spot_img
September 14, 2024, 4:29 pm
spot_img

தேவை சேவை பெறும் உரிமை சட்டம்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் கடந்த சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் சேவை பெறும் உரிமை சட்டம் இயற்றப்படும் எனக் கூறப்பட்டிருந்தது. திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் நடைபெற்ற சட்டமன்ற தொடரில் ஆளுநர் உரையில் சேவை பெறும் உரிமைச் சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இச்சட்டத்தை இயற்றிய அமலுக்கு கொண்டு வருவதில் எத்தகைய பணிகள் நடைபெற்று வருகிறது என்பது தெரியவில்லை. எவ்வாறு இருப்பினும் உடனடியாக இச்சட்டத்தை இயற்றி தமிழக சட்டமன்ற வரலாற்றில் ஒரு மைல் கல்லை பொறிக்க வேண்டிய தருணம் இதுவாகும்.

பட்டா உள்ளிட்ட வருவாய்த்துறை ஆவணங்கள், பிறப்பு – இறப்பு , சாதி, வருமானம், வாரிசு உள்ளிட்ட சான்றிதழ்கள், மின்சாரம் – குடிநீர் இணைப்பு, குடிமை பொருள் அட்டை தொழில் தொடங்குவதற்கான உரிமங்கள் போன்ற அரசின் சேவைகளுக்காக ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மக்கள் சம்பந்தப்பட்ட துறையில் விண்ணப்பம் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த விண்ணப்பங்கள் மீது தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு விரைவில் பயன் பெறுகிறார்களா என்று பார்த்தால் தலையாயப் பிரச்சினையாக கூறப்படுவது கால தாமதமாகும். இதனை அகற்ற தகுந்த ஆவணங்களுடன் மக்கள் கேட்கும் ஒவ்வொரு சேவையையும் வழங்குவதற்கு காலக்கெடு நிர்ணயம் செய்து அந்த காலத்திற்குள் சேவையை வழங்க வேண்டும் என்பது சேவை பெறும் உரிமைச் சட்டத்தின் பிரதான அம்சமாகும்.

உதாரணமாக, தகவல் உரிமை பெறும் சட்டம் மூலம் மக்கள் கேட்கும் தகவல்களை வழங்க கால நிர்ணயம் செய்யப்பட்டு ஒவ்வொரு துறையிலும் அதற்காக தகவல் வழங்கும் அலுவலர்கள், மேல்முறையீட்டு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் மேலும், மாநில தகவல் ஆணையமும் அமைக்கப்பட்டுள்ளது இதை போலவே சேவை பெறும் உரிமை சட்டம் கொண்டுவரப்பட்டு ஒவ்வொரு துறையிலும் அதற்காக சேவை வழங்கும் அலுவலர், மேல்முறையீட்டு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும். மேலும், மாநில சேவை உரிமை ஆணையமும் அமைக்கப்பட வேண்டும் இந்த அமைப்பு முறையை உருவாக்குவதற்கு சேவை உரிமை பெறும் உரிமைச் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்.

இதன் மூலமாக அரசு அலுவலகங்களில் மக்கள் பெற விரும்பும் சேவைகளை எவ்வித காலதாமமும் இல்லாமல் பெற இயலும். இந்த சட்டம் மக்களுக்கு மிகுந்த பயனை அளிப்பதோடு தமக்கு வழங்கப்பட்டுள்ள பணியினை சரிவர செய்யாத அரசு ஊழியர்களுக்கும் காவலனாக அமையும் என்றால் மிகையல்ல. கடந்த 2019 ஆம் ஆண்டில் ஒரு தீர்ப்பில் உயர்நீதிமன்ற கிளை மதுரை கிளை இச்சட்டத்தை விரைவில் கொண்டு வர பரிசீலனை செய்யுமாறு மாநில அரசை கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கதாகும்.

கேரளா, கர்நாடகா, ஆந்திர பிரதேசம், புதுடெல்லி, பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், உத்தரவு பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்கள் சேவை உரிமை பெறும் சட்டத்தை இயற்றி அமல்படுத்தியுள்ளன. இந்நிலையில் விரைவில் தமிழக அரசும் இச்சட்டத்தை கொண்டு வந்து செயல்படுத்த வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. சரக்குகள் மற்றும் சேவைகளை குறிப்பிட்ட காலத்திற்குள் வழங்குவதற்கான குடிமக்களின் உரிமை மற்றும் அவர்களின் குறைகளை தீர்ப்பதற்கான மசோதா மசோதாவை கடந்த 2011 ஆம் ஆண்டு மத்திய அரசு பாராளுமன்றத்தில் அறிமுகம் செய்தது. பத்துக்கு மேற்பட்ட ஆண்டுகள் கடந்தும் இந்த மசோதாவை சட்டமாக்குவதில் மத்திய அரசு எவ்வித ஆர்வத்தையும் காட்ட வில்லை. உடனடியாக மத்திய அரசு இத்தகைய சேவை பெறும் உரிமை சட்டத்தை கொண்டு வந்து நாடு முழுவதும் ஒரே நாடு – ஒரே சேவை உரிமை என்ற கொள்கையை நிலைநாட்டுமா? என்பது மக்களிடையே எழுந்துள்ள கேள்வியாகும்.

நுகர்வோர் பூங்கா
நுகர்வோர் பூங்கா
நுகர்வோர் பூங்காவின் படைப்பு

தொடர்புடைய கட்டுரைகள்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்