spot_img
November 21, 2024, 3:31 pm
spot_img

முதியவருக்கு ரூபாய் 10 லட்சம் இழப்பீடு + ஆவணங்களை வழங்க தவறும் ஒவ்வொரு நாளும் ரூபாய் ஐந்தாயிரம் இழப்பீடு 

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் வசித்து வருபவர் வேலுச்சாமி மகன் வி. நாகப்பன் (68). இவர் கடந்த 2017 அக்டோபர் மாதத்தில் உடுமலைப்பேட்டையில் இயங்கி வந்த குரு பைனான்ஸில் தமக்கு சொந்தமான சொத்துக்களின் அசல் ஆவணங்களை அடமானம் வைத்து பதிவாளர்   அலுவலகத்தில் பதிவு செய்து கொடுத்து ரூபாய் 20 லட்சம் கடன் பெற்றுள்ளார். நாகப்பன் கடன் பெற்ற சிறிது காலத்துக்குப் பிறகு குரு பைனான்ஸ் நிறுவனம் பந்தன் வங்கியுடன் இணைக்கப்பட்டு விட்டது.

கடந்த 2020 ஆம் ஆண்டில் கடன் பெற்ற முதியவரான நாகப்பனுக்கு உடல் நலப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. மருத்துவ செலவு செய்வதற்காக தமக்கு சொந்தமான நிலத்தை விற்க முடிவு செய்து நாகப்பன் பந்தன் வங்கியை அணுகி  கடன் பெற்ற பணம் மற்றும் வட்டியை செலுத்த தயாராக இருப்பதாகவும் ஆவணங்களை திருப்பி  தருமாறும் கேட்டுள்ளார். அப்போது அசல் ஆவணங்கள் வங்கியில் இல்லை என்பது அவருக்கு தெரியவந்துள்ளது. 

அசல் ஆவணங்களை தேடி கண்டுபிடித்து தருவதாக வங்கி   தெரிவித்த பின்னர் இரண்டு ஆண்டுகள் கடந்தும் வங்கி நிர்வாகம் தகுந்த பதிலை தெரிவிக்கவில்லை. இதனால் கடந்த 2023 ஜனவரி மாதத்தில் வங்கியின் மீது பாதிக்கப்பட்ட முதியவர் கோயம்புத்தூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கானது விரைவான விசாரணைக்காக நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்திற்கு கடந்த பிப்ரவரி மாதம் மாற்றம் செய்யப்பட்டது.

வழக்கு தாக்கல் செய்துள்ளவர் கடன் பெறும்போது அசல் ஆவணங்களை முந்தைய நிதி நிறுவனத்தில் சமர்ப்பிக்கவில்லை.  பலமுறை  அசல் ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு  கேட்டும்   தங்களுக்கும்   அசல் ஆவணங்களை ஒப்படைக்கவில்லை என்று வங்கியின் தரப்பில் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. 

இரு தரப்பு வாதங்களை கேட்ட நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ் தலைமையிலான அமர்வு கடந்த செவ்வாய்க்கிழமை வழங்கிய தீர்ப்பில் “கடன் பணத்தை செலுத்த தயாராக இருப்பதாகவும் ஆவணங்களை வழங்குமாறும் வழக்கு தாக்கல் செய்தவர் வங்கியை அணுகி கேட்ட பின்னர் வங்கி நிர்வாகம் ஆவணங்கள் காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் கொடுத்து ஆவணங்களை கண்டுபிடிக்க இயலவில்லை என்று காவல் நிலையத்தில் சான்றிதழ் பெற்றதோடு பதிவாளர் அலுவலகத்தில் நகல்களை பெற்றுள்ளது சாட்சியங்கள் மூலம் தெரிய வந்துள்ள நிலையில் அசல் ஆவணங்களை தங்களிடம் கடன் பெற்றவர் ஒப்படைக்கவில்லை என கூறும்   வாதம் ஏற்புடையது அல்ல என்பதால் வங்கியின் செயல் சேவை குறைபாடு” என தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட முதியவருக்கு வங்கி நிர்வாகம் நான்கு வார காலத்துக்குள் காவல் நிலையத்தில் பெற்ற ஆவணங்களை கண்டுபிடிக்க இயலவில்லை என்ற சான்றிதழையும் பதிவாளர் அலுவலகத்தில் பெற்ற ஆவணங்களின் நகல்களையும் வழங்க வேண்டும். தவறினால் காலதாமதம் செய்யும் ஒவ்வொரு நாளுக்கும் ரூ  5,000/- இழப்பீட்டை வாடிக்கையாளருக்கு வங்கி நிர்வாகம் வழங்க வேண்டும் என்று இந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. வங்கியின் சேவை குறைபாட்டால் பாதிக்கப்பட்ட முதியவருக்கு நான்கு வார காலத்துக்குள் ரூபாய்   10 லட்சம் இழப்பீடாக வழங்கவும் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

க.கதிர்வேல்
க.கதிர்வேல்
க.கதிர்வேல், ஊடகவியலார்

தொடர்புடைய கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்