தேசிய மனித உரிமை ஆணையம் (கமிஷன்), மாநில மனித உரிமை ஆணையங்கள் நடத்தும் விசாரணைகள் மற்றும் அவை பிறப்பிக்கும் உத்தரவுகள் குறித்து அடிக்கடி பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் கேள்விப்படுகிறோம். ஆனால், மனித உரிமை நீதிமன்றங்கள் குறித்து கேள்விப்பட்டது உண்டா என்று விசாரித்தால் இல்லை என்றே பலரும் பதில் சொல்வார்கள்.
கடந்த 1993 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட மனித உரிமைகள் பாதுகாப்பு சட்டம் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தையும் மாநிலங்களில் மாநில மனித உரிமைகள் ஆணையங்களையும் மாவட்டங்களில் மாவட்ட மனித உரிமை நீதிமன்றங்களையும் அமைக்க வழி வகுத்தது. சட்டம் அமலுக்கு வந்ததை தொடர்ந்து இந்த அமைப்புகள் தோற்றுவிக்கப்பட்டு செயல்பாட்டில் இருந்து வருகின்றன.
மனித உரிமை மீறல் குற்றங்களை நிகழ்த்துபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து சிறை தண்டனை வழங்கும் அதிகாரம் தேசிய மற்றும் மாநில மனித உரிமை ஆணையங்களுக்கு கிடையாது. அதே நேரத்தில் இத்தகைய குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் சிறை தண்டனை வழங்கும் அதிகாரங்களை அதிகாரத்தை மாவட்ட மனித உரிமை நீதிமன்றங்கள் பெற்றுள்ளன. இந்தியா முழுவதும் பெரும்பான்மையான மாவட்டங்களில் மாவட்ட அமர்வு நீதிமன்றம் (செசன்ஸ் கோர்ட்) அல்லது தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் (சி.ஜே.எம் கோர்ட்) மாவட்ட மனித உரிமைகள் நீதிமன்றமாக செயல்பட செயல்படுகிறது.
தேசிய ஆணைய இணையதள தகவலின்படி கடந்த 2022 ஆம் ஆண்டில் மட்டும் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் 1,32,274 புகார்கள் பதிவாகியுள்ளன. ஆனால், தமிழக ஆணைய இணையதளத்தில் பதிவான வழக்குகளின் புள்ளி விவரங்கள் எதுவும் இல்லை. எவ்வாறு இருப்பினும் ஆயிரத்துக்கும் குறையாத புகார்கள் 2022 ஆம் ஆண்டில் பதிவாகியுள்ளன என அதிகாரப்பூர்வமற்ற வகையில் அறிய முடிகிறது. ஆனால், 2022 ஆம் ஆண்டில் தண்டனை வழங்கும் அதிகாரங்களை பெற்றுள்ள மாவட்ட மனித உரிமை நீதிமன்றங்களில் இந்தியாவில் எந்த ஒரு மாநிலத்திலும் இரட்டை இலக்க எண்களை விட கூடுதலாக வழக்கு பதிவு செய்யப்பட்டதாக தெரியவில்லை.
பாரதியார் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு ஒன்றின்படி கிடைத்த தகவல் இன்னும் அதிர்ச்சிகரமாக உள்ளது. தமிழ்நாட்டில் மாவட்ட மனித உரிமை நீதிமன்றங்கள் அமைக்கப்பட்ட 1996 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை 15 ஆண்டுகளில் மாவட்ட மனித உரிமை நீதிமன்றங்களில் பதிவான வழக்குகளின் எண்ணிக்கை 167 மட்டுமே. இதில் ஏழு வழக்குகளில் மட்டுமே மனித உரிமை நீதிமன்றங்கள் தண்டனை வழங்கியுள்ளன. இத்தகைய வழக்குகளிலும் மேல்முறையீட்டு முடிவுகள் எதுவும் தெரியவில்லை.
ஆணையங்களைப் போல் அல்லாமல் தண்டனை வழங்கும் அதிகாரங்களைக் கொண்ட மனித உரிமை நீதிமன்றங்களில் மனித உரிமை மீறல் வழக்குகள் அதிகம் பதிவாகாமல் இருப்பதற்கு என்ன காரணங்கள் என்பது கவனிக்கத்தக்கதாகும். முதலாவதாக, மனித உரிமை நீதிமன்றங்கள் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே இல்லை எனலாம். இரண்டாவதாக மனித உரிமை மீறல் வழக்குகளை பதிவு செய்து விசாரிக்க மாவட்ட அளவில் தனித்த காவல் அமைப்புகள் இல்லை என்பதாகும். மூன்றாவதாக, மனித உரிமை நீதிமன்றங்களின் நடைமுறைகள் தெளிவாகவும் மக்கள் எளிதில் அணுகும் வகையிலும் உள்ளதா? என்பது ஆய்வு செய்யப்பட வேண்டியதாகும். இத்தகைய குறைகளை களைந்து மனித உரிமை குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை பெற்றுத்தர உரிய நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும் என்பதே மக்கள் விருப்பமாக இருக்க இயலும்