spot_img
May 14, 2024, 6:07 am
spot_img

தேர்தல் வழக்குகளை ஆறு மாதத்தில் முடிக்க அரசியல் கட்சிகள் சட்டம் கொண்டு வருவார்களா? 

இந்திய திருநாட்டின் 18 ஆம் மக்களவை தேர்தல் திருவிழா தொடங்கிவிட்டது. ஆனால், ஐந்தாண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற 17 ஆம் மக்களவைத்   தேர்தல்களில் அறிவிக்கப்பட்ட முடிவுகள் தவறானது  என்றும் வெற்றி பெற்ற வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் தொடரப்பட்ட பல வழக்குகள் இன்னும் நிலுவையில் இருந்து வருகின்றன.  இவ்வாறு நிலுவையில் உள்ள வழக்குகளில் இனிமேல் வெற்றி பெற்றவர்களுக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டாலும்,  வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு பதவிக்காலத்தை நிறைவு செய்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, எவ்வித பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. இத்தகைய நிலை நீடிப்பது மக்களாட்சியில் வாக்காளர்களுக்கு   அளிக்கப்படும் அநீதி அல்லவா?.

ஒருவர் தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது என வழக்கு தாக்கல் செய்யப்பட்டால் வெற்றி பெற்றவரின் பதவிக்காலம் முடியும் வரை அந்த வழக்கில்  விசாரணை நடத்தப்பட்டு தீர்ப்பு வழங்கப்படவில்லை என்றால் நாட்டில் உண்மையான நீதி பரிபாலான முறை (justice delivery system) நிலவுவதாக கூற இயலாது.  

தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் வெற்றி செல்லாது என அறிவிக்க   கோரும் வழக்குகள் உயர் நீதிமன்றங்களில் மட்டுமே தாக்கல் செய்யப்பட வேண்டிய நிலை உள்ளது. உயர்நீதிமன்றங்களில் மிக அதிகமான வழக்குகள் இருப்பதால் தேர்தல் வழக்குகளை விரைந்து முடிப்பது சிரமம் ஏற்படுகிறது. இதன் காரணமாகவே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டவரின் பதவிக்காலம் முடிவதற்கு முன்பாகவே அவர்களுக்கு எதிரான வழக்குகளில் தீர்வு காண முடிவதில்லை.

இத்தகைய நிலையை மாற்ற தேர்தல் முடிவுகள் குறித்த வழக்குகளில் ஆறு மாதங்களில் மேல்முறையீடு உட்பட இறுதி   தீர்ப்பை வழங்கும் வகையில் சிறப்பு தீர்ப்பாயங்கள் அமைக்கப்பட வேண்டும்.  தேர்தல் வழக்குகள்   முடிவு அறிவிக்கப்பட்ட ஒரு மாத காலத்திற்குள் தாக்கல் செய்வது கட்டாயமாக்கப்பட வேண்டும். இவ்வாறு ஒரு மாத காலத்திற்குள் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரிக்க ஒவ்வொரு மாநிலத்திலும் பிராந்திய தேர்தல் தீர்ப்பாயம் (regional election tribunal) அமைக்கப்பட வேண்டும். இந்த தேர்தல் தீர்ப்பாயத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான தகுதிகள் முறையே உயர் நீதிமன்ற நீதிபதி மற்றும் மாவட்ட நீதிபதிக்கு இணையானதாக இருக்க வேண்டும். இந்த தீர்ப்பாயம் தேர்தல் வழக்குகளை இரண்டு மாதத்தில் விசாரித்து தீர்ப்புரைக்க வேண்டும். 

பிராந்திய தேர்தல் தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய தேசிய தேர்தல் தீர்ப்பாயம் (national election tribunal) அமைக்கப்பட வேண்டும். பிராந்திய தேர்தல் தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பின் மீது ஒரு மாதத்திற்குள் மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட வேண்டும். இந்த தேசிய தேர்தல் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்யப்படும் தேர்தல் மேல்முறையீட்டு  வழக்குகள் இரண்டு மாதத்தில் விசாரித்து தீர்ப்பு வழங்கப்பட வேண்டும்.  தேசிய தேர்தல் தீர்ப்பாயத்தின் முடிவை எதிர்த்து சீராய்வு வழக்குகள் (revision petition) உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தால் அவ்வாறு தாக்கல் செய்யப்படும்  வழக்குகளின் மீது தீர்ப்பை ஒரு மாதத்திற்குள் முடிவு செய்ய வேண்டும்.  

தேர்தல் முடிவுகள் குறித்த வழக்குகளை முடிவு அறிவிக்கப்பட்ட தினத்தில் இருந்து ஆறு மாதங்களுக்குள் தீர்க்கும் வகையில் சிறப்பு தீர்ப்பாயங்கள் அமைப்பதற்கான சட்டத்தை (Special Election Tribunals Act, 2024) கொண்டு வருவதாக தற்போது தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் வாக்குறுதி அளிப்பார்களா? வாக்காளர்கள் ஒவ்வொருவரும் இந்த கேள்வியை அரசியல்   கட்சிகளிடம் கேட்டுப் பாருங்களேன்!

தொடர்புடைய கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்