் உறவியலின் (public relationship) முக்கியத்துவத்தை மனதில் கொள்ளுங்கள். உங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குபவர்களை உடன் வைத்துக் கொள்ளுங்கள். எதிர்மறை கருத்துக்களை உங்களிடம் திணிப்பவர்களை ஒதுக்கி வையுங்கள். வெற்றிக்கு உடல் நலமும் மிக முக்கியம் என்பதை மறந்து விடாதீர்கள். வெற்றி பெறும் வரை பைத்தியக்காரன் என்பவர்கள் வெற்றி பெற்றவுடன் சொந்தக்காரன் என்பார்கள் என்பது தானே உலகம்.
வெற்றி
இலக்கு என்பது பணம் சம்பாதிப்பாக இருக்கலாம், சமூக சேவையாக இருக்கலாம், ஆன்மீகமாக இருக்கலாம். ஆனால், எந்த துறையில் இலக்கை நிர்ணயித்தாலும் அதில் வெற்றி பெற தொடர்ந்து பணியாற்றுங்கள்! வெற்றி பெறுங்கள்! வாழ்த்துக்கள்! (இளமையில் வாழ்க்கையில் மிகுந்த போராட்டங்களை சந்தித்து ஓரளவுக்கு வெற்றி பெற்று 50 வயதை கடந்த பின்னர் இந்த உலக அமைதிக்காக தம்மால் இயன்ற பங்களிப்பை வழங்க வேண்டும் என்ற இலக்கை நிர்ணயம் செய்து பயணித்துக் கொண்டிருக்கும் பெயர் வெளியிட விரும்பாத ஒருவரின் எழுத்துக்கள் இவை)