மனிதன் பிறந்தது முதல் இறக்கும் வரை ஏதாவது ஒரு வகையில் நுகர்வோராகவே வாழ்கிறான். இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளாக நுகர்வு கலாச்சாரம் அபரித வளர்ச்சியை பெற்றிருக்கிறது. இதனால் நாட்டின் பொருளாதாரத்திற்கு அவசியமான உற்பத்தி தொழில்கள், சேவை தொழில்கள் மற்றும் விற்பனை மையங்கள் பல மடங்கு பெருகியுள்ளது. உற்பத்தி, சேவை மற்றும் விற்பனை ஆகியவற்றின் வளர்ச்சி தேசத்தின் பொருளாதாரத்திற்கு உதவிகரமாக அமைகிறது. ரயில் தண்டவாளத்தில் ரயில் பாதைக்கு எவ்வாறு இரண்டு தண்டவாளங்கள் இணையாக இருக்க வேண்டிய அவசியம் உள்ளதோ, அதைப்போல தொழில் வளர்ச்சி ரயில் பாதையில் ஒரு தண்டவாளம் என்றால் அதற்கு இணையான தண்டவாளமாக திகழ்வது நுகர்வு கலாச்சாரம் ஆகும்.
உற்பத்தி செய்யப்படும் பொருட்களை வாங்குவதற்கும் இன்சூரன்ஸ், வங்கி போன்ற நிறுவனங்கள் வழங்கும் சேவைகளை பெறுவதற்கும் அடிப்படை ஆதாரமாக திகழ்பவர் நுகர்வோர். நுகர்வோர் இல்லாமல் உற்பத்தி நிறுவனங்களுக்கும் சேவை நிறுவனங்களுக்கும் விற்பனையாளர்களுக்கும் வேலை கிடையாது. புதிய தொழில்களை தொடங்கவும் விற்பனை வியாபாரங்களை அதிகரிக்கவும் பல சலுகைகளை வழங்கும் அரசுகள் அதற்கு இணையாக நுகர்வோர் பாதுகாப்பில் கவனம் செலுத்துகின்றனவா? என்பதை கவனிக்க வேண்டி உள்ளது.
உற்பத்தி மற்றும் சேவை தொழில்களுக்கு முன்னுரிமை அளித்து பொருளாதாரத்தை வளர்க்க உதவுவது அரசுகளின் கடமை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இதற்கு இணையாக நுகர்வோர் சுரண்டப்படாமல், மக்களிடையே நுகர்வோரின் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, நுகர்வோரை பாதுகாப்பதும் அரசின் கடமையாகும். நூறு நுகர்வோர்களுக்கு தாங்கள் பணம் கொடுத்து வாங்கும் பொருளில் அல்லது சேவையில் பிரச்சனை ஏற்படும் போது அதில் தீர்வு காண நான்கு சதவீத நுகர்வோர் மட்டுமே நுகர்வோர் நீதிமன்றங்களை அணுகுகிறார்கள் என்பது சமீபத்திய ஆய்வுகள் காட்டும் செய்தியாகும்.
நூறு நுகர்வோர்களில் நான்கு நுகர்வோர் மட்டுமே பிரச்சனைகளுக்கு தீர்வு காண நுகர்வோர் நீதிமன்றங்களை அணுகுகிறார்கள் என்பதற்கு என்ன காரணங்கள்? என்பது அலசி ஆராயப்பட வேண்டியதாகும். முதலாவதாக, பொதுமக்களிடையே நுகர்வோர் விழிப்புணர்வு போதுமானதாக இல்லை. இரண்டாவதாக, நுகர்வோர் நீதிமன்றங்களை அணுகுவதற்கான ஐயப்பாடுகள் நிலவுகின்றன. மூன்றாவதாக, நுகர்வோர் பிரச்சனைகள் ஏற்படும் போது நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்வதால் சொந்த பணி பாதிக்கப்படும் என்று மக்கள் கருதுகிறார்கள். நான்காவதாக, பெரு நிறுவனங்கள் மீது நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குகளை தாக்கல் செய்ய நேரிட்டால் தாங்கள் மிரட்டப்படுவோமா? என்ற அச்சம் சிலருக்கு உண்டு.
முதலாவதாக, ஒவ்வொருவரிடமும் நுகர்வோர் பாதுகாப்பு ஏற்படுத்த கிராமங்கள் அனைத்திலும் அரசின் சார்பில் நுகர்வோர் பாதுகாப்பு குழுக்கள் ஏற்படுத்துவதோடு நுகர்வோர் விழிப்புணர்வு தகவல் பலகையை ஒவ்வொரு கிராமத்திலும் நிறுவிட வேண்டும். இரண்டாவதாக, நுகர்வோர் நீதிமன்றங்களை அணுகுவதற்கு மக்களுக்கு ஏற்படும் ஐயப்பாடுகளை நீக்கும் வகையில் குற்றங்களால் பாதிக்கப்பட்டவருக்கு எவ்வாறு அரசு வழக்கறிஞர் செயல்படுகிறாரோ அத்தகைய ஒரு அமைப்பை பாதிக்கப்படும் நுகர்வோருக்கு வழங்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
மூன்றாவதாக நுகர்வோர் நீதிமன்றங்களை அணுகும் போது தமக்கு வேலை பாதிக்கப்படும் என்ற நிலை மாற்றப்பட்டு அவர்களுக்கு உதவுவதற்காக மாவட்ட நுகர்வோர் நீதிமன்றங்களில் சிறப்பு சட்ட உதவி அமைப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும். நான்காவதாக பெரு நிறுவனங்கள் மீது நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தால் தங்களுக்கு பாதுகாப்பு உள்ளது என்ற மனநிலையை உருவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகும்.
நூறு நுகர்வோர்களுக்கு பிரச்சனை ஏற்படும் போது குறைந்தபட்சம் 90 நுகர்வோர்கள் தீர்வுக்காக நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகும் நிலை ஏற்படும் போதுதான் நமது நாட்டில் உண்மையான நுகர்வோர் பாதுகாப்பு கலாச்சாரம் ஏற்பட்டுள்ளது என்று கூற இயலும். வேறு வார்த்தைகளில் கூற வேண்டுமெனில் தற்போது முழுமையான நுகர்வோர் பாதுகாப்பு என்பது இல்லை என்றே கூறலாம். முழுமையான நுகர்வோர் பாதுகாப்பை உருவாக்குவது மக்களாட்சி அரசின் அத்தியாவசிய கடமையாகும்.
நுகர்வோர் பாதுகாப்பு என்பது இந்திய அரசியலமைப்பின் பொது பட்டியலில் உள்ள காரணத்தால் மத்திய, மாநில அரசுகள் இரண்டும் நுகர்வோர் பாதுகாப்புக்கான துறைகளை கொண்டுள்ளன. மத்திய, மாநில அரசுகளின் நுகர்வோர் பாதுகாப்பு துறைகள் மக்களின் நுகர்வோர் பாதுகாப்பு கலாச்சாரத்தை மேம்படுத்த உடனடியாக நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டும்.
முதல் கட்டமாக, ஒவ்வொரு மாநிலத்திலும் மாநில நுகர்வோர் கல்வி ஆய்வு மற்றும் விழிப்புணர்வு மேம்பாட்டுக்கான கல்வி மையத்தை (Institute of Consumer Education, Research and Awareness Development) மத்திய மாநில அரசுகள் இணைந்து உருவாக்க வேண்டும் தமிழக அரசு இந்தியாவிற்கு முன்னோடியாக தமிழகத்தில் இத்தகைய கல்வி மையத்தை உடனடியாக உருவாக்க வேண்டும் என்று நுகர்வோர் ஆர்வலர்கள் விரும்புகின்றனர் நுகர்வோர் பாதுகாப்பை கலாச்சாரமாக வளர்ப்போம் நுகர்வோரை பாதுகாப்போம்.
தொடர்புடைய கட்டுரைகளைப் படிக்க: