spot_img
July 27, 2024, 1:17 pm
spot_img

“எங்களிடம் படித்தால் 100% தேர்ச்சி உறுதி”- மாணவர்கள் ஏமாற்றப்படுகிறார்களா?

“எங்களிடம் படித்தால் 100% தேர்ச்சி உறுதி” என்ற விளம்பரங்களை நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கும் வேலைக்கான போட்டி தேர்வுகளுக்கும் பயிற்சி நடத்தும் கோச்சிங் சென்டர்கள் விளம்பரம் செய்வதை நாம் பார்க்கிறோம். இன்னும் ஓரிரு நிறுவனங்கள் பயிற்சி மையங்கள் இதற்கும் ஒரு   அடி மேலே   சென்று   “பாஸ் இல்லை என்றால் பணம் வாபஸ்” என்றெல்லாம் விளம்பரம் செய்கின்றன. தவறாக வழிநடத்தும் இத்தகைய விளம்பரங்களை பார்க்கும் நம்மில் பலரும் அதனை பார்த்து விட்டு கடந்து சென்று விடுகிறோம்.  ஆனால், போலியான வாக்குறுதிகளை வழங்கும் கோச்சிங் சென்டர்களால் பல மாணவர்களின் எதிர்காலமும் பெற்றோர்களின் நம்பிக்கையும் பாதிக்கப்படுகிறது என்பது நிதர்சனம்.

நுகர்வோரின் நலனுக்கு எதிராக தவறான அல்லது தவறாக வழிநடத்தும் விளம்பரங்களை செய்யும் கோச்சிங் சென்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க பிரிவு 21, நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், 2019-படி   மத்திய நுகர்வோர் பாதுகாப்பு அதிகார அமைப்புக்கு (Central Consumer Protection Authority) அதிகாரம் உள்ளது.  விசாரணை செய்து கோச்சிங் சென்டர் வெளியிட்ட விளம்பரம் தவறானது அல்லது தவறாக வழிநடத்துவது என்று தெரிய வந்தால் விளம்பரத்தை தடை செய்யவும் மாற்றியமைக்கவும் ஓராண்டுக்கு கோச்சிங் சென்டர் நடத்துவதை தடை செய்யவும் இந்த அமைப்பு உத்தரவிடலாம். மேலும் ரூபாய் 10 லட்சம் வரை அபராதமும் விதிக்க இந்த அமைப்புக்கு அதிகாரம் உள்ளது. 

மத்திய நுகர்வோர் பாதுகாப்பு அதிகார அமைப்பு அமைத்துள்ள நுழைவுத் தேர்வு மற்றும் போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி மையங்களின் தவறான விளம்பரங்களைத் தடுத்தல் மற்றும் ஒழுங்குபடுத்துவதற்கான குழு கூட்டம் கடந்த 2024 ஜனவரி 8 ஆம் தேதி   நடைபெற்றுள்ளது. எங்களிடம் பயிற்சி பெற்றால் நூறு சதவீதம் நுழைவுத் தேர்வில் வெற்றி பெறுவீர்கள் அல்லது போட்டி தேர்வில் வெற்றி பெற்று வேலை பெறுவீர்கள் என்ற கோச்சிங் சென்டர் விளம்பரங்களை செய்யக்கூடாது என்பது உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

மத்திய நுகர்வோர் பாதுகாப்பு அதிகார அமைப்பு   2019 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை ஒன்பது பயிற்சி மையங்கள்   மீது மட்டுமே   தவறாக வழிநடத்தும் விளம்பரங்களுக்காக இந்த அமைப்பு அபராதம் விதித்துள்ளதும் இதுவரை 31 பயிற்சி மையங்களுக்கு மட்டுமே விசாரணைக்காக அறிவிப்பு அனுப்பி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.   நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான பயிற்சி மையங்கள் இருந்தபோதிலும்  மத்திய நுகர்வோர் அதிகார அமைப்பில் புகார் செய்யும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைவு.  

மத்திய நுகர்வோர் அதிகார அமைப்பு பற்றிய விழிப்புணர்வு இல்லாததும் எளிதில் அணுகும் தன்மை இல்லாத அமைப்பாக இருப்பதும்தான் குறைவான புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுக்கு காரணம் எனலாம்.  பயிற்சி மையங்கள்   மட்டுமல்லாது அனைத்து வர்த்தக நிறுவனங்களும் செய்யும் தவறான மற்றும் தவறாக வழி நடத்தும் விளம்பரங்கள் மீது நடவடிக்கை   எடுக்கும் அதிகாரத்தை இந்த அமைப்பு கொண்டுள்ளது.  
போலியான விளம்பரங்கள் மூலம் மக்கள் பாதிப்படையாமல் இருக்க மத்திய நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் பரவலாக்கப்பட்ட வேண்டும். குறிப்பாக போலியான விளம்பரங்கள் குறித்து  மாவட்டங்களில் உள்ள நுகர்வோர் நீதிமன்றங்களில் புகார் செய்யவும் அங்கு விசாரிக்கவும் தக்க சட்ட திருத்தம் தற்போதைய தேவையாக உள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் எளிதில் அவர்கள் வசிக்கும் மாவட்ட அளவில் உள்ள நுகர்வோர் நீதிமன்றங்களில் புகார்களை தாக்கல் செய்ய முடியும். இதன் மூலம் போலியான விளம்பரங்கள் தடுக்கப்பட்டு மக்கள்   பாதிப்புக்கு  உள்ளாகாத நிலை ஏற்படும் என்றால் ஐயமில்லை

நுகர்வோர் பூங்கா
நுகர்வோர் பூங்கா
நுகர்வோர் பூங்காவின் படைப்பு

தொடர்புடைய கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்