இன்று காலை நுகர்வோர் இதழ் அலுவலகத்திற்கு நுகர்வோர் சாமி வருகை புரிந்தார். அவருக்கு வணக்கம் செலுத்தி விட்டு “நுகர்வோர் வழக்குகளை விசாரிக்கும் நுகர்வோர் ஆணையங்களை நீதித்துறைக்கு கீழ் கொண்டு வருவது போன்ற உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பித்து இருக்கிறதே, சாமி? என்றேன் நான். “அதை கடைசியாக பேசுவோம். இந்த வாரத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள நுகர்வோர் நீதிமன்றங்கள் குறித்த இரண்டு தீர்ப்புகளிலும் உள்ள மற்ற விவரங்களை விவாதிப்போம்” என்றார் நுகர்வோர் சாமி.
“நுகர்வோர் நீதிமன்றம் என அழைக்கப்படும் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தலைவராக பணியாற்றுபவருக்கு மூத்த மாவட்ட நீதிபதிக்கான சம்பளம் (district judge super time scale) வழங்கப்பட வேண்டும் என்றும் இந்த ஆணையங்களில் உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு மாநில அரசின் துணைச் செயலாளருக்கான சம்பள விகிதம் (deputy secretary scale) வழங்கப்பட வேண்டும் என்றும் 2019 நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் தெரிவிக்கிறது. சட்டம் தெரிவித்துள்ளவாறு இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான சம்பளம் வழங்கப்படுவதில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் கடந்த திங்கட்கிழமை உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது” என்றேன் நான்.
“உச்ச நீதிமன்றம் தற்போது வழங்கியுள்ள தீர்ப்பில் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றங்களின் தலைவர்களுக்கு மூத்த மாவட்ட நீதிபதிகளுக்கு வழங்கப்படுவது போன்ற சம்பள விகிதமானது நாடு முழுவதும் ஒரே மாதிரியாக வழங்கப்பட வேண்டும் என்றும் உறுப்பினர்களுக்கு தேர்வு நிலை மாவட்ட நீதிபதிகளுக்கான சம்பள விகிதம் (district judge selection grade scale) நாடு முழுவதும் ஒரே மாதிரியாக வழங்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. ஆனால், தீர்ப்பின் முழுமையான நகல் இன்னும் உச்ச நீதிமன்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படவில்லை” என்றார் நுகர்வோர் சாமி. இந்த தீர்ப்பில் ஏதாவது குழப்பம் உள்ளதா? சாமி” என்றேன் நான்.
“நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் ஆனது மாநில அரசின் துணைச் செயலாளர் சம்பள விகிதம் என சொல்லப்பட்டுள்ள நிலையில் தேர்வு நிலை மாவட்ட நீதிபதிகளுக்கான சம்பள விகிதம் என்று உறுப்பினர்களுக்கான சம்பளத்தை தற்போதைய சம்பளத்தை விட இரண்டு மடங்குக்கு மேல் அதிகமான சம்பளமாக மாற்றுவது சட்டத்தின் ஆட்சிக்கு எதிரானது என்று மத்திய அரசு வட்டாரங்கள் கருதுகின்றன. இதில் மத்திய அரசு மூன்று நிலைப்பாடுகளை மேற்கொள்ள வாய்ப்புகள் உள்ளது. முதலாவதாக, மாவட்ட நுகர்வோர் நீதிமன்றங்களின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் சம்பளங்கள் தொடர்பான தீர்ப்பை எதிர்த்து மறு ஆய்வு மனுவை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கலாம். இரண்டாவதாக, நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் சம்பள விகிதங்கள் குறித்த திருத்தத்தை பாராளுமன்றத்தில் மத்திய அரசு நிறைவேற்றலாம். மூன்றாவதாக இந்த தீர்ப்பு குறித்து எவ்வித மேல் நடவடிக்கையும் மத்திய அரசு எடுக்காமல் விட்டு விடலாம். ஏனென்றால், மாவட்ட நுகர்வோர் நீதிமன்றங்களின் தலைவர்களுக்கும் உறுப்பினர்களுக்கும் சம்பளம் வழங்குவது மாநில அரசு தானே? என்ற எண்ணத்தில்” என்றார் நுகர்வோர் சாமி.
“இந்த தீர்ப்பில் 2020 ஆம் ஆண்டு முதல் நியமனம் செய்யப்பட்டுள்ள மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு புதிய சம்பள விகிதம் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை எடுத்துக் கொண்டால் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றங்களில் பணியாற்றும் உறுப்பினர்களுக்கு தோராயமாக ரூபாய் ஒரு லட்சம் அளவில் சம்பளம் வழங்கப்படுகிறது. தற்போதைய உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மாதம் ஒன்றுக்கு தோராயமாக சுமார் ரூபாய் 2 லட்சம் இரண்டு லட்சத்துக்கு மேல் சம்பளம் வழங்க வேண்டும். மேலும், தற்போதுள்ள உறுப்பினர்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக பணியில் உள்ளதால் அவர்களுக்கு நிலுவைத் தொகையாக தோராயமாக 40 லட்சத்துக்கு மேல் ஒவ்வொருவருக்கும் வழங்க வேண்டும். இதைப் போலவே மாவட்ட ஆணையத் தலைவர்களுக்கும் சம்பள பாக்கி வழங்க வேண்டும்” என்றேன் நான்.
“மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உள்ளிட்ட நுகர்வோர் ஆணையங்களின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான நியமனம் குறித்த தீர்ப்பை கடந்த புதன்கிழமை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது. மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தலைவர் (president of state commission), மாநில ஆணையத்தில் உள்ள நீதி சார்ந்த உறுப்பினர் (judicial member) மற்றும் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையங்களின் தலைவர்களை (president of district commission) தேர்வு செய்ய போட்டித் தேர்வு நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்றும் மாநில ஆணையத்தின் நீதி சாராத உறுப்பினர் மற்றும் மாவட்ட நுகர்வோர் ஆணையங்களின் உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு மாநிலங்களில் உள்ள பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (public service commission) மூலம் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.” என்றார் நுகர்வோர் சாமி.
“மாநில ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், மாவட்ட ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஆகிய பதவிகளுக்கு உரிய நபர்களை தேர்வு செய்ய அமைக்கப்படும் தேர்வு குழுவில் (selection committee) உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் தலைவராகவும் மற்றொரு உயர்நீதிமன்ற நீதிபதி உறுப்பினராகவும் மாநில அரசால் நியமிக்கப்படும் ஒருவர் மற்றொரு உறுப்பினராகவும் இருக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு வாக்குரிமை (voting rights) உள்ளது என்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளர் உறுப்பினராக சேர்க்கப்பட்டாலும் அவருக்கு தேர்வு குழுவில் வாக்குரிமை இருக்கக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தெரிவிக்கிறது” என்றேன் நான்.
“நுகர்வோர் ஆணைய தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான பதவிக்காலம் நான்கு ஆண்டுகள் என்றும் இரண்டாவது முறை அவர்களுக்கு மறு நியமனம் செய்யலாம் என்றும் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது தற்போது நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களாக இருப்பவர்கள் எவ்வித தேர்வும் இல்லாமல் மீண்டும் மறு நியமனம் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வந்தது. தற்போது தலைவர் மற்றும் உறுப்பினர்களாக பணியாற்றி வருபவர்கள் நான்காண்டு காலம் முடிந்தவுடன் பணிக்காலம் நிறைவுறும் அல்லது புதியவர்கள் நியமனம் செய்யப்படும் வரை என்று உச்ச நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. தற்போதைய உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தலைவர் (president of state commission), மாநில ஆணையத்தில் உள்ள நீதி சார்ந்த உறுப்பினர் (judicial member) மற்றும் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையங்களின் தலைவர்களை மீண்டும் நியமனம் செய்ய போட்டித் தேர்வு நடத்த வேண்டிய அவசியமில்லை. ஆனால், அதே சமயத்தில் நான்காண்டுகள் பதவிக்காலத்தை நிறைவு செய்து ஓய்வு பெறும் மாநில நுகர்வோர் ஆணையத்தின் நீதி சாரா உறுப்பினர் மற்றும் மாவட்ட ஆணையத்தின் உறுப்பினர்கள் மீண்டும் போட்டி தேர்வு எழுத வேண்டும்” என்றார் நுகர்வோர் சாமி.
“மாவட்ட நுகர்வோர் ஆணையங்களின் தலைவராக ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி அல்லது பணியில் உள்ள மாவட்ட நீதிபதியை (sitting or retired judges) மட்டுமே நியமனம் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தீர்ப்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நான்கு மாதத்திற்குள் நுகர்வோர் ஆணையங்களின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிப்பதற்கான புதிய விதிமுறைகளை உருவாக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதிய விதிகள் நடைமுறைக்கு வந்ததிலிருந்து நான்கு மாதத்திற்குள் புதிய விதிகளின்படி காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்துள்ளது. மாவட்ட நுகர்வோர் ஆணையங்களின் தலைவராக ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி அல்லது பணியில் உள்ள மாவட்ட நீதிபதியை (sitting or retired judges) மட்டுமே நியமனம் செய்ய வேண்டும் என்ற அம்சம் புதிய விதிகளில் இடம் பெற்றால் வழக்கறிஞர்களாக இருந்து மாவட்ட நுகர்வோர் ஆணைய தலைவர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளவர்களுக்கு மறு நியமனம் கிடைக்குமா? என்பது ஒரு சட்ட கேள்வியாகும். இந்தப் பிரச்சினையை தவிர்க்க உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி புதிய விதிகளை உருவாக்குவதற்கு முன்னதாக நுகர்வோர் பாதுகாப்பு துறையின் செயலாளருக்கு தற்போது மாவட்ட நுகர்வோர் ஆணைய தலைவர்களாக உள்ளவர்கள் தகுந்த எழுத்து மூலமாக கோரிக்கையை முன்வைக்க வேண்டியது அவசியமாகும்” என்றேன் நான்.
“மாவட்டங்களில் மக்களால் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் என அழைக்கப்பட்ட போதிலும் அதன் பெயர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் என்றும் மாநில அளவில் மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் என்றும் தேசிய அளவில் தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் என்றும் சட்டத்தால் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதனை நுகர்வோர் தீர்ப்பாயம் அல்லது நுகர்வோர் நீதிமன்றம் என்று பெயர் மாற்றம் செய்வதற்கான ஆலோசனையை உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு வழங்கி உள்ளது. இவை நீதித்துறையின் கீழ் இல்லாமல் அரசின் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. நுகர்வோர் ஆணையங்களுக்கு நிரந்தர உறுப்பினர்களை நியமனம் செய்வதோடு நீதித்துறையில் பணியாற்றும் நீதிபதிகளை நுகர்வோர் ஆணைய தலைவர்களாக நியமிக்கும் வகையில் சட்ட திருத்தத்தை கொண்டு வர ஆலோசிக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை வழங்கி உள்ளது. இந்த ஆலோசனைகள் குறித்த கருத்தை மத்திய அரசு மூன்று மாதங்களுக்குள் உச்ச நீதிமன்றத்திற்கு தெரிவிக்குமாறு உச்ச நீதிமன்ற உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆலோசனைகள் நிறைவேற்றப்பட்டால் நுகர்வோர் நீதிமன்றங்கள் நீதித்துறையின் கீழ் தன்னிச்சையான அமைப்பாக மாறுவதோடு நிரந்தர தலைவர்களையும் உறுப்பினர்களையும் நுகர்வோர் நீதிமன்றங்கள் கொண்டிருக்கும் ” என தெரிவித்து விட்டு கிளம்பினார் நுகர்வோர் சாமி.
நுகர்வோர் பூங்கா (The Consumer Park) கருத்து: நுகர்வோர் நீதிமன்றங்களை நீதித்துறையின் கீழ் கொண்டு செல்லும்போது நுகர்வோர் நீதிமன்றங்கள் மீதான அரசின் கட்டுப்பாடு விலகிவிடும் என்பதால் உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனைகளை மத்திய அரசு ஏற்குமா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். மத்திய அரசு ஒப்புக் கொண்டால் உரிய சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்.