spot_img
July 27, 2024, 2:15 pm
spot_img

ஏன் நுகர்வோர் தினத்தை கொண்டாட வேண்டும்?

“நுகர்வோர்கள் என்பது நம் ஒவ்வொருவரையும் உள்ளடக்கியதாகும்.  இத்தகைய மிகப்பெரிய பொருளாதார குழுவானது கிட்டத்தட்ட ஒவ்வொரு தனியார் மற்றும் பொது அமைப்புகளின் பொருளாதார முடிவுகளால்  பாதிக்கப்படுகிறது. இருந்தபோதிலும் இன்னும் அவர்கள் மட்டுமே முக்கியமான குழுவாக இருக்கிறார்கள். அவர்களின் கருத்துக்கள் பெரும்பாலும் கேட்கப்படுவதில்லை.” என்ற   செய்தியை அமெரிக்க பாராளுமன்றத்துக்கு கடந்த 15 மார்ச் 1962 அன்று அப்போதைய ஐக்கிய அமெரிக்க நாட்டின் அதிபர் ஜான் எஃப் கென்னடி அவரது உரையாக அனுப்பி வைத்தார்.   நுகர்வோர்களின் உரிமைக்காக சர்வதேச அளவில் அரசு தலைவர் ஒருவர் பேசிய முதல் கருத்து இதுவாகும்.

இதனை தொடர்ந்து சர்வதேச நுகர்வோர் இயக்கங்கள் கடந்த 1983 முதல் ஒவ்வொரு மார்ச் 15 ஆம் நாளை உலக நுகர்வோர் தினமாக அனுசரிக்க தொடங்கினர்.  இந்நிலையில் கடந்த 1985 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையும் மார்ச் 15 ஆம் நாளை உலக நுகர்வோர் தினமாக அங்கீகரித்தது.  ஒவ்வொரு ஆண்டும், உலக நுகர்வோர் உரிமைகள் தினமானது சிறப்பம்சமாக ஒரு கருப்பொருளை   கடைபிடிக்கிறது. இந்த ஆண்டு “சுத்தமான ஆற்றல் மாற்றங்களின் மூலம் நுகர்வோரை மேம்படுத்துதல்” என்ற கருப்பொருள் அறிவிக்கப்பட்டுள்ளது. (“Empowering consumers through clean energy transitions” is theme of   year for the last world consumer day).

இந்தியாவில் 1986 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்திற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்த நாளை ஒவ்வொரு ஆண்டும் தேசிய நுகர்வோர் தினமாக அனுசரித்து வருகிறோம். இந்த நாள் நுகர்வோரின் சக்தியைக் கொண்டாடுவதற்கும் அவர்களின் உரிமைகள் மதிக்கப்படுவதற்கும் பாதுகாக்கப்படுவதற்கும் ஒரு வாய்ப்பாகும். நுகர்வோர் தினத்தை கொண்டாடுவது நுகர்வோர் விழிப்புணர்வு கருத்துக்களை சமூகத்தில் விதைக்க உதவிகரமாக இருக்கும். 

இந்த நாள்   நுகர்வோர் உரிமைகள் மற்றும்   பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வழிவகை செய்கிறது. நுகர்வோர் உரிமைகள் தினத்தை கொண்டாட கருத்தரங்கங்கள், பயிற்சி முகாம்கள், ஆய்வரங்கங்கள், கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள், பிரச்சாரங்கள் போன்ற நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய வேண்டும்.  நுகர்வோர் உரிமைகள் தினம் என்பது நுகர்வோர் நடவடிக்கைகளுக்கு இடையே ஒற்றுமையைக் காட்ட ஆண்டுதோறும் ஒரு வாய்ப்பாகும். நியாயமான வர்த்தகம் மற்றும் நெறிமுறை வணிக நடைமுறைகளின் கொள்கைகளைப் புரிந்துகொள்வதற்கும் நிலைநிறுத்துவதற்கும் நுகர்வோர் மற்றும் வணிகங்களுக்கு இந்த நாள் ஒரு நினைவூட்டலாக செயல்படுகிறது.
இனி வரும் காலங்களில் மாநில அரசும் இந்திய அரசும் நுகர்வோர் தினங்களில் நுகர்வோர் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை நாடு முழுவதும் நடத்த  விரிவான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். பள்ளி கல்லூரிகளிலும்   குக்கிராமங்கள் முதல் பெரு நகரங்கள் வரையிலும் ஒவ்வொரு ஆண்டும் நுகர்வோர் தினங்கள் சிறப்பாக அனுசரிக்கப்பட வேண்டும் என்பதே நுகர்வோர் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

நுகர்வோர் பூங்கா
நுகர்வோர் பூங்கா
நுகர்வோர் பூங்காவின் படைப்பு

தொடர்புடைய கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்