தேசிய அளவில் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில், மாநில அளவில் மாநில நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் மற்றும் மாவட்ட அளவில் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் மூன்று வகையான நுகர்வோர் பாதுகாப்புக்கான ஆலோசனை அமைப்புகள் அமைக்கப்பட்டு செயல்பட வேண்டும் என நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் (2019) தெரிவிக்கிறது. ஆனால், பல மாநிலங்களில் இன்னும் மாநில நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில்களும் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில்களும் அமைக்கப்படவில்லை.
மத்திய அரசின் சார்பில் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சிலுக்கான விதிகள் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால், முழுமையான குழு நியமனம் செய்யப்பட்டுள்ளதா? என்பது தெரியவில்லை. தமிழகத்தில் மாநில மற்றும் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில்கள் கடந்த 2019 ஆம் ஆண்டு சட்டம் வந்தது முதல் அமைக்கப்படவில்லை. அதற்கான விதிகளும் உருவாக்கப்படவில்லை.
இதுகுறித்து அரியலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் டாக்டர் வீ. ராமராஜ் தலைமையிலான அமர்வில் நடைபெற்ற ஒரு வழக்கில் (நுகர்வோர் பல்வகை மனு எண்: 39/2022- நுகர்வோர் புகார் தாக்கல் வரிசை எண்: 53/2022) கூறப்பட்டிருப்பதாவது. நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தில் நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில்களை மத்திய, மாநில அரசுகள் அமைக்க கால நிர்ணயம் எதுவும் செய்யப்படவில்லை என்றாலும் இவற்றை அமைப்பது மாநில அரசின் கட்டாய பணியாகும். இத்தகைய ஆலோசனை அமைப்புகள் மூலம் நுகர்வோர் பாதுகாப்பு வலுப்படுத்தப்படும் என்பதில் ஐயமில்லை. இந்த கவுன்சில்களை அமைக்கவும் உறுப்பினர்களை நியமனம் செய்யவும் உத்தரவிடும் அதிகாரத்தை நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் நுகர்வோர் நீதிமன்றங்களுக்கு வழங்கவில்லை. இந்த கவுன்சில்களை அமைக்காவிட்டால் அவற்றை அமைக்க கோரி உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்ய வேண்டும்.
மத்திய, மாநில, மாவட்ட அளவிலான நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில்களை மத்திய அரசும் மாநில அரசும் அமைக்க தவறும் போதும் இந்த கவுன்சில்களில் உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிந்தவுடன் புதிய உறுப்பினர்களை நியமிக்காமல் அரசுகள் காலம் தாழ்த்தி வரும்போதும் இது குறித்த புகார்களை தேசிய, மாநில, மாவட்ட நுகர்வோர் நீதிமன்றங்கள் விசாரித்து அரசுக்கு தக்க ஆணையிடும் அதிகாரத்தை வழங்கும் வகையில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் திருத்தப்பட வேண்டும்.
மாவட்டங்களில் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி அளவிலான நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில்களும் அரசின் சார்பில் அமைக்கப்பட்டு நுகர்வோர் பாதுகாப்புக்கான நடவடிக்கையில் மேற்கொள்ளப்படும் வகையில் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும். மாநில, மாவட்ட, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி அளவிலான நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில்கள் ஆலோசனை அமைப்புகளாக செயல்பட்டாலும் அதன் தீர்மானங்கள் மூலம் பொருளை விற்பனை செய்பவர்களுக்கும் சேவையை வழங்குபவர்களுக்கும் நுகர்வோரை பாதுகாக்கும் வகையிலான அறிவுறுத்தல்கள் அவ்வப்போது வழங்கப்பட வேண்டும்.
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் மூலம் உருவாக்கம் பெற்றுள்ள மத்திய, மாநில, மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில்கள் சிறப்பாக செயல்படுவதன் மூலமும் சட்ட திருத்தத்தின் மூலம் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி அளவிலான நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில்களை அமைப்பதன் மூலமும் நுகர்வோர் உரிமைகள் வலுப்படுத்தப்படும் என்பதில் ஐயமில்லை.