கோயம்புத்தூர் நகர் சித்தாபுதூரில் வசித்து வரும் அருணாச்சலம் மகன் பாலசுந்தரம் கடந்த 2008 ஆம் ஆண்டு அவரது வீட்டுக்கு தரைவழி தொலைபேசி இணைப்பை (land line connection) தனியார் தொலை தொடர்பு நிறுவனம் ஒன்றில் பெற்று உபயோகித்து வந்துள்ளார். இவர் 2017 ஜூன் மாதத்திற்கான கட்டணமாக ரூ 1,882/- ஐ சிட்டி யூனியன் வங்கி மூலமாக 2017 ஜூலை 11 ஆம் தேதியில் செலுத்தியுள்ளார்.
ஜூன் மாத கட்டணம் செலுத்தப்படவில்லை என தொலை தொடர்பு நிறுவனம் கூறியதை தொடர்ந்து பணம் செலுத்தப்பட்ட விவரங்களுடன் அந்த நிறுவனத்திற்கு அவர் மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். ஆனால், ஜூன் மாதத்திற்கான பணம் செலுத்தப்படவில்லை என தொலை தொடர்பு நிறுவனத்தை சேர்ந்த நபர்கள் அடிக்கடி வீட்டுக்கு வந்து பணத்தை செலுத்துமாறு மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் பாலசுந்தரம் பத்து வருடங்களாக உபயோகித்து வந்த தொலைபேசி இணைப்பை துண்டித்து விடுமாறு மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பியும் தொலை தொடர்பு நிறுவனத்தினர் இணைப்பை துண்டிக்காமல் ஒவ்வொரு மாதமும் கட்டண ரசீது அனுப்பி வந்துள்ளார்கள்.
இதனால் மன உளைச்சல் அடைந்த பாலசுந்தரம் கடந்த 2018 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விரைவான விசாரணைக்காக 2022 ஜூலை மாதத்தில் நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. தொலைபேசி கட்டணங்கள் குறித்த பிரச்சனைகள் உட்பட்ட தொலை தொடர்பு தகராறுகளை விசாரணை செய்ய நுகர்வோர் நீதிமன்றங்களுக்கு அதிகாரம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தொலை தொடர்பு நிறுவனம் இந்த வழக்கில் தாக்கல் செய்த பதிலில் தெரிவித்து நுகர்வோர் நீதிமன்றத்தில் வாதிட்டது. விசாரணைக்கு பின்னர் இந்த வழக்கில் கடந்த 2023 ஆகஸ்ட் மாதத்தில் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ் தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கியது.
“கடந்த 2009 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தொலை தொடர்பு பிரச்சனைகளை மத்தியஸ்த நடுவர்தான் (arbitrator) விசாரிக்க முடியும் என்றும் நுகர்வோர் நீதிமன்றங்களுக்கு தொலை தொடர்பு நிறுவன வாடிக்கையாளர்களின் பிரச்சனைகளை விசாரிக்க அதிகாரம் இல்லை என்றும் கூறியது உண்மை. இதனால் கடந்த 12 ஆண்டுகளாக தொலைபேசி (landline), அலைபேசி (mobile) மற்றும் இணையதள சேவையை (internet) தொலை தொடர்பு நிறுவனங்களில் பெறுகின்ற வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்க நுகர்வோர் நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்ய இயலவில்லை. ஆனால், 2022 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தொலைதொடர்பு சேவைகளில் ஏற்படும் பிரச்சனைகளை தொலைதொடர்பு நிறுவனங்களும் வாடிக்கையாளர்களும் ஏற்படுத்திக் கொண்டுள்ள ஒப்பந்தப்படி மத்தியஸ்த நடுவரிடம்தான் (arbitrator) தீர்த்துக் கொள்ள வேண்டும் என்பது கட்டாயமானதல்ல என்றும் விரும்பினால் நுகர்வோர் நீதிமன்றங்களிலும் வழக்கு தாக்கல் செய்யலாம் என தெரிவித்துவிட்டது” என்று நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2019 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட நுகர்வோர் பாதுகாப்புச் சட்டப்படி தொலைத்தொடர்பும் சேவை என்ற வரையறைக்குள் கொண்டு வரப்பட்டு விட்டது என நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு குறிப்பிட்டுள்ளது.
இந்த வழக்கில் செலுத்திய பணத்தை மீண்டும் கேட்டு பாலசுந்தரத்தை தொல்லை செய்ததும் தொலைபேசி இணைப்பை துண்டிக்க கேட்டுக் கொண்ட பின்னரும் இணைப்பை துண்டிக்காமல் மாதம் தோறும் கட்டண ரசீது அனுப்பியதும் தொலைதொடர்பு நிறுவனத்தின் சேவை குறைபாடு என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு தொலைதொடர்பு நிறுவனம் ரூபாய் 25 ஆயிரத்தை இழப்பீடாகவும் ரூபாய் 5 ஆயிரத்தை வழக்கு செலவு தொகையாகவும் நான்கு வாரங்களுக்குள் வழங்க வேண்டும். தவறினால் ஆண்டொன்றுக்கு ஒன்பது சதவீத வட்டி சேர்த்து வழங்க வேண்டும் என நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் 12 ஆண்டுகளாக தொலை தொடர்பு நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியாது என்ற நிலை மாற்றப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள கோடிக்கணக்கான தொலைபேசி, அலைபேசி மற்றும் இணையதள சேவைகளை பெறும் வாடிக்கையாளர்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய தீர்ப்பாக நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தின் உத்தரவு உள்ளது என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.