spot_img
September 14, 2024, 3:23 pm
spot_img

விபத்துக்குள்ளான காரின் உரிமையாளருக்கு ரூ 80,000/- வழங்க இன்சூரன்ஸ்நிறுவனத்துக்கு நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே உள்ள மனுவகாட்டு பாளையத்தில் வசித்து வருபவர் முத்துசாமி மகன் சுந்தரம் (54). இவருக்கு சொந்தமான மாருதி ஆம்னி காரை யுனிவர்சல் சேம்போ ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனியில் 2021 அக்டோபர் முதல் ஓராண்டுக்கு பிரிமியம் செலுத்தி இன்சூரன்ஸ் செய்திருந்தார். 2022 ஜூன் மாதத்தில் இவரது வாகனம் சாலை விபத்துக்குள்ளாகி சேதம் அடைந்துள்ளது. காரின் சேதத்தை சரி செய்து பழுதை நீக்கி தர இன்சூரன்ஸ் கம்பெனியின் அங்கீகாரம் பெற்ற ஈரோட்டில் உள்ள ஸ்ரீ சாராதாம்பாள் ஆட்டோ மொபைல்ஸ் சர்வீஸ் சென்டரில் சுந்தரம் காரை கொடுத்துள்ளார்.

கார் சர்வீஸ் சென்டர் பணியாளர்கள் காரை சோதித்து விட்டு காரை சரி செய்ய தோராயமாக ரூ 1,25,000/- செலவு ஆகும் என்று காரின் உரிமையாளிடம் தெரிவித்துள்ளனர். இன்சூரன்ஸ் கம்பெனியில் இதற்கான செலவு தொகையை கேட்ட போது, கார் ரூ 1,60,000/- க்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளது என்றும் 75 சதவீதத்திற்கும் மேல் சேத மதிப்பு இருந்தால் சேதத்தை சரி செய்ய பணம் தர முடியாது என்றும் காரை கொடுத்துவிட்டு மொத்த இழப்பீடாக ரூ 1,59,000/- பெற்றுக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளனர். 

இன்சூரன்ஸ் கம்பெனியின் வேண்டுகோளுக்கு காரின் உரிமையாளர் ஒப்புக்கொள்ளாமல் வாகனத்தை சரி செய்து தருமாறு சர்வீஸ் சென்டரில் தெரிவித்துள்ளார். காரை முழுமையாக சரி செய்து ரூ 1,19,778/- க்கு சர்வீஸ் சென்டர் நிர்வாகம் ரசீது வழங்கியுள்ளது. காரின் இன்சூரன்ஸ் மதிப்பில் 75 சதவீதத்திற்கும் குறைவாகவே காரின் சேதத்தை சரி செய்ய ஏற்பட்டுள்ளதால் சேத தொகையை வழங்க வேண்டும் என்று காரின் உரிமையாளர் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் கேட்டுள்ளார். ஆனால், இன்சூரன்ஸ் நிறுவனம் ரூ 60,000/- மட்டுமே சர்வீஸ் சென்டருக்கு வழங்கி உள்ளது. மீத தொகையை காரின் உரிமையாளர் சர்வீஸ் சென்டர் செலுத்தி விட்டு காரை எடுத்துச் சென்றுள்ளார்.

காரில் ஏற்பட்ட சேதத்திற்கான முழு தொகையையும் வழங்க தவறியதால் இன்சூரன்ஸ் நிறுவனம் மீது காரின் உரிமையாளர் கடந்த 2023 பிப்ரவரி மாதத்தில் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இன்சூரன்ஸ் நிறுவனம் முழு தொகையையும் காரின் உரிமையாளருக்கு வழங்காதது சேவை குறைபாடு என்று 2024 செப்டம்பர் 4 அன்று நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ் தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

காரை தங்களிடம் கொடுத்து விட்டு இன்சூரன்ஸ் தொகையை பெற்றுக்கொள்ள காரின் உரிமையாளர் மறுத்ததால் தாங்கள் ரூ 60,000/-  மட்டுமே தருவோம் என்று கூறியதை காரின் உரிமையாளர் ஏற்றுக் கொண்டதால் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்  என்று இன்சூரன்ஸ் நிறுவனம் வாதிட்டதை நிராகரித்த நீதிமன்றம் தீர்ப்பில் காரின் உரிமையாளருக்கு காரை சரி செய்ய அவர் செலுத்திய ரூ 59,778/-  மற்றும் அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் சிரமங்களுக்கு இழப்பீடாக ரூ 20,000/-  ஆகியவற்றை நான்கு வாரங்களுக்குள் வழங்க வேண்டும் என்று இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ளது. 

சாஜ். ம
சாஜ். ம
சாஜ். ம, வழக்கறிஞர்/ சட்டக் கல்லூரி விரிவுரையாளர்

தொடர்புடைய கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்