spot_img
December 27, 2024, 4:27 am
spot_img

தன்னுடைய வழக்குக்கு தானே நீதிபதியாக இருக்க முடியாது. அரசுகள் நடைமுறையை மாற்ற வேண்டும்.

கடந்த ஜூன் முதல் வாரத்தில் மத்திய நிர்வாக தீர்ப்பாயம் (Central Administrative Tribunal) வழங்கிய உத்தரவு ஒன்றில் தீர்ப்பாயங்கள் அரசின் பிரிவு அல்ல (not a wing of Govt.)  என தெரிவித்துள்ளது. இந்திய அரசின் பணியாளர் சீர்திருத்த துறையின் கீழ் இயங்கும் மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் இத்தகைய கருத்தை தெரிவித்து இருப்பது முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. 

நீதிமன்றங்களில் வழக்குகள் அதிகரிப்பதை குறைக்கவும் விரைவான தீர்வை வழங்கவும் அவசியமானது என கருதப்பட்டு நீதிமன்றங்களை போல பல தீர்ப்பாயங்கள் இந்தியாவில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.   மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இராணுவ தீர்ப்பாயம் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் பசுமை தீர்ப்பாயம், ரயில்வே அமைச்சகத்தின் கீழ்   ரயில் விபத்து இழப்பீட்டு கோரிக்கை தீர்ப்பாயம் என சுமார் 50 தீர்ப்பாயங்கள் மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வருகின்றன.

இதைப் போலவே மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறையின் கீழ் குழந்தைகள் ஆணையம், பணியாளர் சீர்திருத்த துறையின் கீழ் மத்திய தகவல் ஆணையம், உணவு மற்றும் நுகர்வோர் அமைச்சகத்தின் கீழ் தேசிய நுகர்வோர் ஆணையம் உள்ளிட்ட பல ஆணையங்கள் மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வருகின்றன. ஓரிரு ஆணையங்கள் மற்றும் தீர்ப்பாயங்களை தவிர மற்றவை அனைத்தும் எந்த துறை தொடர்பான குறைபாடுகளையும் பிரச்சனைகளையும் விசாரிக்கிறதோ அதே துறையின் கீழ் அந்த ஆணையங்களும் தீர்ப்பாயங்களும் செயல்படுகிறது என்பதுதான் முக்கியமாக பார்க்க வேண்டியதாகும்.

தீர்ப்பாயங்களுக்கும் ஆணையங்களுக்கும் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது என சொல்லப்பட்டாலும் கூட நிதி ஒதுக்கீடு. பணியிட மாற்றங்கள், ஒழுங்கு நடவடிக்கைகள் போன்ற கட்டுப்பாடுகள் சம்பந்தப்பட்ட துறைகளின் வசம் உள்ளது. இத்தகைய சூழ்நிலையில் தீர்ப்பாயங்கள் மற்றும்  ஆணையங்களில் தலைவராக, உறுப்பினராக பணியாற்றுபவர்கள் சுதந்திரமாக செயல்படும் செயல்பட இயலுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. தனது துறை சார்ந்த பிரச்சினைகளை கையாளும் தீர்ப்பாயங்களும் ஆணையங்களும் அதே துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் போது சம்பந்தப்பட்ட கட்டுப்படுத்தும் துறையின் அலுவலர்களுக்கு உத்தரவிட சம்பந்தப்பட்ட தீர்ப்பாயங்களும் ஆணையங்களும் யோசிக்கும் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது.

ஒரு நீதிபதி தனது வழக்கிற்கு நீதிபதியாக செயல்பட முடியாது என்பது இயற்கை நீதி தத்துவமாகும். இந்நிலையில் இந்தியா முழுவதும் செயல்படும் தீர்ப்பாயம் மற்றும் ஆணையங்களை சம்பந்தப்பட்ட துறைகளின் கட்டுப்பாட்டில் வைக்காமல் மத்திய அரசின் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகத்தின் கீழ் ஆணையங்கள் மற்றும் தீர்ப்பாயங்களுக்கான தனித்துறையை ஏற்படுத்த வேண்டும் அல்லது ஆணையங்கள் மற்றும்  தீர்ப்பாயங்களை கையாள உரிமைகள் பாதுகாப்புத்துறை ஒன்றை ஏற்படுத்தி நேரடியாக பிரதம அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும். 

மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஆணையங்களிலும் மற்றும் தீர்ப்பாயங்களிலும் இதே நிலைதான் உள்ளது.  தமிழக அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறையின் கீழ் மாநில குழந்தைகள் ஆணையமும் மாநில மகளிர் ஆணையமும் செயல்படுகிறது இதே போலவே தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையமும் தாழ்த்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் மாநில தாழ்த்தப்பட்டோர் ஆணையமும் மின்சார துறையின் கீழ் மின்சார ஒழுங்குமுறை ஆணையமும் செயல்படுகிறது இதை போல சம்பந்தப்பட்ட துறைகளின் கீழ் சம்பந்தப்பட்ட ஆணையங்களும் தீர்ப்பாயங்களும் தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது. 

உதாரணமாக, மாநில அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை செயலாளர் மீது  குழந்தைகள் உரிமை மீறல் தொடர்பான ஒரு புகாரை  அந்தத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் மாநில குழந்தைகள் ஆணையத்தில் சமர்ப்பித்தால் குழந்தைகள் ஆணையம் எவ்வாறு நியாயமாக செயல்படும் என்று எதிர்பார்க்க முடியும்?. இதே உதாரணத்தை தான் மற்ற ஆணையங்களுக்கும் தீர்ப்பாயங்களுக்கும் மாநில அளவிலும் பொருத்திப் பார்க்க வேண்டும். 

தமிழக அரசும் அரசு துறைகளின் கீழ் செயல்படும் பல்வேறு ஆணையங்கள் மற்றும் தீர்ப்பாயங்களை சம்பந்தப்பட்ட துறையின் கட்டுப்பாட்டில் இருந்து நீக்கி மாநில அரசின் முதலமைச்சருக்கு கீழ் நேரடியாக செயல்படும் பொது துறையின் கீழ் செயல்படுமாறு கொண்டு வர வேண்டும் அல்லது ஆணையங்கள் மற்றும்  தீர்ப்பாயங்களை கையாள உரிமைகள் பாதுகாப்புத்துறை ஒன்றை ஏற்படுத்தி நேரடியாக முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் இதன் மூலம் ஆணையங்களிலும் தீர்ப்பாயங்களிலும் புகார் செய்யும் பொதுமக்கள் நியாயமான தீர்வுகளை பெற இயலும் என்ற நம்பிக்கையை பெறுவார்கள்.

தொடர்புடைய கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்