இந்தியர்கள் எங்கும் செல்லலாம்
அரசியலமைப்பின் 19 ஆம் கோட்பாட்டின்படி குடிமக்களுக்கு ஏழு வகையான சுதந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்தியர்கள் இந்தியாவில் எந்தப் பகுதிக்கும் சுதந்திரமாக செல்லலாம் என்பது அந்த சுதந்திரங்களில் ஒன்றாகும். இந்தியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மற்றொரு சுதந்திரம் என்னவெனில் இந்தியர்கள் இந்தியாவில் எந்தப் பகுதியிலும் சென்றும் வசிக்கலாம். ஆனால், பொதுமக்களின் நலனுக்காக அல்லது பழங்குடியினரின் பாதுகாப்பிற்காக இந்தியர்களுக்கான இந்தியாவிற்குள் எந்த ஒரு பகுதிக்கும் நடமாடும் உரிமையையும் வசிக்கும் உரிமையையும் கட்டுப்படுத்த அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றும் இந்திய அரசியலமைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள் நுழைவு அனுமதி
கடந்த 1824-26 ஆம் ஆண்டுகளில் ஆங்கில – பர்மா (Anglo Burmese War) போரில் கிழக்கு இந்தியாவில் அஸ்ஸாமை கைப்பற்றிய ஆங்கிலேயர்கள் கடந்த 1873 ஆம் ஆண்டு கிழக்கு வங்காள எல்லை நெறிமுறைகள் சட்டத்தை (Bengal Eastern Frontier Regulation Act, 1873) கொண்டு வந்தனர். இந்த சட்டத்தின்படி அருணாச்சலப் பிரதேசம், மிசோரம், நாகலாந்து ஆகிய பகுதிகளில் ஆங்கிலேய ஆட்சியாளர்களால் உள் நுழைவுச் சீட்டு முறை அமல்படுத்தப்பட்டது. .அங்கு வாழும் பழங்குடியின மக்களின் பண்பாடு மற்றும் தனித் தன்மையை கருத்தில் கொண்டு அந்த பகுதிகளை சாராத இந்தியர்கள் அங்கு நுழையவும் வசிக்கவும் அரசின் அனுமதியை பெற வேண்டும். இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னரும் இந்தியர்கள் குறிப்பிட்ட அருணாச்சலப் பிரதேசம், மிசோரம், நாகலாந்து ஆகிய மாநிலங்களில் செல்வதற்கு உள் நுழைவு அனுமதியை (Inner Line Permit) பெற வேண்டும் என்ற நிலை நீடிக்கிறது.
அருணாச்சல பிரதேசம்
அருணாச்சல பிரதேச மாநிலத்திற்குள் நுழையும் இந்தியர்களுக்கு தற்காலிகமாக 15 நாட்களுக்கு மாநிலத்துக்குள் இருப்பதற்கு உள் நுழைவு அனுமதி சீட்டு வழங்கப்படுகிறது. அங்கு வேலைக்கு செல்லுபவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் ஓராண்டுக்கு உள்நுழைவு அனுமதி சீட்டு வழங்கப்படுகிறது. அருணாச்சல பிரதேசம் மாநிலத்துக்குள் அசாம் மற்றும் நாகலாந்து மாநிலங்கள் வழியாகத்தான் நுழைய முடியும். இந்த மாநில எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளில் அருணாச்சல பிரதேசத்துக்குள் செல்வதற்கான உள் நுழைவு அனுமதிச்சீட்டு பரிசோதிக்கப்படுகிறது.
மிசோரம்
மிசோரம் மாநிலத்திற்குள் நுழையும் இந்தியர்களுக்கு தற்காலிகமாக 15 நாட்களுக்கு மாநிலத்துக்குள் இருப்பதற்கு உள் நுழைவு அனுமதி சீட்டு வழங்கப்படுகிறது. தேவைப்பட்டால் இந்த உள் நுழைவு அனுமதி மீண்டும் 15 நாட்களுக்கு நீட்டித்து வழங்கப்படுகிறது. மிசோரம் மாநில மக்கள் அல்லது அரசு அங்கீகரித்தால் வெளி மாநிலத்தவர்களுக்கு ஆறு மாதங்களுக்கும் தேவைப்பட்டால் மீண்டும் ஆறு மாதங்களுக்கும் உள் நுழைவு அனுமதி சீட்டு மிசோரத்தில் வழங்கப்படுகிறது. மிசோரத்துக்கு விமானம் வழியாக வருபவர்களுக்கு லங்கபுரி விமான நிலையத்தில் உள்நுழைவு அனுமதித்து பெற்றுக் கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மிசோரத்துக்குள் நுழைய மாநில எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளில் உள் நுழைவு அனுமதிச்சீட்டு பரிசோதிக்கப்படுகிறது.
நாகாலாந்து
வேறு மாநிலத்தைச் சார்ந்தவர்களுக்கு முப்பது நாட்கள் வரையிலும் தொழிலாளர்களுக்கு 90 நாட்கள் வரையிலும் மாணவர்களுக்கு 90 நாட்கள் வரையிலும் வணிகர்களுக்கு 90 நாட்கள் முதல் 365 நாட்கள் வரையிலும் நாகலாந்தில் உள் நுழைவு அனுமதி சீட்டு வழங்கப்படுகிறது.
மணிப்பூர்
மணிப்பூர் மாநிலத்திற்குள் மற்ற மாநிலத்தவர்கள் நுழைவதற்கு உள் நுழைவுச்சீட்டு முறை கடந்த 2019 டிசம்பர் 11 ஆம் தேதி முதல் இந்திய அரசால் அமல்படுத்தப்பட்டுள்ளது. மணிப்பூர் மாநிலத்திற்குள் நுழையும் இந்தியர்களுக்கு தற்காலிகமாக 30 நாட்களுக்கு மாநிலத்துக்குள் இருப்பதற்கு உள் நுழைவு அனுமதி சீட்டு வழங்கப்படுகிறது. தேவைப்பட்டால் இந்த உள் நுழைவு அனுமதி மீண்டும் 60 நாட்களுக்கு நீட்டித்து வழங்கப்படுகிறது. ஒப்பந்ததாரர்கள், முதலீட்டாளர்கள், மாநிலத்தில் வணிக நிறுவனங்களைக் கொண்ட வணிகர்கள் ஆகியோர் மூன்றாண்டுகளுக்கான சிறப்பு உள் நுழைவுச்சீட்டு அனுமதிக்கு விண்ணப்பிக்கலாம்.
லட்சத்தீவு
லாக்காடிவ், மினிகாய் மற்றும் அமிண்டிவி தீவுகள் (நுழைவு மற்றும் குடியிருப்பு மீதான கட்டுப்பாடு) விதிகளின்படி கடந்த 1967 ஆம் ஆண்டு முதல் லட்சத்தீவுகளுக்குள் செல்வதற்கு உள்ளூர் மக்கள் அல்லாத இந்தியர்கள் உள் நுழைவுச்சீட்டு விண்ணப்பித்து பெற வேண்டும். அரசு ஊழியர்களுக்கும் ராணுவத்தினருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் இந்த உள் நுழைவுச்சீட்டை பெறுவதில் இருந்து விலக்கு வழங்கப்பட்டுள்ளது.
லடாக், மேகாலயா
லடாக் யூனியன் பிரதேசத்தில் சில பகுதிகளுக்கு அமலில் இருந்து வந்த உள் நுழைவுச் சீட்டு முறை தற்போது நீக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 டிசம்பரில் மேகாலயா சட்டமன்றம் அம்மாநிலத்துக்கு உள் நுழைவு சீட்டு முறையை அமல்படுத்துமாறு மத்திய அரசை கேட்டு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. பொதுவாக உள் நுழைவு சீட்டு பெற்றுத்தான் மற்ற மாநில மக்கள் உள் நுழைவுச்சீட்டு முறை அமலில் உள்ள மாநிலங்களில் நுழைய வேண்டும் என்று விதிமுறை இருந்தாலும் இந்தியர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் இல்லாமல் உள் நுழைவு சீட்டு வழங்கப்படுகிறது. எவ்வாறு இருப்பினும் அந்த மாநிலங்களில் நிரந்தரமாக வசிக்க இயலாது. உள் நுழைவு சீட்டுக்கு விண்ணப்பம் செய்யும் முறைகள், கட்டண விவரங்கள் ஆகியவை சம்பந்தப்பட்ட மாநிலங்களின் இணையதளங்களில் கொடுக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டுக்கும் நுழைவுச்சீட்டு
தமிழ்நாட்டில் நுழைவதற்கும் உள் நுழைவுச்சீட்டு முறையை கொண்டு வர வேண்டும் என்று கடந்த 2021 ஆம் ஆண்டில் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் மாநில முதலமைச்சருக்கு கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது. பொது நலனுக்காக உள் நுழைவு சீட்டு முறையை கொண்டு வருவதற்கு அரசியலமைப்பு அனுமதித்துள்ள போதிலும் இத்தகைய முறையை தமிழகத்திற்கு கொண்டு வருவதற்கான சாத்திய கூறுகள் இல்லை. இருப்பினும் தமிழகத்துக்குள் நுழையும் தமிழகத்தின் அண்டை மாநிலங்கள் அல்லாத மாநிலங்களை (other than neighboring states) சேர்ந்தவர்களின் புள்ளி விபரங்கள் கூட தமிழ்நாடு அரசால் பராமரிப்பதாக தெரியவில்லை. அண்டை மாநிலங்கள் அல்லாத மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்குள் வரும் இந்தியர்களின் வருகை மற்றும் புறப்பாடு ஆகிய விவரங்களையும் அவ்வாறு வருபவர்கள் எங்கு தங்கியுள்ளார்கள்? என்ன தொழில் புரிகிறார்கள்? என்ற விவரங்களையும் திரட்டி பராமரிப்பது அவசியமானதாகும். இத்தகைய விவரங்கள் தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு, குற்றத்தடுப்பு, பயங்கரவாத ஒழிப்பு போன்ற பாதுகாப்பு அம்சங்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.