spot_img
July 27, 2024, 12:55 pm
spot_img

நாமக்கல் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் – ஓர் திறனாய்வு

நாமக்கல்லில் கடந்த 2000 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் தொடங்கப்பட்டது. கடந்த ஓராண்டு காலத்தில் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தலைவர் டாக்டர் வீ. ராமராஜ் தலைமையிலான அமர்வு வழக்குகளை விசாரித்து தீர்ப்புகளை வழங்கியுள்ளது. இந்நிலையில் கடந்த 01 ஏப்ரல் 2023 முதல் 27 மார்ச் 2024 வரை நாமக்கல் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் பற்றிய திறனாய்வை அறிந்து கொள்வது நுகர்வோர்களுக்கு உபயோகமாக அமையும். 

நாமக்கல் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் தொடங்கப்பட்ட நவம்பர் 2000 முதல் 2023 மார்ச் இறுதி வரையில் 22 ஆண்டுகள் ஐந்து மாதங்களில் (269 மாதங்கள்) விசாரணை செய்யப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 1107. இந்த ஆண்டுகளில் வழங்கப்பட்ட தீர்ப்புகளின் சராசரி எண்ணிக்கை 45 ஆகும். கடந்த 12 மாதங்களில் 302 வழக்குகளை விசாரித்து நாமக்கல் மாவட்ட நுகர்வோர்   குறைதீர் ஆணையம் உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.  நாமக்கல் மாவட்ட நுகர்வோர் ஆணையம் தொடங்கப்பட்டு 22 ஆண்டுகள் வழங்கப்பட்ட தீர்ப்புகளின் ஆண்டு சராசரியை விட இந்த ஆண்டில் சுமார் ஏழு மடங்கு தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஓராண்டு காலத்தில் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் 10 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் இருந்த நான்கு வழக்குகளும் ஐந்தாண்டுகளுக்கு மேல் நிலுவையில் இருந்த 52 வழக்குகளும் ஐந்தாண்டுகளுக்கு மேல் நிலுவையில் இருந்து விரைவான விசாரணைக்காக கோயம்புத்தூர் மாவட்ட நுகர்வோர் ஆணையத்தில் இருந்து நாமக்கல்லுக்கு மாற்றம் செய்யப்பட்ட 83 வழக்குகளும் விசாரிக்கப்பட்டு நாமக்கல் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தால் தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்படும் நூறு நுகர்வோர்களில் மூவர் மட்டுமே நுகர்வோர் ஆணையங்களில் புகார் தாக்கல் செய்வதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. நுகர்வோர் பாதுகாப்பு குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படும் போதும் விரைவான நீதி நீதிமன்றங்களில் வழங்கப்படுகிறது என்ற  நம்பிக்கை மக்களுக்கு ஏற்படும் போதும் பாதிக்கப்பட்ட நுகர்வோர்   தீர்வுக்காக நுகர்வோர் ஆணையங்களை அணுகுவது அதிகரிக்கிறது. இந்நிலையில் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் கடந்த ஓராண்டு காலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட புதிய புகார்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை இதற்கு முந்தைய   ஆண்டுகளில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் சராசரி எண்ணிக்கையை விட அதிகமாகும்.

தற்போதைய நிலவரப்படி நாமக்கல் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் 2021 ஆம் ஆண்டு வரை தாக்கல் செய்யப்பட்ட அனைத்து வழக்குகளிலும்  2022 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட ஓரிரு வழக்குகளை தவிர அனைத்து வழக்குகளிலும் தீர்வு வழங்கப்பட்டுள்ளது.  கடந்த ஜனவரி மாதத்தில் கோயம்புத்தூர் மாவட்ட நுகர்வோர்   குறைதீர் ஆணையத்தில் இருந்து விரைவான விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்ட வழக்குகள் மற்றும் 2023, 2024 ஆம் ஆண்டுகளில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் மட்டுமே நாமக்கல் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் நிலுவையில் உள்ளது. 2023 ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட பல வழக்குகளில் தீர்ப்புகளும் வழங்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019-ன்படி ஒவ்வொரு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்திலும் சமரச மையங்கள் அமைக்கப்பட்டு  சமரச பேச்சுவார்த்தை மூலம் வழக்குகளில் தீர்வு காண சமரசர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்.  நாமக்கல் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் கடந்த ஓராண்டு காலத்தில் 36 வழக்குகளில் சமரச பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட்டுள்ளது.  தமிழகத்தில் உள்ள மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையங்களில் அதிக அளவில் நாமக்கல் மாவட்டம் நுகர்வோர் குறைதீர் ஆணையமே சமரச பேச்சுவார்த்தை மூலம் கடந்த ஓராண்டு காலத்தில் தீர்வுகளை வழங்கி உள்ளது. 

ஒவ்வொரு மாவட்டத்திலும் செயல்படும் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையங்களும் மாவட்ட மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும் விதமாக நுகர்வோர் காவலனாக செயல்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும். Source: confonet website, which is an official website for consumer commissions.

சாஜ். ம
சாஜ். ம
சாஜ். ம, வழக்கறிஞர்/ சட்டக் கல்லூரி விரிவுரையாளர்

தொடர்புடைய கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்