spot_img
October 6, 2024, 10:40 am
spot_img

மருத்துவர்களை நெறிப்படுத்தும் தேசிய மருத்துவ ஆணையம்

இந்திய மருத்துவக் கவுன்சில் (MCI) என்பது இந்தியாவில் மருத்துவக் கல்வி மற்றும் மருத்துவத் தகுதிகளுக்கான அங்கீகாரம் ஆகியவற்றின் உயர் தரத்தை நிறுவி பராமரிக்கும் ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும். இது இந்திய மருத்துவ கவுன்சில் சட்டம், 1933 -ன் கீழ் 1934 -ல் நிறுவப்பட்டது. பாராளுமன்றத்தில் தேசிய மருத்துவ ஆணையங்கள் சட்டம் 2019 இயற்றப்பட்ட பின்னர் இந்த அமைப்பானது கலைக்கப்பட்டு, அதற்குப் பதிலாக கடந்த 2020 செப்டம்பரில் தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கப்பட்டது. https://www.nmc.org.in/ என்ற இணையதளத்தில் இந்த ஆணையம் குறித்த முழு விவரங்களையும் அறிந்து கொள்ள முடியும்.

தரமான மற்றும் எளிதில் அணுகக்கூடிய வகையிலான மருத்துவ கல்வியை வழங்தல், நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் போதுமான மற்றும் உயர்தர மருத்துவ நிபுணர்கள் கிடைப்பதை உறுதி செய்தல், அனைத்து குடிமக்களுக்கும் மருத்துவ நிபுணர்களின் சேவைகளை அணுகக்கூடிய சமமான மற்றும் உலகளாவிய சுகாதாரத்தை மேம்படுத்துதல், மருத்துவ நிறுவனங்களை அவ்வப்போது வெளிப்படையான முறையில்  மதிப்பீடு செய்தல், மருத்துவ சேவைகளின் அனைத்து அம்சங்களிலும் உயர் நெறிமுறை தரங்களை அமல்படுத்துதல் உள்ளிட்டவை இந்திய மருத்துவ ஆணையத்தின் நோக்கங்கள் ஆகும்.

மருத்துவக் கல்வி மற்றும் மருத்துவர்கள் நெறிப்படுத்துவது தொடர்புடைய பல்வேறு பணிகளை இந்த ஆணையம் செய்ய வேண்டும் என்று  வரையறுக்கப்பட்டுள்ளது.  இவ்வாறு இந்த ஆணையத்துக்கு சட்டத்தால் வழங்கப்பட்டுள்ள பணிகளில் “மருத்துவத் தொழிலில்   தர்மத்தை மருத்துவர்கள் கடைபிடிப்பதை உறுதி செய்வதற்கும் மருத்துவர்களால் சிகிச்சை வழங்கும்போது நெறிமுறை நடத்தையை மேம்படுத்துவதற்கும் கொள்கைகள் மற்றும் குறியீடுகளை வகுத்தல்” என்பன   மருத்துவர்கள் அலட்சியமான சிகிச்சையை மக்களுக்கு வழங்கி விடக்கூடாது என்பதை நோக்கமாக கொண்டவையாகும்.

ஒவ்வொரு மாநிலத்திலும் மாநில மருத்துவ கவுன்சில்கள்   மருத்துவர்களை   நெறிமுறைபடுத்தும் பணிகளை கவனிக்கின்றன. மருத்துவர்கள்   மீது மாநில மருத்துவ கவுன்சில் எடுக்கும் நடவடிக்கைகள் மீது தாக்கல் செய்யப்படும் மேல் முறையீடுகளை விசாரிக்கும் அமைப்பாக தேசிய மருத்துவ ஆணையத்தின் ஒரு அங்கமான மருத்துவ பதிவு மற்றும் மருத்துவர்களை நெறிமுறைப்படுத்தும் வாரியம் செயல்படுகிறது.   கடந்த 2023 ஆகஸ்ட் மாதத்தில் பதிவு செய்யப்பட்ட மருத்துவ பயிற்சியாளரின் தொழில்முறை நடத்தை ஒழுங்குமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன. இதனை அமல்படுத்தும் பணிகளையும் இந்த வாரியம் மேற்கொள்கிறது.

நோயாளியின் பரிசோதனை அல்லது சிகிச்சைக்கு முன், ஆலோசனைக் கட்டணம் நோயாளிக்குத் தெரியப்படுத்தப்பட வேண்டும்.  நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கு அல்லது பிற சிகிச்சைகளை செய்வதற்கு எவ்வளவு தோராயமாக செலவு ஏற்படும் என்று மருத்துவர்கள் நோயாளிகளுக்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். பதிவு செய்யப்பட்ட மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நோயாளிகளை சிகிச்சைக்காக வருமாறு கோரக்கூடாது. பதிவுசெய்யப்பட்ட மருத்துவர்கள் நியாயமான மருந்துகளை தெளிவான எழுத்துகளில் எழுதி    தேவையற்ற மருந்துகள் மற்றும் நியாயப்படுத்த முடியாத நிலையான டோஸ் கலவை மாத்திரைகளைத் தவிர்த்து, பொதுவான பெயர்களைப் பயன்படுத்தி மருந்துகளை பரிந்துரைக்க வேண்டும்  என்பன உள்ளிட்ட பல  நெறிமுறைகள் மருத்துவ மருத்துவர்களின் நடத்தை மட்டும் தொழில் ஒழுங்குமுறைகளில் கூறப்பட்டுள்ளது.  https://www.nmc.org.in/rules-regulations/national-medical-commission-registered-medical-practitioner-professional-conduct-regulations-2023-reg/ என்ற இணையதள பக்கத்தில் மருத்துவர்களுக்கான நடத்தை மற்றும் ஒழுங்குமுறைகளின் முழுமையான விவரங்கள் உள்ளன.

மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் மீதான புகார்களை மாநில மருத்துவ  கவுன்சிலில் சமர்ப்பிக்கலாம்.       இவ்வாறு சமர்ப்பிக்கப்படும் புகார்கள் மீது ஆறு மாதங்களுக்குள் மாநில மருத்துவ கவுன்சில்  முடிவு எடுக்க வேண்டும்.  காலதாமதம் ஏற்படும் போது புகார் சமர்ப்பித்தவர் தேசிய மருத்துவ ஆணையத்தை அணுகலாம்.  மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையங்களிலும் அலட்சியமான மருத்துவ சிகிச்சை தொடர்பாக  புகார்களை தாக்கல் செய்யலாம்.  அதே நேரத்தில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை மருத்துவர்கள் மீது முன்வைக்கும் போது புகார் நிரூபிக்கப்படவில்லை என்றால் புகார்   சமர்ப்பித்தவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் வாய்ப்பும் உள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். 

நா.சின்னச்சாமி
நா.சின்னச்சாமி
நா.சின்னச்சாமி, பணி நிறைவுபெற்ற வருவாய்துறை அலுவலர்

தொடர்புடைய கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்