spot_img
July 27, 2024, 12:31 pm
spot_img

அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் – ஓர் திறனாய்வு

அரியலூரில் கடந்த 2017 ஆம் ஆண்டு மே மாதத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் தொடங்கப்பட்டது. நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், 2019   இயற்றப்பட்டு அமலுக்கு வந்த பின்னர் அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் டாக்டர் வீ. ராமராஜ் அவர்களை தலைவராக   கொண்ட அமர்வு கடந்த 23 மார்ச் 2022 ஆம் தேதியில் பொறுப்பேற்றது. 

இந்நிலையில் கடந்த 01 ஏப்ரல் 2022 முதல் 31 மார்ச் 2023 வரை அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் பற்றிய திறனாய்வை அறிந்து கொள்வது நுகர்வோர்களுக்கு உபயோகமாக அமையும்.

            கடந்த மார்ச் இறுதியில் அரியலூரில்   2011 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை  பெரம்பலூர் நுகர்வோர் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டு   அரியலூரில் நுகர்வோர் ஆணையம் தொடங்கப்பட்டது போது மாற்றம் செய்யப்பட்ட   வழக்குகள் மற்றும் 2017 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு மார்ச் வரை தாக்கல் செய்யப்பட்ட  வழக்குகள் ஆகியன 96 நிலுவையில் இருந்தன.   இவற்றில்  2021 ஆம் ஆண்டு வரை தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் ஒரு வழக்கை தவிர   அனைத்தும் விசாரணை செய்து உத்தரவுகள் வழங்கப்பட்டு விட்டன.

            சென்னை  தெற்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டு விசாரணைக்காக 2022 ஜூலை மாதத்தில் அரியலூருக்கு மாற்றப்பட்ட 201 ஐந்து ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் இருந்த வழக்குகளை அரியலூர் மாவட்ட நுகர்வோர்   ஆணையம் 2023 பிப்ரவரி மாதத்துக்குள் விசாரணையை முடித்து உத்தரவுகளை வழங்கி உள்ளது.  

2022 ஏப்ரல் முதல் தேதி முதல் 2023 மார்ச் இறுதி தேதி வரை அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் 312 வழக்குகளில் தீர்ப்புகளை வழங்கி உள்ளது.    அரியலூரில் ஆணையம் தொடங்கப்பட்ட 2017 ஆம் முதல் 2022 மார்ச் வரையான ஐந்தாண்டு காலத்தில் வழங்கப்பட்ட  ஆண்டு சராசரி தீர்ப்புகளை விட கடந்த ஓராண்டு காலத்தில் 24 மடங்கு அதிகமாகும். கடந்த ஓராண்டு காலத்தில் புதிதாக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை கடந்த 2022 மார்ச் வரை தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் சராசரி எண்ணிக்கையை விட மூன்று மடங்கு அதிகரித்து இருக்கிறது..

            நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019-ன்படி நுகர்வோர் குறைதீர் ஆணையங்களில் சமரச மையங்கள் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் சமரச மையம்  தொடங்கப்பட்டது.  இந்தியாவிலேயே முதல் முறையாக ஐந்து மத்தியஸ்தர்களை கொண்ட சமரச அமர்வு கடந்த நவம்பர் மாதத்தில் அமைக்கப்பட்டு 11 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த 60 விவசாயிகளின் பயிர் காப்பீடு தொடர்பான   வழக்கில் சமரசம் ஏற்படுத்தப்பட்டு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது. 

            16 லட்சம் மதிப்புள்ள நகைகளை அடமானத்தில் இருந்து மீட்பது தொடர்பான பிரச்சனையில்  வழக்கு தாக்கல் செய்யப்பட்டு 35 நாட்களில் அதிலும் முதல் விசாரணை ஏற்பட்டு 5 நாட்களில் சமரச மையத்தின் மூலம்   தீர்வு காணப்பட்டது. மற்றொரு வழக்கில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு 6 வார காலத்தில்   முதலாவது விசாரணை ஏற்பட்டு 12 நாட்களில் குழாய்களை உற்பத்தி செய்த நிறுவனம் விற்பனை செய்த குழாய்களையும் இதர பொருட்களையும் எடுத்துக்கொண்டு வழக்கு தாக்கல் செய்தவருக்கு ஒரு வார காலத்திற்குள் தரமான குழாய்களையும் இதர பொருட்களையும் வழங்கவும் இழப்பீட்டுத் தொகை ரூபாய் 50 ஆயிரம் பெறவும் சமரச மையத்தின் மூலம்   தீர்வு காணப்பட்டது. இவ்வாறு சமரச மையத்தின் மூலமாக   கடந்த ஓராண்டு காலத்தில் ஐந்து வழக்குகள் சமரச மையத்தின் மூலம்  இரு தரப்பும்   ஏற்கும் பகுதியில் வகையில் தீர்வு காணப்பட்டுள்ளன.

            2022 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்திலும் நுகர்வோர் வழக்குகளுக்கான சிறப்பு மக்கள் நீதிமன்றத்திலும் (12-11-2022, 16-12-2023)   ஆறு  வழக்குகளில் உடனடி தீர்வுகள் வழங்கப்பட்டன.  சில வழக்குகளில் சமரசம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. இத்தகைய நடவடிக்கைகள் மூலம் புதிதாக தாக்கல் செய்யப்படும் வழக்குகளை நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி 90 நாட்களில் முடிப்பதற்கான சூழல் அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

            கடந்த ஓராண்டில் அரியலூர் மாவட்ட உணவு பொருள் வழங்கல் துறையின் சார்பில் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களுக்கும்   ஊரக வளர்ச்சி துறையுடன் இணைந்து நுகர்வோர் பாதுகாப்பு சட்ட பயிற்சி முகாம் நடத்தப்பட்டுள்ளது.  இதை போலவே மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட அரசு துறைகளின் தலைவர்களுக்கும் வருவாய்த்துறை அலுவலர்களுக்கும்  நில அளவை துறை ஊழியர்களுக்கும் நுகர்வோர் பாதுகாப்புச் சட்ட பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. அரியலூர் வழக்கறிஞர்கள்   சங்கம் சார்பில் வழக்கறிஞர்களுக்கான நுகர்வோர் பாதுகாப்பு சட்ட பயிற்சி மாநாடும் அரியலூர் நுகர்வோர் சமரச மையத்தில் உள்ள வழக்கறிஞர்களின் முயற்சியால் தேசிய நுகர்வோர்   தின  கருத்தரங்கம், தன்னார்வலர்களுக்கான பயிற்சி முகாம் போன்றவை நடத்தப்பட்டுள்ளன.  

ஒவ்வொரு மாவட்டத்திலும் செயல்படும் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையங்களும் மாவட்ட மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும் விதமாக நுகர்வோர் காவலனாக செயல்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும். 2022-2023 ஆம் ஆண்டு கால கட்டம் இந்த திறனாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.  இந்த காலத்தில் பணியாற்றிய ஆணைய தலைவர் தற்போது நாமக்கல் மாவட்டத்தில் பணிபுரிந்து வருகிறார்

வி.முத்துக்குமரன்
வி.முத்துக்குமரன்
வி.முத்துக்குமரன், செயலாளர், அரியலூர் வழக்கறிஞர்கள் சங்கம்

தொடர்புடைய கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்