spot_img
October 6, 2024, 9:46 am
spot_img

வணிக நடவடிக்கையாக இருப்பினும் சேவை குறைப்பாட்டுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் – தேசிய நுகர்வோர் ஆணையம்

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019 -ன்படி நுகர்வோர் என்பவர் யாரெனில் ஒரு பொருளை அல்லது சேவையை பணம் கொடுத்து   வாங்குபவர் ஆவார். ஆனால், பொருளை அல்லது சேவையை மறு விற்பனை (resale) அல்லது வணிக பயன்பாட்டிற்காக (commercial purpose) வாங்கினால் நுகர்வோர் அல்ல.  நுகர்வோர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் பல வழக்குகளில் பொருளை அல்லது சேவையை விற்பனை செய்தவர் தங்களது பொருளை அல்லது  சேவையை வாங்கியவர் வணிக நோக்கத்துக்காக வாங்கியுள்ளார் என்று கூறி நுகர்வோர் நீதிமன்றங்கள் விசாரிக்க கூடாது என வாதிடுகின்றன.

தேசிய நுகர்வோர் ஆணையம் சமீபத்தில் வழங்கிய வழக்கு ஒன்றில் (R.P. No. 3213/2012, Glaxo Smithkline Pharmaceuticals Ltd. Vs Dr Rajendra Ghiya) தீர்ப்பு வணிக நடவடிக்கையாக இருந்தாலும் சேவை குறைபாடு புரிந்தால் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரலாம் என்ற நிலையை உருவாக்கியுள்ளது.

டாக்டர். ராஜ்தேந்திர கியா மற்றும் ஸ்ரீமதி. பீனா கண்டேல்வால் என்பவர்கள் கிளாக்ஸோ ஸ்மித்க்லைன் பார்மாசூட்டிகல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் சுமார் 250 பங்குகளை வாங்கி அதை அவர்களது பெயர்களுக்கு மாற்றுவதற்கான பரிமாற்றப் பத்திரத்துடன் அனுப்பினர். ஆனால், பங்குச் சான்றிதழ்களை அந்த நிறுவனம்   தங்களுக்கு வழங்கவில்லை என்றும் இத்தகைய நிறுவனத்தின் செயல்பாடு சேவை குறைபாடு என்றும் ஜெய்ப்பூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் அந்த நிறுவனத்தின் மீது வழக்கு தாக்கல் செய்தனர். 

மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு அறிவிப்பு அனுப்பியும் அந்த நிறுவனம் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.  வழக்கு தாக்கல் செய்தவர்களை விசாரித்து சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்த பின்னர் பங்குச் சான்றிதழ்களை வழங்காத நிறுவனம் புரிந்த சேவை குறைபாட்டால் வழக்கு தாக்கல் செய்தவர்களுக்கு ஏற்பட்ட ரூ 3,66,575/- இழப்பை வழங்குவதோடு அவர்களுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு ரூபாய் பத்தாயிரத்தையும் வழக்கின் செலவு தொகையாக ரூபாய் இரண்டாயிரத்தையும் அந்த நிறுவனம் வழங்க மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற உத்தரவிட்டது. மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை (Appeal No. 1209/2008) மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையமும் தள்ளுபடி செய்துவிட்டது.

இதனைத் தொடர்ந்து கிளாக்ஸோ ஸ்மித்க்லைன் பார்மாசூட்டிகல்ஸ் லிமிடெட் நிறுவனம் தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தீர்ப்பின் மீது சீராய்வு மனுவை கடந்த 2012 ஆம் ஆண்டு தாக்கல் செய்தது. பங்கு பரிவர்த்தனை பிரச்சனை கம்பெனியில் சட்டப்படி தீர்க்கப்பட வேண்டியது என்பதாலும் வணிக ரீதியிலான பரிவர்த்தனையை விசாரிக்க நுகர்வோர் சட்டத்தில்  இடம் இல்லை என்பதாலும் வழக்கு தாக்கல் செய்தவர்களின் புகாரை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் நிறுவனம் வாதிட்டது.

இரு தரப்பு வாதங்களைக் கேட்ட கடந்த 5 ஆகஸ்ட் 2024 அன்று வழங்கிய தீர்ப்பில், நடைபெற்ற பரிவர்த்தனை வணிக பயன்பாடு ரீதியில் ஆனது என்றாலும் நிறுவனத்தின் செயல்பாடு சேவை குறைபாடு கொண்டது என்பதால் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் தீர்ப்பளித்துள்ளது. 

வணிகப் பயன்பாட்டுக்காக பொருளை வாங்கியுள்ளதால் நுகர்வோர் நீதிமன்றங்கள் விசாரிக்க கூடாது என எல்லா சமயங்களிலும் விற்பனையாளர் வாதிட முடியாது என்று சமீபத்தில் ஓம்கார் ரியல் எஸ்டேட் மற்றும் டெவலப்பர், குஷல்ராஜ் லேண்ட் டெவலப்பர் ஆகியோருக்கு இடையே நடைபெற்ற வழக்கில் கடந்த 2024 ஆகஸ்ட் 23 அன்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது.

நுகர்வோர் பூங்கா
நுகர்வோர் பூங்கா
நுகர்வோர் பூங்காவின் படைப்பு

தொடர்புடைய கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்