spot_img
May 14, 2024, 3:43 pm
spot_img

நுகர்வோர் உரிமைகளை மறுவடிவமைப்பு (redesign) செய்ய வேண்டும் – நுகர்வோர் பூங்காவின் நூறாவது கட்டுரை

நுகர்வோர் உரிமைகள் மறு வடிவமைப்பு எவ்வாறு செய்யப்பட வேண்டும்? என்பதை அறிந்து கொள்வதற்கு முன்பாக தற்போது வழங்கப்பட்டுள்ள உரிமைகளை பற்றி அறிந்து கொள்வது அவசியமாகும்.  இந்திய குடிமக்களுக்கு நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் (2019)  ஆறு வகையான   உரிமைகளை வழங்கியுள்ளது. இவற்றின் சுருக்கமான விவரங்கள் கீழே  வழங்கப்பட்டுள்ளது.  (உதாரணங்களுடன் தெரிந்து கொள்ள விரும்பினால் பார்க்க https://theconsumerpark.com/consumer-rights/ ).

1.  பாதுகாப்பு உரிமை

நுகர்வோரின் உயிருக்கும் சொத்துக்களுக்கும் ஆபத்து விளைவிக்கக் கூடிய பொருட்களை அல்லது சேவையை சந்தையில் விற்பனை செய்வதற்கு எதிரான பாதுகாப்பு உரிமை ஒவ்வொரு நுகர்வோருக்கும் உள்ளது.  இதன் மூலம் உற்பத்தி குறைபாடு இல்லாத, தரமான, பாதுகாப்பான பொருட்கள் மற்றும் சேவைகளை பெறுவதற்கான உரிமைகள் நுகர்வோர்க்கு உண்டு.  

2.  தகவலறியும் உரிமை

நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நுகர்வோரைப் பாதுகாக்க, தயாரிப்புகள், பொருட்கள் அல்லது சேவைகளின் அளவு, தரம்,  தூய்மை, ஆற்றல் மற்றும் விலை குறித்து வாடிக்கையாளர்களுக்கு   உற்பத்தியாளர்கள் அல்லது சேவையை வழங்குபவர்கள் தெரிவிக்க வேண்டும் என்பதை   உறுதிப்படுத்துவதுதான் நுகர்வோரின் தகவல் அறியும்   உரிமையாகும். 

3.  தேர்வு செய்யும் உரிமை

போட்டி விலையில் பல்வேறு பொருட்கள், தயாரிப்புகள் அல்லது சேவைகளுக்கான அணுகலை உறுதி செய்வதற்கான உரிமையே நுகர்வோர்களின்  தேர்வு செய்வதற்கான உரிமையாகும். 

4.  கேட்க உரிமை

நுகர்வோரின் நலன் குறித்த கருத்துக்கள் அரசு அமைப்புகளில்  நுகர்வோரிடமிருந்து முறையாக கேட்கப்பட வேண்டும் என்ற உரிமை நுகர்வோர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.  

5.  தீர்வுக்கான உரிமை

தீர்வுக்கான உரிமை என்பது நுகர்வோருக்கு வழங்கப்பட்டுள்ள மிக முக்கியமான   ஒன்றாகும்.  இதன் மூலம் கட்டுப்படுத்தப்பட்ட வர்த்தக நடைமுறைகள், நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள் அல்லது நுகர்வோரின் நேர்மையற்ற சுரண்டலுக்கு எதிராக பரிகாரம் தேட நுகர்வோருக்கு உரிமை வழங்கப்பட்டுள்ளது.   

6.  நுகர்வோர் விழிப்புணர்வுக்கான உரிமை

நுகர்வோர் விழிப்புணர்வுக்கான உரிமை மூலமாக நுகர்வோர் பாதிக்கப்படுவதில் இருந்து தடுக்க இயலும் என்பதை கருத்தில் கொண்டு இந்த உரிமை நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் நமக்கு வழங்கப்பட்டுள்ளது.

மேற்கண்டவாறு ஆறு உரிமைகளும் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ளதை  மறு ஆய்வு செய்து நுகர்வோர் பாதுகாப்பு தொடர்புடைய முழுமையான உரிமைகளை நுகர்வோர்க்கு வழங்கும்    வகையில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் திருத்தப்பட்டு நுகர்வோர் உரிமைகளுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள உரிமைகள் அடங்கிய மறு வடிவம் (Redesigning Consumer Rights) வழங்கப்பட வேண்டும்.

  • விழிப்புணர்வுக்கான நுகர்வோரின் உரிமை (Consumers’ right to awareness):  நுகர்வோர் விழிப்புணர்வு கல்வியை அனைவருக்கும் வழங்க வேண்டியது அரசின் கடமையாகும்.
  • நுகர்வோர் பாதுகாப்புக்கான உரிமை (Right to Consumer Protection): ஜனநாயக நாட்டில் மக்கள் நல அரசாக செயல்படும் ஒவ்வொரு அரசும் நுகர்வோர்களுக்கு தேவையான பாதுகாப்பை வழங்க வேண்டியது அவசியமானதாகும்.
  • தெரிந்து கொள்ளும் உரிமை (Right to Know): நுகர்வோர் பணம் செலுத்தி வாங்க திட்டமிடும் பொருள் அல்லது சேவையைப் பற்றி தேவையான தகவல்களை தெரிந்து கொள்ளும் உரிமை நுகர்வோருக்கு முழுமையாக வழங்கப்பட வேண்டும்.
  • தேர்ந்தெடுக்கும் உரிமை (Right to Choose): எந்த பொருளை அல்லது சேவையை வாங்க வேண்டும் என்பதை தேர்வு செய்யும் உரிமை நுகர்வோருக்கு முழுமையானதாக இருக்க வேண்டும்.   அதனை முடிவு செய்வதற்கு உற்பத்தியாளரின் அல்லது விற்பனையாளரின் அல்லது சேவை வழங்குவோரின் நிர்பந்தம் நேரடியாகவோ, மறைமுகமாகவோ இருக்கக் கூடாது.
  • நுகர்வோர் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் உரிமை (Right to Prevention of Consumer Victimization):  எந்த ஒரு நுகர்வோரும் எத்தகைய பாதிப்புக்கும் உள்ளாகாமல் இருக்க தகுந்த முன்னேற்பாடுகளை செய்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கடமை மக்கள் நல  அரசினுடையதாகும்.  பாதிப்புகளை புரியும் விற்பனையாளர்கள், உற்பத்தியாளர்கள், சேவை புரிபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள தவறும் அரசை கேள்வி கேட்கும் உரிமை நுகர்வோருக்கு வழங்கப்பட வேண்டும்.
  • தவறான மற்றும் தவறாக வழி நடத்தும் விளம்பரங்களுக்கு எதிரான உரிமை  (Right against False and Misleading Advertisements): தவறான மற்றும் தவறாக வழிநடத்தும் விளம்பரங்களை முற்றிலும்  அகற்றிட அரசு தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள தவறினால் அவற்றை வலியுறுத்துவதற்கான உரிமை நுகர்வோர்களுக்கு உண்டு.
  • நியாயமற்ற வர்த்தக முறைக்கு எதிரான உரிமை (Right against Unfair Trade Practice): நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள் என வரையறை   செய்யப்பட்டுள்ளவற்றை எவரும் செய்யாதவாறு கண்காணிக்க வேண்டியது அரசின் கடமையாகும். அதனை செய்ய தவறினால் தக்க நடவடிக்கைகளை எடுக்கக் கோரி வலியுறுத்தும் உரிமை நுகர்வோருக்கு உண்டு.
  • இருண்ட வணிக முறைக்கு எதிரான உரிமை (Right against Dark Pattern Practice): இருண்ட வணிக நடைமுறைகள் எவை? என்பதற்கான வரையறைகளை நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் இணைத்து கண்காணிக்க வேண்டியது அரசின் கடமையாகும். அதனை செய்ய தவறினால் தக்க நடவடிக்கைகளை எடுக்கக் கோரி வலியுறுத்தும் உரிமை நுகர்வோருக்கு உண்டு.
  • கட்டுப்படுத்தப்பட்ட வணிக முறைக்கு எதிரான உரிமை (Right against restrictive trade practice): நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் கட்டுப்படுத்தப்பட்ட வணிக முறைகள் என வரையறை   செய்யப்பட்டுள்ளவற்றை எவரும் புரியாதவாறு கண்காணிக்க வேண்டியது அரசின் கடமையாகும்.  
  • நியாயமற்ற ஒப்பந்தத்திற்கு எதிரான உரிமை (Right against Unfair Contract): இதனை முற்றிலும் அகற்றிட நுகர்வோருக்கு முழு உரிமை உண்டு
  • குறைபாடுள்ள பொருட்களுக்கு எதிரான உரிமை (Right against Defective Goods): • குறைபாடுள்ள பொருள் எந்த ஒரு நுகர்வோருக்கும் விற்பனை செய்யப்படாமல் இருக்கும் வகையில் தகுந்த நடவடிக்கைகளை இந்திய தர நிர்ணய அமைப்பு (Bureau of Indian Standards) மேற்கொள்ள வேண்டியது அவசியமானது.
  • சேவை  குறைபாட்டிற்கு எதிரான உரிமை (Right against Deficiency in the Service): சேவை குறைபாட்டிற்கு எதிரான உரிமையை அரசு உறுதிப்படுத்தி நுகர்வோரை பாதுகாக்க வேண்டும்
  • அதிக விலை வசூலுக்கு எதிரான உரிமை (Right against Collection of Excessive Prices): ஒவ்வொரு பொருளுக்கும் சேவைக்கும் விலை நிர்ணயம், விலை கண்காணிப்பு, விலை  கட்டுப்பாடு போன்றவற்றை செய்ய வேண்டியது மக்கள் நல அரசின் கடமையாகும்.
  • நுகர்வோர் உரிமைகள் மீறப்படுவதால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உரிமை (Right to Victims of Violation of Consumer Rights): எந்த ஒரு நுகர்வோரும் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது   மக்கள் நல அரசின் கடமையாகும்.  இதனை செய்ய தவறும் போது பாதிக்கப்படும் நுகர்வோர் தீர்வு பெறுவதற்கு தகுந்த உதவியை வழங்க வேண்டியது அரசின் கடமையாகும்.
  • எளிதான அணுகலுடன் தீர்வுக்கான உரிமை (Right to Remedy with Easy Access): பாதிப்புக்கு உள்ளாகும் நுகர்வோர்   எளிதாக நுகர்வோர் நீதியைப் பெற அவர் வாழும் மாவட்டத்துக்குள்ளாகவே புகார் தாக்கல்  செய்து தீர்வை பெறும் வகையில் தீர்வுக்கான அமைப்புகள் இருக்க வேண்டும். குறிப்பாக மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில்   அனைத்து வழக்குகளிலும் நுகர்வோருக்கு நீதி வழங்கும் அதிகாரம் வழங்கப்பட வேண்டும்.
நுகர்வோர் பூங்கா
நுகர்வோர் பூங்கா
நுகர்வோர் பூங்காவின் படைப்பு

தொடர்புடைய கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்