spot_img
May 14, 2024, 9:57 am
spot_img

வழக்கு தாக்கல் செய்வதில் நுகர்வோருக்கு உள்ள சவால்கள்

நுகர்வோர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் என பொதுமக்களால் அழைக்கப்படும் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையங்களும் மாநில அளவில் மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையமும் தேசிய அளவில் தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையமும் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

மூன்று அம்சங்கள்

நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி நுகர்வோரால் தாக்கல் செய்யப்படும் புகார்கள் 90 நாட்களில் விசாரித்து முடிக்கப்பட வேண்டும். ரூபாய் ஐந்து லட்சம் வரை உள்ள பிரச்சனைகளுக்கு நுகர்வோர் நீதிமன்றங்களில் எவ்வித  கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என்பதோடு ரூபாய் ஐந்து  லட்சத்துக்கு மேல் உள்ள பிரச்சனைகளுக்கும் நீதிமன்ற கட்டணங்கள் நுகர்வோர் நீதிமன்றத்தில் கட்டணம் மிகக் குறைவாகவே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  நுகர்வோர் நீதிமன்ற விசாரணைகளில் சிக்கலான விசாரணை முறைகள் இல்லாமல் சுருக்க விசாரணை முறையில் வழக்கை தீர்க்கும் நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. இவ்வாறு, நுகர்வோர் நீதிமன்றங்களில் நீதியை   விரைவாகவும் (speedy) அதிக செலவில்லாமலும் (inexpensive) எளிய நடைமுறையிலும் (simple) பெற இயலும் வகையில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

சவால்கள்

நுகர்வோர்களின் உரிமைகளை பாதுகாக்க நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டு மூன்று அடுக்கு முறையிலான நுகர்வோர் நீதிமன்றங்கள் நாடு முழுவதும் ஏற்படுத்தப்பட்டுள்ள போதிலும்  100 நுகர்வோர்கள் பிரச்சனைகளை சந்திக்கும் போது அதில் சுமார் 4 நுகர்வோர் மட்டுமே உரிமைகளுக்காக நுகர்வோர் நீதிமன்றங்களை நாடுகின்றனர் என்று ஆய்வு அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.  இதற்குக் காரணம் நுகர்வோர் நீதிமன்றங்களில் நீதியை பெறுவதற்கு நுகர்வோர் சந்திக்கும் சவால்கள் ஆகும்.

விழிப்புணர்வு

மக்களிடையே நுகர்வோர் பாதுகாப்பு சட்ட விழிப்புணர்வு போதிய அளவு இல்லை.  இதனை மேம்படுத்த பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டக் கல்வி வழங்கப்பட வேண்டும். ஒவ்வொரு   கிராம ஊராட்சி அளவிலும், ஊராட்சி ஒன்றிய அளவிலும்,   பேரூராட்சி அளவிலும், நகர அளவிலும், மாநகராட்சிகளில் வார்டு அளவிலும் அரசு நுகர்வோர் பாதுகாப்பு குழுக்களை அமைத்து  விழிப்புணர்வை ஏற்படுத்த தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

பாதிப்பு

பாதிக்கப்பட்டவர் நேரடியாக நுகர்வோர் நீதிமன்றங்களில் புகார்  செய்யவும் அல்லது தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள் மூலம் புகார் செய்யவும் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் புகார் தாக்கல் செய்வதற்கும் அதற்கு பின்னர் வரும் விசாரணை நாட்களிலும் நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டிய சூழல் நுகர்வோருக்கு ஏற்படுவதால் நுகர்வோர் வாழ்வாதாரத்துக்காக செய்து வரும் வேலையில் பாதிப்பு ஏற்படுவதால் நுகர்வோர் புகார் தாக்கல் செய்ய யோசிக்கிறார்கள். 

சட்ட அறிவு

வழக்கு தாக்கல் செய்வதால் நேரம் வீணாவதோடு வேலையிலும் பாதிப்புகள் ஏற்படுகிறது என்றாலும் உரிமை மீறல்களுக்காக புகார் தாக்கல் செய்ய வேண்டும் என்ற மனநிலையில் உள்ளவர்கள் நீதிமன்றத்துக்கு வரும்போது வழக்கு தாக்கல் செய்யும் முறை மற்றும் வழக்கு நடத்தும் முறை ஆகியவற்றை  அறிந்து கொள்வதில் சிரமம் ஏற்படுகிறது.  எதிர் தரப்பில்   உற்பத்தியாளர்களுக்காக, விற்பனையாளர்களுக்காக, சேவை வழங்குபவர்களுக்காக வழக்கறிஞர்கள் ஆஜராகும் போது அவர்களை போன்ற சட்ட அறிவு நேரடியாக வழக்கு தாக்கல் செய்யும் தனி நபர்களுக்கு பெரும்பாலும் இருக்க இயலாது.

வழக்கறிஞர் தேர்வு

நேர இழப்பை குறைக்கவும் சட்ட அறிவு மிக்க வழக்கறிஞரை அமர்த்தவும் நுகர்வோர் முடிவு செய்து வழக்கறிஞரை நியமிக்க விரும்பினால் சிறந்த வழக்கறிஞரை அடையாளம் (identification of advocate) காண்பதிலும் வழக்கறிஞருக்கான கட்டணத்தை செலுத்துவதிலும் நுகர்வோருக்கு சிரமம் ஏற்படுகிறது.  நுகர்வோர் தமக்கு ஏற்ற ஒரு வழக்கறிஞரை அடையாளம் கண்டு அவருக்கு கட்டணத்தை செலுத்தி வழக்கு நடத்தும் போது எதிர் தரப்பினர் உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள், சேவை வழங்குவோராக (high income business class/corporates) இருக்கும் நிலையில் அவர்கள் அதிக கட்டணம் வாங்கும் மூத்த சட்ட நிபுணர்களை வழக்கறிஞர்களாக அவர்களுக்காக அமர்த்தி வழக்கு நடத்தும் போது வழக்கை தாக்கல்   செய்துள்ள  நுகர்வோர்   சில பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டியுள்ளது.

அச்சம்

செல்வந்தர்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் நடத்தும் வணிக  அமைப்புகள் மீது சாதாரண வர்க்கத்தை  சார்ந்த நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தால் தமக்கு ஏதாவது  நேரடியாக அல்லது மறைமுகமான மிரட்டல் வந்து விடுமோ என்ற அச்சத்தாலும் பலர் நுகர்வோர் உரிமைகள் பாதிக்கப்படும் போதும் நுகர்வோர் நீதிமன்றத்திற்கு   வருவதை தவிர்க்கிறார்கள்.

தீர்வுகள்

ஒரு குற்றம் நடக்கும் போது பாதிக்கப்பட்டவர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் சமர்ப்பித்தால் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு குற்றப்பத்திரிகையை காவல் அதிகாரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறார்.  பாதிக்கப்பட்டவர் தனியாக வழக்கறிஞர் வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஒவ்வொரு நீதிமன்றத்திலும் குற்றத்தால் பாதிக்கப்பட்டவருக்காக அரசு வழக்கறிஞர் பணியாற்றுகிறார். குற்றத்தால் பாதிக்கப்பட்டவருக்காக அரசு பணியாற்றி அவரது சட்ட உரிமைகளுக்காக நீதிமன்றத்தில் போராட்டம் நடத்துகிறது.

இதைப் போலவே, ஒவ்வொரு நுகர்வோர் நீதிமன்றத்திலும் நுகர்வோர் பாதுகாப்பு பிரிவு ஒன்று தொடங்கப்பட்டு அதில் ஆய்வாளர்களும் (Inspector of Consumer Protection) உதவியாளர்களும் நியமனம் செய்யப்பட வேண்டும். பாதிக்கப்படுவோர் நுகர்வோர் பாதுகாப்பு ஆய்வாளர்களிடம் புகார் சமர்ப்பித்தால் அதனை தேவையான ஆவணங்களை இணைத்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும் வகையில் புகாராக மாற்றி நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கை தாக்கல் செய்யும் பணியை நுகர்வோர் பாதுகாப்பு ஆய்வாளர்கள் செய்ய வேண்டும். நுகர்வோர் உரிமைக்கான சிறப்பு வழக்கறிஞர்கள் (special pleaders for consumer rights) நியமனம் செய்யப்பட்டு நுகர்வோர் ஆய்வாளர்களால் நுகர்வோருக்காக தாக்கல் செய்யும் வழக்குகளுக்கு அவர்கள் ஆஜராகி வழக்கு நடத்த வேண்டும். மேலும், நுகர்வோர் உரிமை ஆய்வாளர் மூலமாக அல்லாமல் நேரடியாக வழக்கு நடத்த விரும்புவர்கள் தனியாக வழக்கறிஞர் வைத்து அல்லது நேரடியாக புகார் தாக்கல் செய்யவும் அனுமதிக்கப்பட வேண்டும்.

நுகர்வோர் உரிமைகள் பாதிக்கப்படுவதில் நூறு நுகர்வோரில் நான்கு நுகர்வோர் மட்டுமே நீதிமன்றத்தை அணுகுகிறார்கள் என்ற நிலைமை மாற்றப்பட்டு அனைவருக்கும் நுகர்வோர் நீதி கிடைக்கும் வகையில் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமையாகும்.

நுகர்வோர் பூங்கா
நுகர்வோர் பூங்கா
நுகர்வோர் பூங்காவின் படைப்பு

தொடர்புடைய கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்