spot_img
July 27, 2024, 1:08 pm
spot_img

பிரபல கார் உற்பத்தி நிறுவனம் அங்கீகாரம் பெறாத கார்களை விற்பனை செய்ய தடை

கோயம்புத்தூர் வடவள்ளியில் வசித்து வருபவர் அப்துல்லா மகன் சாகுல் ஹமீது (42). கடந்த 2022 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் பிரபல கார் தயாரிப்பு நிறுவனம் (மாருதி சுசுகி) மற்றும் விற்பனை நிறுவனம் (ஆதி கார் பிரைவேட் லிமிடெட்) மீது வழக்கு தாக்கல் செய்திருந்தார்.  அதில் அவர் தெரிவித்துள்ளதாவது. ஓட்டல் தொழில் செய்து வந்ததாகவும் கொரோனா பாதிப்பால் ஹோட்டல் தொழிலை விட்டு விட்டு கார் ஒன்று வாங்கி வாடகைக்கு ஓட்டலாம் என முடிவு செய்து பிரபலமான கார் உற்பத்தி நிறுவனத்தின் கோயம்புத்தூர் விநியோகஸ்தரை அணுகினேன். கடந்த 2022 ஜூன் முதல் வாரத்தில் விநியோகஸ்தரிடம் ரூ  6,98,000/- ஐ செலுத்தி காரை முன்பதிவு செய்தேன். பணம் செலுத்திய ஓரிரு நாளில் காரை டெலிவரி தருவதாக சொன்ன விநியோகஸ்தர்   நான்கு மாதங்கள்   கழித்துதான்   கார் வழங்கப்பட்டது.   இதனால் ஏற்பட்ட சிரமங்களுக்காக இழப்பீடாக ரூபாய் 20 லட்சம் வழங்கவும் உத்தரவு பிறப்பிக்குமாறு   புகாரில் நீதிமன்றத்தை  சாகுல் ஹமீது கேட்டிருந்தார். விரைவான விசாரணைக்காக இந்த வழக்கு கடந்த பிப்ரவரி மாதம் கோயம்புத்தூரில் இருந்து நாமக்கல்லுக்கு மாற்றம் செய்யப்பட்டது. 

சாகுல் ஹமீது முன்பதிவு செய்திருந்த வாகனத்திற்கு மாநில போக்குவரத்து அமைப்பின் (state transport authority) டிசைன் அங்கீகாரம் (design approval) கிடைக்காததால் காரை வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. வாகனத்தை பதிவு செய்வதில் காலதாமதம் ஏற்பட்டால் காரின் விற்பனையாளர் பொறுப்பல்ல என்ற நிபந்தனையை ஏற்று முன்பதிவு செய்தவர் கையொப்பம் செய்துள்ளார். இதனால் காரை வழங்குவதில் ஏற்பட்ட கால தாமதத்திற்கு தாங்கள் பொறுப்பல்ல என்று கார் விநியோகஸ்தர் தரப்பில் வாதிடப்பட்டது.

கார்களை தாங்கள் உற்பத்தி செய்து விநியோகஸ்தர்களுக்கு வழங்கி விடுகிறோம். தங்களுக்கு காரை முன்பதிவு செய்தவர் வாடிக்கையாளர்   அல்ல.   காரின் விநியோகஸ்தர்தான் விற்பனை தொடர்பான பிரச்சனைகளுக்கு பொறுப்பானவர்.  தங்கள் தரப்பில் எவ்வித குறைபாடும் இல்லை என கார் உற்பத்தி நிறுவனம் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. 

வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் 07-05-2024-ல் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ் தலைமையிலான அமர்வு வழங்கிய தீர்ப்பில் மாநில போக்குவரத்து அமைப்பின் அங்கீகாரத்தை பெறாமல் காரை விற்பனை செய்ய விநியோகஸ்தருக்கு முன்பதிவு செய்யும் அதிகாரத்தை கார் உற்பத்தியாளர் வழங்கியதும் அங்கீகாரம் இல்லாத  காருக்கு முழு தொகையை விநியோகஸ்தர் பெற்றுக் கொண்டதும்   பணத்தைப் பெற்றுக் கொண்டு நான்கு மாதம் காலதாமதம் செய்து வழங்கியதும் நியாயமற்ற வர்த்தக நடைமுறை மற்றும் சேவை குறைபாடு என்று கூறப்பட்டுள்ளது.

நியாயமற்ற வர்த்தக நடைமுறை மற்றும் சேவை குறைபாட்டால் பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு இழப்பீடாக கார் உற்பத்தி நிறுவனம் ரூபாய் 2 லட்சமும் காரின் விநியோகஸ்தர் ரூபாய் 2 லட்சமும் நான்கு வார காலத்திற்குள் வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. வழக்கில் சம்பந்தப்பட்ட கார் உற்பத்தி நிறுவனம் தயாரிக்கும் எந்த ஒரு காருக்கும் டிசைன் அங்கீகாரத்தை (design approval) மாநில போக்குவரத்து அமைப்பில் (road transport authority) பெறாமல் முன்பதிவு செய்ய தடை விதித்து நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சாஜ். ம
சாஜ். ம
சாஜ். ம, வழக்கறிஞர்/ சட்டக் கல்லூரி விரிவுரையாளர்

தொடர்புடைய கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்