spot_img
November 21, 2024, 5:56 pm
spot_img

பகுதி – 4: மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகுவது எப்படி? விசாரணை நடைமுறைகளை அறிவோம்!

கடந்த பகுதியில் நுகர்வோர் ஆணையத்தில் புகார் தாக்கல் செய்யும் நடைமுறைகளைப் பற்றி விளக்கப்பட்டது. முறையீட்டாளரால் தாக்கல் செய்யப்பட்ட ஒரு புகார் மாவட்ட நுகர்வோர் ஆணையத்தால் விசாரணைக்கு உகந்தது என்று முடிவு செய்யப்பட்டு அந்த புகாருக்கு எண்ணிடப்பட்டு (numbered)  ஆணையத்தின் கோப்பிற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு விட்டால் (after taken on file) அதற்கு பிந்தைய விசாரணை நடைமுறைகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.  

உரிமையியல் விசாரணை  சட்டத்தின்படி உரிமையியல் நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ள எதிர் தரப்பினர் அல்லது சாட்சிகளுக்கு அழைப்பாணை அனுப்பி அவர்கள் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு  பிறப்பித்து அவர்களை உறுதி மொழியின் பெயரில் விசாரிப்பது, ஆவணங்களை அல்லது தேவையான பொருட்களை சாட்சியமாக ஆணையத்தின் முன்பு சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடுவது, வாக்குமூலங்களை சாட்சியமாக ஏற்றுக் கொள்வது, ஆய்வக சோதனை அறிக்கைகளை ஆய்வகங்கள் அல்லது சம்பந்தப்பட்ட அமைப்புகள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்வது, சாட்சிகளை அல்லது ஆவணங்களை விசாரிக்க ஆணையங்களை அமைப்பது (appointment of commission) ஆகிய  அதிகாரங்கள் நுகர்வோர் ஆணையங்களுக்கு உள்ளன. நுகர்வோர் ஆணையங்களின் நடவடிக்கைகள்   நீதித்துறை நடவடிக்கைகளாகவே (judicial proceedings) கருதப்படும். நுகர்வோர் புகார் நிலுவையில் இருக்கும் போது தேவையானது என கருதினால் இடைக்கால உத்தரவுகளை (interim order) வழங்கும் அதிகாரம் நுகர்வோர் ஆணையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.  

புகார் எண்ணிடப்பட்ட நாளிலிருந்து எதிர் தரப்பினர்களுக்கு 21 நாட்களுக்குள் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் முறையீட்டாளரால் தாக்கல் செய்யப்பட்ட புகார் மற்றும் அத்துடன் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின் நகல்களை அனுப்பி குறிப்பிட்ட ஒரு நாளில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அறிவிப்பு (notice) அனுப்பப்பட வேண்டும்.  எதிர் தரப்பினர் நேரில் அல்லது வழக்கறிஞர் மூலமாக ஆணையத்தின் முன்பு ஆஜராகலாம். புகாரின் மீது முதலாவது விசாரணை ஏற்படும் நாளில் (first hearing) அல்லது அதற்குப் பின்னரும் இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டால் பிரச்சனையை நுகர்வோர் சமரச  பேச்சுவார்த்தை (mediation) மூலமாக பேசி தீர்க்க ஆணையம் உத்தரவிடலாம்.

எதிர் தரப்பினர்  நுகர்வோர் ஆணையத்தின் அறிவிப்பை பெற்ற நாளிலிருந்து 30 நாட்களுக்குள் முறையீட்டாளர் தாக்கல் செய்த   புகாருக்கு பதில் உரை  (written version) தாக்கல் செய்ய வேண்டும்.  பதில் உரையை தாக்கல் செய்ய 30 நாட்களுக்கு மேலாக மீண்டும் 15  நாட்கள் அவகாசத்தை நுகர்வோர் ஆணையங்கள் எதிர் தரப்பினருக்கு வழங்கலாம். ஆனால், எதிர்தரப்பினர் பதில் உரை தாக்கல் செய்வதற்கு 45 நாட்களுக்கு மேல் அவகாசம் வழங்க நுகர்வோர் ஆணையங்களுக்கு அதிகாரம் கிடையாது.  

நுகர்வோர் புகார்கள் தாக்கல் செய்யப்பட்ட நாளிலிருந்து 90 நாட்களுக்குள் விசாரணை செய்து முடிவு காணப்பட வேண்டும். புகாரில் கூறப்பட்டுள்ள  பொருட்களை ஆய்வகத்துக்கு அனுப்பி   சோதனை (laboratory analysis)  அறிக்கை பெற வேண்டும்  என்ற   வகையான வழக்குகளில் 135 நாட்களுக்குள் விசாரணை செய்து முடிக்கப்பட வேண்டும்.  பொருட்களை ஆய்வகத்துக்கு அனுப்பி சோதனை செய்ய விண்ணப்பிக்கும் முறையீட்டாளர் அதற்கு உரிய கட்டணத்தை நுகர்வோர் ஆணையத்தில் செலுத்த வேண்டும்.   ஆய்வகங்கள் வழங்கும் அறிக்கை மீது முறையீட்டாளர் அல்லது எதிர் தரப்பினர் எழுத்து மூலமாக ஆட்சேபணைகளை தாக்கல் செய்யலாம்.  

எதிர் தரப்பினர் பதில் உரை தாக்கல் செய்த பின்னர் அல்லது எதிர் தரப்பினர் பதில் உரை தாக்கல்  செய்யாமல் 45 நாட்கள் கடந்த பின்னர்   முறையீட்டாளர் தரப்பில் புகாரை நிரூபிக்க   நிரூபண  வாக்குமூலத்தை (proof affidavit) எழுத்து மூல  சாட்சியமாக நுகர்வோர் ஆணையத்தில் தாக்கல் செய்ய வேண்டும் .அப்போது முறையீட்டாளர் தரப்பில் தாக்கல் செய்யப்படும் ஆவணங்களை முறையீட்டாளர் தரப்பு சான்றாவணங்களாக குறியீடு (marking exhibits)  செய்ய வேண்டும். முறையீட்டாளர் அவரது சாட்சியத்தை பதிவு செய்த பின்னரும் வேறு நபர்களின் சாட்சியம் வழக்குக்கு தேவையானது என்று கருதினால் அவர்களது சாட்சியங்களையும் நிரூபண  வாக்குமூலமாக எழுத்து மூலமாக தாக்கல் செய்யலாம்.  முறையீட்டாளர் அவரது தரப்பில் சான்று பொருட்கள் (material objects) ஏதேனும்   இருப்பின் அதனையும் ஆணையத்தில் குறியீடு செய்ய வேண்டும்.

முறையீட்டாளர் தரப்பு சாட்சியம் முடிவுற்ற பின்னர் எதிர் தரப்பினர் அவரது தரப்பில் சாட்சியத்தை நிரூபண  வாக்குமூலமாக எழுத்து வடிவில் தாக்கல் செய்து சான்றாவணங்களை குறியீடு செய்யலாம். எதிர் தரப்பினரும் அவர் அல்லாமல் வேறு நபர் சாட்சியங்களையும் ஆணையத்தின் முன்பு நிரூபண   வாக்குமூலமாக எழுத்து வடிவில் தாக்கல் செய்யலாம்.  நுகர்வோர் ஆணையத்தில் சுருக்க முறை விசாரணை (summary trial)  பின்பற்றப்படுவதால் சாட்சிகளின் மீது குறுக்கு விசாரணை (cross examination)  நடத்தப்படுவதில்லை. எந்த ஒரு தரப்பினரும்   குறுக்கு விசாரணை செய்ய விரும்பினால் தகுந்த    விண்ணப்பத்தை ஆணையத்தில் சமர்ப்பித்து அனுமதி பெற்று குறுக்கு விசாரணை கேள்விகளை (questionnaire) சாட்சிகளுக்கு வழங்கி பதில் பெறலாம்.

இரு தரப்பு சாட்சியங்கள் முடிவுற்ற பின்னர் இரண்டு தரப்பிலும் எழுத்துப்பூர்வமான வாத உரை (written argument) தாக்கல் செய்யப்பட வேண்டும். நுகர்வோர் நேரடியாக ஆஜராகும் போதும் நுகர்வோருக்காக தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள் ஆஜராகும் போதும் முறையீட்டாளர் தரப்பில் எழுத்து பூர்வமான வாத உரை தாக்கல் செய்யாமல் வாய் மொழியான வாத உரை சமர்ப்பித்தால் போதுமானது.  இதன் பின்னர் இரண்டு தரப்பு சாட்சியங்கள், சான்றாவணங்கள், வாத உரை உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து நுகர்வோர் ஆணையங்கள் உத்தரவுகளை பிறப்பிக்கின்றன. மாவட்ட நுகர்வோர் ஆணையம் எத்தகைய உத்தரவுகளை பிறப்பிக்கும் அதிகாரத்தை கொண்டுள்ளது என்பதை தனி கட்டுரையாக விரைவில் காணலாம்.

நுகர்வோர் பூங்கா
நுகர்வோர் பூங்கா
நுகர்வோர் பூங்காவின் படைப்பு

தொடர்புடைய கட்டுரைகள்

1 COMMENT

  1. பொது மக்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக உள்ளது, பொது மக்களிடம் நுகர்வோர் விழிப்புணர்வு அதிக அளவில் ஏற்படுத்தப்பட வேண்டும் ,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்