spot_img
July 27, 2024, 11:48 am
spot_img

கணக்கில் இருந்து பணத்தை எடுத்துக் கொண்டு இன்சூரன்ஸ்க்கு பணம் செலுத்தாத வங்கி  

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே உள்ள தேவனாங்குறிச்சி கிராமத்தில் வசித்து வருபவர்   எஸ். குமார்.  இவரது சேமிப்பு கணக்கில் இருந்து இன்சூரன்ஸ்  நிறுவனத்துக்கு செலுத்துவதற்காக பிடித்தம் செய்த பணத்தை இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு செலுத்தாத வங்கி  அவருக்கு இழப்பீடு தர   நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஹரிணி இம்பக்ஸ் என்ற பெயரில் ஜவுளி தொழில் செய்து வந்த எஸ் குமார் ஈரோட்டில் உள்ள டி. சி. பி. வங்கியில் தொழில் அபிவிருத்திக்காக கடந்த 2018 ஆம் ஆண்டு வங்கியில் ரூபாய் 10 லட்சம் கடன் பெற்றுள்ளார்.  தொழில் பாதுகாப்புக்கு  இன்சூரன்ஸ் பாலிசி ஒன்றை எடுக்க வேண்டும் என்று கூறிய வங்கி நிர்வாகம் குமாரின் கணக்கிலிருந்து ரூ 35,535/-  ஐ  கடந்த 2018 ஆகஸ்ட் மாதத்தில் பிரிமிய  தொகையாக பிடித்தம்   செய்துள்ளனர்.  ஆனால், பல மாதங்கள் கடந்தும் பாலிசி வராததால் வங்கியை தொடர்பு கொண்ட போது பணத்தைப் பிடித்து ஐசிஐசிஐ லம்போர்ட் நிறுவனத்தில் செலுத்தி விட்டோம் என்றும் இனிமேல் அங்கு தான் பாலிசி வராதது குறித்து கேட்டுக் கொள்ள வேண்டும் என்றும் அலட்சியமாக பதில் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் முழு கடனையும் வங்கிக்கு செலுத்திய குமார்   கணக்கில் பணம் எடுத்துக் கொண்ட பிறகும் இன்சூரன்ஸ் பாலிசி   வழங்காதது குறித்து 2021 ஜூன் மாதத்தில் வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். உடனடியாக வங்கிக் கணக்கில் பிடித்தம் செய்யப்பட்ட ரூ 35,535/-  ஐ  டிமாண்ட்   டிராப்டாக அனுப்பி வைத்துள்ளது.  இருப்பினும் வங்கி கணக்கிலிருந்து இன்சுரன்ஸ்காக  பணத்தை பிடித்தம் செய்து கொண்டு அதனை இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு   செலுத்தாததால் வங்கி ஏமாற்றியதாக கூறி குமார் கடந்த 2021 ஆம் ஆண்டில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ் தலைமையிலான அமர்வு கடந்த அக்டோபர் மாதத்தில் வழங்கிய தீர்ப்பில் வங்கி செயல்பட்டுள்ள விதம் சேவை குறைபாடு என தெரிவித்துள்ளது.

வழக்கு தாக்கல் செய்தவரிடம் அவர் கடன் பெற்ற போது ரூ 35,535/-  ஐ   இன்சூரன்ஸ் பாலிசிக்கு   எடுத்துக்கொண்டு அதனை இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு செலுத்தியதற்கு எந்த ஆதாரத்தையும் இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு முகவராக செயல்பட்டுள்ள டி.சி.பி. வங்கி தாக்கல் செய்யவில்லை.  2018-ல்   பிடித்தம் செய்த பணத்தை 2021 -ல் வக்கீல் நோட்டீஸ் மூலம் கேட்டவுடனே வங்கி இன்சூரன்ஸ்காக செலுத்திய பிரிமிய திருப்பி கொடுத்துள்ளது.  இந்த பணத்தை இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் பெற்று வழங்கியதற்கு எவ்வித ஆதாரத்தையும் வங்கி சமர்ப்பிக்கவில்லை.  இதன் மூலம்   வாடிக்கையாளரிடம் பணத்தைப் பிடித்துக் கொண்டு இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு முறையாக பணத்தை வங்கி   செலுத்த தவறியது நிரூபிக்கப்பட்டுள்ளது என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.  

இதனால் வழக்கு தாக்கல் செய்தவருக்கு நான்கு வார காலத்துக்குள் இழப்பீடாக ரூபாய் 2 லட்சமும் வழக்கு செலவு தொகையாக ரூபாய் 20 ஆயிரமும் வழங்க நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.   வங்கிகளில் கடன் வாங்கும் ஒவ்வொருவரும் கடனை பெறும்போது இன்சூரன்ஸ் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று வங்கிகள் நிர்ப்பந்தம் செய்து பிரிமிய  தொகையை பிடித்தம் செய்தால் அவ்வாறு பணத்தை வங்கி எடுத்துக் கொண்ட ஒரு மாத காலத்துக்குள் இன்சூரன்ஸ் செய்யப்பட்டதற்கான பாலிசி அல்லது ஆதாரத்தை வங்கியிடமிருந்து கேட்டு பெறுவது  அவசியமாகும்.

சாஜ். ம
சாஜ். ம
சாஜ். ம, வழக்கறிஞர்/ சட்டக் கல்லூரி விரிவுரையாளர்

தொடர்புடைய கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்