திருச்சூர் சிவில் நிலையத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) கிளை வாடிக்கையாளருக்கு டெபிட் கார்டை தாமதமாக வழங்கியது சேவை குறைபாடு என்று திருச்சூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்துள்ளது.
திருச்சூர் மாவட்டம், பி.ஓ.அய்யந்தோல் கிராமத்தில் வசிப்பவர் இ.பி. ஜேம்ஸ். பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ)-யின் திருச்சூர் சிவில் ஸ்டேஷன் கிளையில் வங்கி கணக்கு வைத்துள்ளார். அவரது முந்தைய டெபிட் கார்டு காலாவதியானதால், ஜூலை 4, 2022 அன்று புதிய டெபிட் கார்டுக்கு விண்ணப்பித்துள்ளார். டெபிட் கார்டை வழங்குமாறு பலமுறை வங்கியை இ.பி. ஜேம்ஸ் தொடர்பு கொண்டும் அவருக்கு டெபிட் கார்டு வாங்கியால் உரிய காலத்தில் வழங்கப்படவில்லை. இதனால், அவர் கடந்த 2022 நவம்பர் 10 அன்று டெபிட் கார்டு உடனடியாக வழங்குமாறும் தவறினால் தாமதம் ஏற்படும் ஒவ்வொரு மாதத்திற்கும் ரூபாய் பத்தாயிரம் இழப்பீடு வழங்குமாறும் வங்கிக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.
வங்கியின் வாடிக்கையாளரான இ.பி. ஜேம்ஸ்க்கு இறுதியாக நவம்பர் 16, 2022 அன்று டெபிட் கார்டு வழங்கப்பட்டு விட்டது. ஆனால், டெபிட் கார்டு வழங்குவதற்கு ஏற்பட்ட காம காலதாமதத்திற்கு இழப்பீடு எதுவும் வங்கியால் வழங்கப்படவில்லை. குறைந்தபட்சம் கார்டு வழங்குவதில் ஏற்பட்ட தாம்பரத்திற்கு தாமதத்திற்கு வருத்தமோ அல்லது காரணமோ வங்கியின் தரப்பில் தெரிவிக்கப்படவில்லை. இதனால், மன உளைச்சலுக்கு உள்ளான வங்கியின் வாடிக்கையாளர் கடந்த 2023 ஜனவரி மாதத்தில் திருச்சூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வங்கியின் மீது வழக்கு தாக்கல் செய்தார்.
வழக்கு தாக்கல் செய்தவர் நீதிமன்றத்தில் புகாரில் தெரிவித்துள்ள நாளில் டெபிட் கார்டு கேட்டு விண்ணப்பிக்க வில்லை என்றும் நீதிமன்றத்தில் அவர் தெரிவிப்பது போல எவ்வித மின்னஞ்சலும் தங்களுக்கு அனுப்பவில்லை என்றும் இருப்பினும் டெபிட் கார்டு அவருக்கு தங்கள் தரப்பில் அனுப்பப்பட்டது என்றும் அவரது முகவரியில் டெபிட் கார்டு சென்ற நாளில் அவர் இல்லாததால் டெபிட் கார்டு திரும்ப வந்துவிட்டது என்றும் டெபிட் கார்டு நிறுவனத்தை வழக்கு தாக்கல் செய்துள்ளவர் வழக்கில் தரப்பினராக சேர்க்கவில்லை என்றும்வங்கியின் தரப்பில் நுகர்வோர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.
வழக்கு தாக்கல் செய்துள்ளவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள சாட்சியம் மற்றும் ஆவணங்களை பார்க்கும் போது வங்கியின் தரப்பில் டெபிட் கார்டு வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால், வங்கியின் தரப்பில் சேவை குறைபாடு ஏற்பட்டுள்ளதாக திருச்சூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் கடந்த வாரம் தீர்ப்பளித்துள்ளது. டெபிட் கார்டு வழங்கும் நிறுவனத்துக்கும் வங்கியின் வாடிக்கையாளருக்கும் தொடர்பு இல்லை என்றும் வங்கிக்கும் வாடிக்கையாளருக்கு மட்டுமே ஒப்பந்தம் உள்ளது என்றும் இதனால் டெபிட் கார்டு நிறுவனத்தை சேர்க்காதது தவறு என்ற வங்கியின் வாதம் ஏற்புடையது அல்ல என்று நுகர்வோர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
வங்கி புரிந்த சேவை குறைபாட்டால் வழக்கு தாக்கல் செய்த நுகர்வோருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் சிரமங்களுக்கு இழப்பீடாக ரூ 10,000/- வழக்கின் செலவு தொகையாக ரூ 5,000/- ஆகியவற்றை ஆண்டொன்றுக்கு 9 சதவீத வட்டியுடன் வழக்கு தாக்கல் செய்த வங்கியின் வாடிக்கையாளருக்கு வழங்க வேண்டும் என்றுமாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கட்டுரையாளர் முனைவர் பிரபாகர் திருநெல்வேலியில் பணியாற்றும் மூத்த வழக்கறிஞர் – நுகர்வோர் உரிமைகளுக்காக 25 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருபவர்
நுகர்வோர் பூங்கா (The Consumer Park) கருத்து:
இந்தியா முழுவதும் வங்கிகள் மீது பல்வேறு வகையான சேவை குறைபாடு குறித்த வழக்குகள் நுகர்வோர் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இத்தகைய சேவை குறைபாடுகளை முழுமையாக நீக்க தகுந்த நடவடிக்கைகளை மத்திய நிதி அமைச்சகம் மேற்கொள்ள வேண்டியது அவசியமான ஒன்றாகும்.