spot_img
November 23, 2024, 5:29 pm
spot_img

மூன்று வழக்குகளில் மருத்துவமனைகளை இழப்பீடு வழங்க உத்தரவிட்ட நுகர்வோர் நீதிமன்றம்

கடந்த 2022 நவம்பரில் அரியலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் டாக்டர் வீ. ராமராஜ் தலைமையிலான அமர்வு 4 மருத்துவமனைகள் மீது பிறப்பித்த உத்தரவு மருத்துவ சிகிச்சையில் அலட்சியம் தொடர்பான வழக்குகளில் முக்கியமானவையாக கருதப்படுகிறது.

தவறான ஸ்கேன் அறிக்கை

சென்னை, வளசரவாக்கம், பிருந்தாவன் நகரில் வசிப்பவர் திலீப்குமார் மனைவி வசுந்தரா (37). கடந்த 29-01-2017 ஆம் தேதியன்று அவர் சென்னையில் ஆழ்வார் திருநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில்   ஸ்கேன் பரிசோதனை செய்து அதனை தமது மருத்துவரிடம் காட்டி உள்ளார்.   அதனைப் பார்த்துவிட்டு உடலில் கருமுட்டையில் நுண்ணுறைகள் வழக்கத்தைவிட பெரியதாக உள்ளது. இதனால் கேன்சர் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்று மருத்துவர் தெரிவித்துள்ளார். பின்னர் மருத்துவரின் அறிவுறுத்தலின்படி மீண்டும் வேறு ஒரு ஸ்கேன் சென்டரில் ஸ்கேன் செய்து பார்த்தபோது முதலாவது ஸ்கேனில் இருந்த பிரச்சனைகள்எதுவும் இல்லை என்றும் கேன்சர் வர வாய்ப்புகள் இல்லை என்றும் முதலாவது ஸ்கேன் தவறு என்றும் மருத்துவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தொடரப்பட்ட வழக்கில் முதலாவது ஸ்கேன் சென்டர் தவறான அறிக்கையை வழங்கி உள்ளது என்பதை புகார்தாரர் நிரூபித்துள்ளார். இதனால் அந்த ஸ்கேன் சென்டர் சேவை குறைபாடு புரிந்துள்ளது என்று அரியலூர் மாவட்ட  நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மேலும், ஸ்கேன் செய்வதற்கு செலுத்திய ரூ  4,400/- மற்றும் சேவை குறைபாட்டால் ஏற்பட்ட சிரமங்களுக்கு இழப்பீடாக ரூபாய் ஒரு லட்சத்தையும் புகார்தாரருக்கு தனியார் ஸ்கேன் நிறுவனம் வழங்க வேண்டும் என்று உத்திரவிட்டது.

தலைமுடி சிகிச்சை

சென்னை நகர், வடபழனியில் வசிப்பவர் வாசுதேவன் மகன் விபின் தேவ் (33). இவருக்கு தலையில் வழுக்கை பிரச்சனையை சரிசெய்ய சென்னை தியாகராய நகரில் உள்ள ஒரு தனியார் அழகு (காஸ்மோடிக்) மருத்துவமனைக்கு   சென்றுள்ளார்.  தலையில் முடியை நடுதல் சிகிச்சை மூலம் வழுக்கை பிரச்சனையை சரிசெய்துவிடலாம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர் இதனை அடுத்து கடந்த 31-01-2016 ஆம் தேதியில் ரூ 60 ஆயிரம் செலுத்தி சிகிச்சை பெற்றுள்ளார். ஆனால் அவருக்கு ஏற்கனவே இருந்ததை விட மோசமாக தலையில் வழுக்கை ஏற்பட்டதோடு தொடர்சிகிச்சையைவழங்க தனியாக பணம் செலுத்த வேண்டும் என ஒப்பந்தத்துக்குமாறாக தனியார் நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தொடரப்பட்ட வழக்கில் புகார்தாரரிடம் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தத்துக்கு மாறாக தனியார் அழகு மருத்துவமனை செயல்பட்டுள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த மருத்துவமனையின் சேவை குறைபாட்டிற்காக புகார்தாரருக்கு ரூ 2 லட்சம் வழங்க வேண்டும் என்று அரியலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

கூடுதல் கட்டணம்

சென்னை, பாலவாக்கத்தில் வசிப்பவர் பொற்பதம் மனைவி கீதா லட்சுமி (32).  சென்னை, நந்தனத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில்   பிரசவத்திற்கு உள்நோயாளியாக சேர்ந்துள்ளார். அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற அறுவை சிகிச்சை, மருத்துவர் கட்டணம், அறை வாடகை மற்றும் மருந்து உட்பட மொத்த கட்டணம் ரூ 60 ஆயிரம் என்று மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். அதனை ஒப்புக்கொண்டு ரூ 46,405/-  ஐ முன்பணமாக அவரது கணவர் செலுத்தியுள்ளார்.  பின்னர் அவரது மருத்துவ காப்பீட்டு நிறுவனத்தினர் ரூ 48,000/- செலுத்தியுள்ளனர்.  சிகிச்சை முடிவடைந்த பின்னர் கூடுதலாக செலுத்தப்பட்ட ரூ 34,405/-  ஐ திருப்பித் தருமாறு புகார்தாரர் கேட்டுள்ளார். ஆனால் மருத்துவமனை நிர்வாகம் மறுத்துவிட்டது.

இது குறித்து தொடரப்பட்ட வழக்கில் புகார்தாரரிடம் தனியார் மருத்துவமனை கூடுதல் கட்டணம் பெற்றுள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால் கூடுதலாக செலுத்திய ரூ 34,405/-  ஐ புகார்தாரருக்கு மருத்துவமனை வழங்க வேண்டும். மேலும் இத்தகைய சேவை குறைபாட்டால் ஏற்பட்ட சிரமங்களுக்கு அவருக்கு ரூ 50,000/- இழப்பீடு வழங்க வேண்டும் என்று அரியலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்திரவிட்டது.

கண் அறுவை சிகிச்சை

சென்னை, கோடம்பாக்கத்தில் வசிப்பவர் வி.கே. சுந்தரம் மனைவி ஷீலா சுந்தரம் (71).  தமக்கு கண் அறுவை சிகிச்சை செய்து தொடர் மருத்துவ ஆலோசனைகள் வழங்கி கொடுக்கப்பட்ட மருந்துகள் காரணமாக இரண்டு கண்களும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. தனக்கு சிகிச்சை வழங்கிய தியாகராய நகரில் உள்ள தனியார் மருத்துவமனை இதற்கு   காரணம் என்று கூறி வழக்கு தாக்கல் செய்திருந்தார்.  இந்த வழக்கில் புகார் நிரூபிக்கப்படாததால் மருத்துவமனையை குற்றச்சாட்டில் இருந்து விடுவித்து அரியலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் என்று உத்திரவிட்டது.

க.கதிர்வேல்
க.கதிர்வேல்
க.கதிர்வேல், ஊடகவியலார்

தொடர்புடைய கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்