பொதுவாக, தொழில் செய்வதற்கும் வீட்டுக் கடன், வாகன கடன் போன்றவற்றிற்கும் வங்கிகளிலும் நிதி நிறுவனங்களிலும் கடன் பெறுவது வாடிக்கையான ஒன்றாகும். இவ்வாறு கடன் பெற வங்கிகளையும் நிதி நிறுவனங்களையும் அணுகும் போது கடன் பெறுபவரின் சொத்துக்களை சுவாதீனம் இல்லாமல் அடமானம் வைத்து சொத்துக்களின் அசல் ஆவணங்களை ஒப்படைப்பு செய்து அதற்கான ஆவணத்தை சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து கொடுத்து கடன் பெறுவது வழக்கமான ஒன்றாகவே உள்ளது. இவ்வாறு ஒப்படைக்கப்பட்ட ஆவணங்களை கடன் தொகையை செலுத்திய பின்னர் திரும்பப் பெறுவதில் பல சிக்கல்கள் நுகர்வோருக்கு ஏற்படுகின்றன. ஏற்படும் பிரச்சினைகள் பற்றியும் பிரச்சனைகளை தவிர்க்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் விளக்குவதே இந்த கட்டுரையின் நோக்கமாகும்.
உதாரண வழக்கு – 1
நீலகிரி, இத்தலார், நியூ ஹட்டியில் வசிக்கும் சிவராஜ் கடந்த 2004 ஆம் ஆண்டு கனரா வங்கியில் வீட்டுக் கடனாக ரூபாய் 5 லட்சம் பெற்றுள்ளார். கடந்த 2013 ஆம் ஆண்டு சிவராஜ் இறந்து விட்டார். அவரது வாரிசுகள் வங்கியில் தந்தை பெற்றிருந்த கடன் தொகை முழுவதையும் 2016 ஆம் ஆண்டு செலுத்தி விட்டனர். ஆனால், வங்கி கடன் பெறும்போது சமர்ப்பிக்கப்பட்ட அசல் ஆவணங்களை திரும்ப வழங்காமல் காலதாமதம் செய்து வந்துள்ளது. ஆறு ஆண்டுகள் காத்திருந்து விட்டு ஆவணங்களை வங்கி தராததால் வங்கியின் மீது இறந்தவரின் வாரிசுகள் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். இந்த வழக்கானது விசாரணைக்காக கோயம்புத்தூரில் இருந்து நாமக்கல்லுக்கு மாற்றம் செய்யப்பட்டு நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ் தலைமையிலான அமர்வு அவரது கடந்த ஜூன் மாதத்தில் வழங்கிய தீர்ப்பின் விவரம் பின் வருமாறு.
“வீடு கட்டுவதற்கு வழக்கு தாக்கல் செய்தவரின் தந்தை சிவராஜ் கடன் வாங்கிய போது அவரால் சமர்ப்பிக்கப்பட்ட அசல் ஆவணங்களை அல்லது மேற்படி ஆவணங்கள் காணாமல் போயிருந்தால் சம்பந்தப்பட்ட ஆவணங்களின் சான்றிட்ட நகல்களை சார் பதிவகத்தில் பெற்று வங்கியில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் காணாமல் போய்விட்டது என்ற சான்றிதழோடு அவற்றை நான்கு வார காலத்திற்குள் இறந்து போன சிவராஜ் அவர்களின் வாரிசுகளிடம் வழங்க வேண்டும். வழக்கு தாக்கல் செய்தவருக்கு சேவை குறைபாட்டின் தன்மையை கருதி இழப்பீடாக வழக்கு தாக்கல் செய்தருக்கு வங்கி ரூபாய் 5 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும்”.
உதாரண வழக்கு – 2
சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள நாரப்பன் சாவடியில் வசிக்கும் சக்திவேல் மனைவி ருக்மணி, சக்திவேல் மகன் எஸ். சந்தோஷ் குமார் ரெப்கோ ஹோம் பைனான்ஸ் -ல் கடந்த 2011 ஆம் ஆண்டில் தங்களுக்கு சொந்தமான ஒரு சொத்தின் அசல் ஆவணங்களை வங்கியில் ஒப்படைத்து ரூபாய் 11 லட்சம் கடனாக பெற்றுள்ளார்கள். மீண்டும் 2016 ஆம் ஆண்டு தங்களுக்கு சொந்தமான மற்றொரு சொத்தின் அசல் ஆவணங்களை வங்கியில் ஒப்படைத்து ரூபாய் 12 லட்சம் கடன் பெற்றுள்ளார்கள்.
கடந்த 2018 ஏப்ரல் மாதத்தில் முதலாவது வாங்கிய கடனையும் வட்டியும் திருப்பி செலுத்திய நிலையில் முதலாவதாக சமர்ப்பிக்கப்பட்ட அசல் ஆவணங்களை வங்கியில் கேட்டபோது இரண்டாவது வாங்கிய கடனையும் செலுத்தினால்தான் தருவதாக தெரிவித்து விட்டார்கள். கடந்த 2022 ஜூன் மாதத்தில் இரண்டாவது வாங்கிய கடனையும் வட்டியும் செலுத்தி விட்டு அசல் ஆவணங்களை கேட்டபோது கடன் நிலுவையில் இல்லை என்ற சான்றை வழங்கிவிட்டு அசல் ஆவணங்களை ஒரு வாரத்தில் தருவதாக வங்கி நிர்வாகம் தெரிவித்த நிலையில் ஆறு மாதங்களுக்கு மேலாகவும் அவற்றை திருப்பித் தரவில்லை. கடன் பெற்றவர்கள் பல முறை புகார் செய்த பின்னர் ஆவணங்கள் காணவில்லை என்ற பதில் வங்கியின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ருக்மணியும் சந்தோஷ் குமாரும் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். இதனை விசாரித்து 2023 ஜூலை மாதத்தில் நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் வங்கி நிர்வாகம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து ஆவணங்களை கண்டுபிடிக்கவில்லை என்ற சான்றிதழை பெற்று அந்த சான்றிதழையும் பதிவாளர் அலுவலகத்தில் அசல் ஆவணத்தின் நகல்களை பெற்று அவற்றையும் நான்கு வார காலத்துக்குள் வழக்கு தாக்கல் செய்தவர்களுக்கு வழங்குவதோடு வழக்கின் தன்மையை கருதி சேவை குறைபாட்டிற்கு இழப்பீடாக ரூ 50,000/- வழங்கவும் உத்தரவிட்டது.
உதாரண வழக்கு – 3
கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் வசித்து வருபவர் வேலுச்சாமி மகன் வி. நாகப்பன் (68) 2017 ஆம் ஆண்டு தமக்கு சொந்தமான சொத்துக்களின் அசல் ஆவணங்களை அடமானம் வைத்து நிதி நிறுவனத்தில் ரூபாய் 20 லட்சம் கடன் பெற்றிருந்தார். வயது முதிர்ச்சி அடைந்து விட்டதாலும் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டதாலும் மருத்துவச் செலவுக்காக சொத்தை விற்க எண்ணி கடந்த 2020 ஆம் ஆண்டில் சொத்தை வாங்க ஒருவரை ஏற்பாடு செய்து அவருடன் கடனை செலுத்த உடுமலைப்பேட்டையில் உள்ள பந்தன் வங்கிக்கு சென்றுள்ளார். அப்போது வங்கியில் தம்மால் சமர்ப்பிக்கப்பட்ட அசல் ஆவணங்கள் இல்லை என்பது அவருக்கு தெரிய வந்துள்ளது.
இரண்டு ஆண்டுகளாக வங்கிக்கு அலைந்தும் அசல் ஆவணங்களை தேடி கண்டுபிடித்து வங்கி நிர்வாகம் தரவில்லை என்பதோடு வாங்கிய கடனுக்கு தொடர்ந்து வட்டியையும் கணக்கில் சேர்த்துக் கொண்டுள்ளது. பாதிக்கப்பட்ட முதியவர் கோயம்புத்தூரில் வழக்கு தாக்கல் செய்து விரைவான விசாரணைக்காக நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. இந்த வழக்கில் அசல் ஆவணங்கள் தங்களிடமும் ஒப்படைக்கப்படவில்லை என்று வங்கியின் தரப்பில் நீதிமன்றத்தில் வாதிட்டது வழக்கு தாக்கல் செய்த முதியவருக்கு இன்னும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ் தலைமையிலான அமர்வு கடந்த சில தினங்களுக்கு முன்பு வழங்கிய தீர்ப்பில் “கடன் பணத்தை செலுத்த தயாராக இருப்பதாகவும் ஆவணங்களை வழங்குமாறும் வழக்கு தாக்கல் செய்தவர் வங்கியை அணுகி கேட்ட பின்னர் வங்கி நிர்வாகம் ஆவணங்கள் காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் கொடுத்து ஆவணங்களை கண்டுபிடிக்க இயலவில்லை என்று காவல் நிலையத்தில் சான்றிதழ் பெற்றதோடு பதிவாளர் அலுவலகத்தில் நகல்களை பெற்றுள்ளது சாட்சியங்கள் மூலம் தெரிய வந்துள்ள நிலையில் அசல் ஆவணங்களை தங்களிடம் கடன் பெற்றவர் ஒப்படைக்கவில்லை என கூறும் வாதம் ஏற்புடையது அல்ல என்பதால் வங்கியின் செயல் சேவை குறைபாடு” என தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட முதியவருக்கு வங்கி நிர்வாகம் நான்கு வார காலத்துக்குள் காவல் நிலையத்தில் பெற்ற ஆவணங்களை கண்டுபிடிக்க இயலவில்லை என்ற சான்றிதழையும் பதிவாளர் அலுவலகத்தில் பெற்ற ஆவணங்களின் நகல்களையும் வழங்க வேண்டும். தவறினால் காலதாமதம் செய்யும் ஒவ்வொரு நாளுக்கும் ரூ 5,000/- இழப்பீட்டை வாடிக்கையாளருக்கு வங்கி நிர்வாகம் வழங்க வேண்டும் என்று இந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. வழக்கின் தன்மையை கருதி வங்கியின் சேவை குறைபாட்டால் பாதிக்கப்பட்ட முதியவருக்கு ரூபாய் 10 லட்சம் இழப்பீடாக நான்கு வார காலத்துக்குள் வழங்கவும் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரச்சனைகள்
இங்கு கொடுக்கப்பட்ட வழக்கு விபரங்கள் சில உதாரணங்களே. ஆவணங்களை வங்கிகளும் நிதி நிறுவனங்களிலும் சமர்ப்பித்து கடன் பெற்று விட்டு அதனை திரும்பப் பெறும்போது பலர் பலவகையான சிரமங்களுக்கு உள்ளாகிறார்கள். ஆவணங்கள் வங்கியில் அல்லது நிதி நிறுவனங்களில் காணாமல் போவது ஒருவகையான பிரச்சனை என்றால் மற்றொரு வகையான பிரச்சனை கடனை திருப்பி செலுத்திய பின்னரும் ஆவணங்கள் தலைமையகத்தில் இருந்து வர வேண்டும் என்று வருடக் கணக்கில் இழுத்தடிக்கும் கொடுமையும் பலருக்கு நடைபெறுகிறது. இன்னும் சிலருக்கு நீங்கள் கடன் வாங்கும் போது வேறொரு நபருக்கு ஜாமீன் கையொப்பம் செய்தீர்கள். அதனால் அவரும் கடனை செலுத்தாமல் ஆவணங்களை தர முடியாது என்ற பிரச்சனை ஏற்படுகிறது. இன்னும் சிலருக்கு நிதி நிறுவனங்கள், வங்கியின் தரப்பில் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தினால் ஒரு முறை கடன் தீர்க்கும் திட்டத்தின் (one time settlement) கீழ் கடனை முடித்து விடுவோம் என்று வாக்குறுதி கொடுத்துவிட்டு நிதி நிறுவனங்கள், வங்கி கூறிய தொகையை செலுத்திய பின்னர் இன்னும் கூடுதல் தொகையை செலுத்தினால்தான் ஆவணங்களை தர முடியும் என்று நிதி நிறுவனங்கள்,வங்கிகள் கூறும் அனுபவங்களும் ஏற்படுகின்றன.
முன்னெச்சரிக்கை
வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் கடன் பெறும்போது அசல் ஆவணங்களை சமர்ப்பித்தால் சமர்ப்பிக்கப்படும் ஆவணங்கள் அனைத்தையும் குறிப்பிட்டு அவற்றை வங்கி அல்லது நிதி நிறுவனம் பெற்றுக் கொண்டதாக ஒப்புகைச் சீட்டை கடன் பெறுபவர் கேட்டு பெறுவது அவசியமானதாகும்.
கடனை ஒரே தவணையில் செலுத்தி முடிக்கும் ஒரு முறை கடன் தீர்க்கும் திட்டத்தின் (one time settlement) கீழ் கடனை செலுத்துவதற்கு முன்பாக வங்கி அல்லது நிதி நிறுவனத்திடம் எவ்வளவு தொகை செலுத்தினால் கடன் முடிக்கப்படும்? என்று கடிதம் கேட்டு வாங்கிய பின்னர் கடன் பெற்றவர் கடன் தொகையை முழுவதுமாக செலுத்துவது நல்லது.
கடனை செலுத்திய பின்னரும் ஆவணங்களை தர மறுப்பது, சமர்ப்பித்த ஆவணங்களை தொலைத்து விட்டு முறையற்ற பதிலை தெரிவிப்பது போன்ற பிரச்சனைகள் தங்களுக்கு ஏற்பட்டால் தீர்வுகளுக்காக உங்கள் மாவட்டத்தில் உள்ள மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தை அணுக காலதாமதம் செய்யாதீர்கள்.