1986 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் நீக்கப்பட்டு அதற்கு மாற்றாக நுகர்வோர் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் கடந்த 2019 ஆம் ஆண்டில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் இந்திய பாராளுமன்றத்தில் இயற்றப்பட்டு கடந்த 2020 ஜூலை மாதம் முதல் அமலில் உள்ளது.
இந்தச் சட்டம் நுகர்வோர்களின் உரிமைகளையும் நலனையும் பாதுகாக்க ஆலோசனை அமைப்புகளாக (advisory body) நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில்கள், நெறிப்படுத்தும் அமைப்பாக மத்திய நுகர்வோர் பாதுகாப்பு அதிகார அமைப்பு ஆணையம் (regulatory body), நுகர்வோர் புகார்களை விசாரித்து தகுந்த தீர்ப்புகளை வழங்கும் அமைப்புகளாக நுகர்வோர் நீதிமன்றம் என்று மக்களால் அழைக்கப்படும் நுகர்வோர் குறைதீர் ஆணையங்கள் (adjudicatory body) ஆகிய மூன்று வகையான அமைப்புகளை உருவாக்கியுள்ளது.
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டப்படி தேசிய அளவில் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில், மாநில அளவில் மாநில நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் மற்றும் மாவட்ட அளவில் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் மூன்று வகையான நுகர்வோர் பாதுகாப்புக்கான ஆலோசனை அமைப்புகள் அமைக்கப்பட்டு செயல்பட வேண்டும். நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கவும் மேம்படுத்துவோம் தேவையான ஆலோசனைகளை வழங்குவது இந்த அமைப்புகளின் நோக்கமாகும்.
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டப்படி மத்திய நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சிலின் தலைவராக நுகர்வோர் விவகாரங்களுக்கான துறையின் மத்திய அமைச்சர் தலைவராகவும் மத்திய அரசால் நியமனம் செய்யப்படும் அரசு அலுவலர்களும் அரசு அலுவலர் அல்லாத பொதுமக்களும் உறுப்பினர்களாகவும் இருப்பார்கள். மத்திய நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் ஆண்டுக்கு ஒரு முறையாவது நடத்தப்பட வேண்டும். தேவைப்பட்டால் அவ்வப்போது கூட்டங்களை நடத்தலாம்.
மத்திய நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில்கள் விதிகளின்படி இந்தக் குழுவில் 36 உறுப்பினர்கள் வரை மத்திய அரசு நியமிக்கலாம். இவ்வாறு நியமனம் செய்யப்படும் குழு மூன்றாண்டுகளுக்கு செயல்படும். இந்த குழுவுக்கு நுகர்வோர் விவகாரங்களுக்கான அமைச்சகத்தின் துணை அமைச்சர் துணைத் தலைவராக இருப்பார். மத்திய நுகர்வோர் விவகாரங்களுக்கான துறையின் அரசு செயலாளர் இந்த குழுவின் செயலாளராக செயல்படுகிறார். இந்தக் குழுவில் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு அதிகார அமைப்பின் முதன்மை ஆணையரும் தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் பதிவாளரும் உறுப்பினர்கள் ஆவார்கள்.
இந்த குழுவில் உறுப்பினர்களாக இரண்டு மாநிலங்களின் நுகர்வோர் விவகாரங்களுக்கான அமைச்சர்களும் ஒரு யூனியன் பிரதேசத்தின் துணைநிலை ஆளுநரும் சுழற்சி அடிப்படையில் நியமனம் செய்யப்படுகிறார்கள். பாராளுமன்றத்தின் மக்களவை உறுப்பினர் ஒருவரையும் மாநிலங்களவை உறுப்பினர் ஒருவரையும் நுகர்வோர் நலன் குறித்த மத்திய அரசின் துறைகள், நிறுவனங்கள் போன்றவற்றிலிருந்து ஐந்து பிரதிநிதிகளையும் இந்தக் குழுவில் உறுப்பினர்களாக மத்திய அரசு நியமனம் செய்கிறது.
நுகர்வோர் அமைப்புகளின் ஐந்துக்கும் மேற்படாத பிரதிநிதிகளையும் நுகர்வோர் செயல்பாட்டாளர்கள், ஆய்வு மற்றும் பயிற்சி மையங்கள், கல்வியாளர்கள், விவசாயிகள், வர்த்தகம் அல்லது தொழில் துறையினர் போன்ற பிரிவுகளில் இருந்து ஐந்துக்கும் மேற்படாத பிரதிநிதிகளையும் உறுப்பினர்களாக (குறைந்தது ஒரு பெண்) இந்தக் குழுவில் மத்திய அரசு நியமனம் செய்கிறது. நுகர்வோரின் நலனுக்காக பல காரிய குழுக்களையும் (working committees) மத்திய நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் அமைத்து பணியாற்றலாம்.
இதை போலவே மாநிலங்களில் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டப்படி மாநில நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சிலில் நுகர்வோர் விவகாரங்களுக்கான துறையின் மாநில அமைச்சர் தலைவராகவும் அரசால் நியமனம் செய்யப்படும் அரசு அலுவலர்களும் அரசு அலுவலர் அல்லாத பொதுமக்களும் உறுப்பினர்களாகவும் இருப்பார்கள். மாநில நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் ஆண்டுக்கு இரண்டு முறையாவது நடத்தப்பட வேண்டும் தேவைப்பட்டால் அவ்வப்போது கூட்டங்களை நடத்தலாம். ஒவ்வொரு மாநில அரசுகளும் மாநில நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சிலுக்கான விதிகளை கொண்டுள்ளன
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் செயல்பட வேண்டும். அதன் தலைவராக மாவட்ட ஆட்சித் தலைவர் செயல்படுவார். இந்த கவுன்சிலுக்கு அரசு மற்றும் அரசு அல்லாத பிரதிநிதிகளை மாநில அரசு நியமனம் செய்ய வேண்டும். மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் ஆண்டுக்கு இரண்டு முறையாவது நடத்தப்பட வேண்டும். தேவைப்பட்டால் அவ்வப்போது கூட்டங்களை நடத்தலாம். மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் நடைமுறைகளை அந்தந்த கவுன்சில் உருவாக்கிக் கொள்ளலாம்.
சட்டம் உள்ளது, விதிகள் உள்ளது என்பதெல்லாம் சரி. இந்த மூன்று வகையான கவுன்சில்களும் அமைக்கப்பட்டுள்ளதா? செயல்படுகிறதா? என்பதை திறனாய்வு பகுதியில் விரைவில் ஒரு கட்டுரையாக பார்ப்போம்.
நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில்களை பற்றி இந்த பகுதியில் பார்த்தோம். மத்திய நுகர்வோர் பாதுகாப்பு அதிகார அமைப்பு மற்றும் நுகர்வோர் நீதிமன்றங்களின் அமைப்பு முறைகளை பற்றி விரைவில் அடுத்த பகுதியில் பார்ப்போம்