spot_img
July 27, 2024, 12:50 pm
spot_img

ஆளுநரை சட்டமன்றங்களே பதவி நீக்கம் செய்யலாம்

அதிபர் ஆட்சி முறையை கொண்ட அமெரிக்காவில் மாநில ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட போதிலும்  ஆளுநர்களை மாநில சட்டமன்றங்களே பதவி நீக்கம் செய்ய இயலும்.  இந்த வகையில் 11 ஆளுநர்கள் சட்டமன்றங்களால் பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். பதவி நீக்கத்துக்கான தீர்மானத்தை சட்டமன்றத்தில் கொண்டுவர   திட்டமிட்டதை அறிந்து பல ஆளுநர்கள் தாங்களாகவே பதவி விலகி இருக்கிறார்கள்.  

நாடாளுமன்ற முறையை கொண்ட இந்தியாவில் உள்ள குடியரசுத் தலைவர் மறைமுக தேர்தல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.  அவர் மீது குற்றச்சாட்டுகள் சமர்ப்பிக்கப்பட்டால் நாடாளுமன்றத்தில் உள்ள இரண்டு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரித்தால் இந்திய குடியரசுத் தலைவரை பதவி நீக்கம் செய்ய முடியும். இந்திய மாநிலங்களுக்கு ஆளுநர்களை பிரதமரின் பரிந்துரையின் பேரில் குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்.  தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில ஆளுநர்களையே   சட்டமன்றங்களால் பதவி நீக்கம் செய்ய முடியும் என்ற நிலை அமெரிக்காவில் இருந்தாலும் இந்தியாவில் மக்களால் தேர்வு செய்யப்படாத மத்திய அரசின் பிரதிநிதியாக குடியரசுத் தலைவரால்  நியமனம் செய்யப்படும் மாநில ஆளுநர்களை  பதவி நீக்கம் செய்ய மாநில  சட்டமன்றங்களுக்கும் பாராளுமன்றத்திற்கும் அதிகாரம் கிடையாது.  

மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட இந்திய குடிமகன் ஒருவர் 35 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும் என்பது மட்டுமே தகுதியாக இந்திய அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளது.  பொதுவாக, மாநில ஆளுநர்கள் ஐந்தாண்டு காலத்துக்கு நியமனம் செய்யப்பட்டாலும்   பிரதமரின் விருப்பம் இல்லாவிட்டால் அதனை அவர் குடியரசு தலைவருக்கு தெரிவித்து ஐந்து ஆண்டு காலம் நிறைவு செய்வதற்கு முன்பாகவும் ஆளுநர்கள் நீக்கம் செய்யப்படுகிறார்கள். ஆளுநரின் தகுதிகள் மற்றும் பதவிக்காலத்தில் உறுதித் தன்மை ஆகியவை குறித்து மறுவரையறை செய்ய வேண்டும் என்று சர்க்காரியா கமிஷன் மற்றும் சட்ட கமிஷன் உள்ளிட்டவை ஏற்கனவே பரிந்துரை செய்துள்ளன.

ஆளுநருக்கு   பெயரளவில் பல அதிகாரங்கள் இருந்தாலும் சட்டமன்ற தேர்தல் முடிவடைந்த பின்னர் பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட கட்சியின் தலைவரை அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிகளில் இருந்து பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு பெற்ற தலைவரை ஆட்சி அமைக்க அழைப்பது மிக முக்கியமான அதிகாரம் ஆகும்.  இதைப் போலவே சட்டமன்றங்களில் நிறைவேற்றப்படும் சட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பது, திருப்பி அனுப்புவது,   மற்றும் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைப்பது போன்ற சந்தர்ப்பங்களில் ஆளுநரின் அதிகாரம் முக்கியமானதாக கருதப்படுகிறது.  மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் சட்டமன்றம் நிறைவேற்றிய மசோதாக்களை சட்டமாக்க ஆளுநர் எவ்வளவு காலத்துக்குள் ஒப்புதல் வழங்க வேண்டும் அல்லது திருப்பி அனுப்ப வேண்டும் என்ற எந்த ஒரு வரையறையும்   அரசியலமைப்பில்   செய்யப்படாதது பெரும் குறையாக உள்ளது.

மாநிலங்களில் காங்கிரஸ் அல்லாத கட்சிகளின் அரசுகள் ஆட்சிக்கு வந்த போது  ஆளுநர்களுக்கும் மாநில ஆட்சியாளர்களுக்கும் பிரச்சனைகள் தோன்றின.  தற்போதும் மத்தியில் ஆட்சி செய்யும் கட்சி அல்லாத வேறு கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஆளுநர்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் பிரச்சனைகள்   முன்பை விட கூடுதலாக வலுவடைந்துள்ளன.  மாநில சட்டமன்றங்களின் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதை முடக்கி வைத்திருப்பதும் மாநில அரசின் கொள்கைகளை  பிரதிநிதிபடுத்த வேண்டிய ஆளுநர்கள் அவற்றை பொது இடங்களில் விமர்சிப்பதும் அதிகரித்துள்ளது என்று  எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன

இதன் எதிரொலியாகவே தில்லி, தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப் ஆகிய மாநிலங்கள்  ஆளுநர்களுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குகளை தாக்கல் செய்தனர்.   இந்த வழக்கு விசாரணைகளின் போது உச்ச நீதிமன்றம் ஆளுநர்களை மிக கடுமையாக சாடியதோடு துளைக்கும் கேள்விகளை கேட்டுள்ளது.    இத்தருணத்தில்  ஆளுநர்களின் தகுதி, பதவிக்காலம், அதிகாரங்கள் போன்றவற்றை ஆய்வு செய்து அவற்றை சீரமைக்க   வேண்டியது அவசியமாகும்.

குடியரசு துணைத் தலைவர், உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியால் நியமனம் செய்யப்படும் ஒரு நீதிபதி, மாநில முதலமைச்சர் ஆகியோரை கொண்ட குழுவால் ஆளுநர் தேர்வு செய்யப்படும் வகையில் அரசியலமைப்பு மாற்றப்பட்டால் சிறப்பாக இருக்கும்.  மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட கூடியவர் அவ்வாறு நியமிக்கும் நாளுக்கு  முன்பு குறைந்தது மூன்று ஆண்டுகள் எந்த அரசியல் கட்சியிலும் உறுப்பினராகவோ அல்லது ஆதரவு நடவடிக்கைகளை புரிந்தவராகவும் இருக்கக் கூடாது என நிபந்தனை விதிக்கலாம்.  சட்டமன்றம் இயற்றும் மசோதாக்களை சட்டமாக்க ஆளுநர் ஒப்புதல் அளிக்க கால  வரையறை அரசியலமைப்பில் செய்யப்பட வேண்டும்.  மாநில ஆளுநர் ஆளும் அரசுக்கு எதிரான கருத்துக்களை பொதுவெளியில் பேசக்கூடாது என்ற நிபந்தனையுடன் நியமிக்கப்பட்டு அதனை மீறினால் சட்டமன்றத்தில் அவருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் வகையிலும் இரண்டு முறை இத்தகைய தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் ஆளுநர் பதவி விலகும் வகையிலும் அரசியலமைப்பில் மாற்றம் தேவை.  

இத்தகைய அரசியலமைப்பு திருத்தங்களை மேற்கொள்ள நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு அவசியமானது.  இதற்கான வாய்ப்புகள் தற்போதைய   சூழ்நிலையில் கிடையாது என்றாலும் எதிர்காலத்தில் உடனடியாக இத்தகைய வாய்ப்பு உள்ளதாக தெரியவில்லை.  மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்குகளின் மூலம் தேவைப்படும் மாற்றங்களை உருவாக்கக்கூடிய தீர்ப்புகள் வழங்கப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

க.கதிர்வேல்
க.கதிர்வேல்
க.கதிர்வேல், ஊடகவியலார்

தொடர்புடைய கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்