அமைவிடம்
தமிழ்நாட்டில் சேலம் மாவட்டத்தில் கிழக்கு மலை தொடர்ச்சியில் சேர்வராயன் மலைப்பகுதியில் கடல் மட்டத்திலிருந்து 1515 மீட்டர் (4969 அடி) உயரத்தில் அமைந்துள்ள ஏற்காடு ஏழைகளின் உதகமண்டலம் என்று அழைக்கப்படுகிறது. சேலத்தில் இருந்து சுமார் பத்து கிலோமீட்டர் பயணம் செய்து மலை மீது ஏறி சுமார் 18 கிலோ மீட்டர் 22 கொண்டை ஊசி வளைவுகளை கடந்து பயணம் செய்தால் ஏற்காட்டுக்கு சென்றடையலாம். கொண்டை ஊசி வளைவுகள் இல்லாததாலும் வாகனங்களில் ஏற்காட்டிற்கு பயணிப்பது எளிதானதாகவே உள்ளது. ஏற்காடு வருவாய் வட்டத்தின் பரப்பளவு 382.67சதுர கிலோ மீட்டர் ஆகும்.
பின்னணி
சேலத்தில் தங்கி இருந்த ஆங்கிலேயர்கள் 1842 -ல் ஏரிக்காடு என அழைக்கப்பட்ட ஏற்காட்டை கண்டறிந்து தோட்டங்களை நிறுவினார்கள். வருவாய் வட்டத்தின் தலைநகராகவும் ஊராட்சி ஒன்றியமாகவும் உள்ள ஏற்காடு ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்பது ஊராட்சி மன்றங்கள் அமைந்துள்ளன. 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ஏற்காடு ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 41,869. அதில் பட்டியலின மக்களின் தொகை 5,492. பழங்குடியின மக்களின் தொகை 28,118. பலா, நட்சத்திர ஆப்பிள், அத்தி, நீர் ஆப்பிள், பேரி, வாழை, ஆரஞ்சு, கொய்யா, கருப்பு மிளகு, ஏலக்காய் போன்றவை ஏற்காட்டில் விளைகின்றன. சந்தனம், தேக்கு மற்றும் சில்வர் ஓக் ஏராளமாக உள்ளன. காட்டெருமை, மான், நரிகள், கீரிபிள்ளைகள், பாம்புகள், அணில்கள் போன்ற விலங்கு வகைகளும், பறவை இனங்களான புல்புல், கருடன், சிட்டு குருவி மற்றும் ஊர்குருவி வகைகள் இங்குள்ள காடுகளில் காணப்படுகின்றன.
சுற்றுலா இடங்கள்
பரந்த அமைதியான பள்ளதாக்குகளும் அழகிய இயற்கை காட்சிகளையும் உடைய ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் கண்டு களிப்பதற்கான இடங்கள் பல உள்ளன. சேலம் பேருந்து நிலையத்திலிருந்து ஏற்காட்டிற்கு பேருந்துகள் இயக்கப்படுவதோடு ஏற்காட்டிலும் வசதிக்கு ஏற்ப தங்குமிடங்களும் உள்ளன.
ஏற்காடு பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஏரி தென்னிந்தியாவில் உள்ள கோடை வாசஸ்தலங்களில் அமையப்பெற்ற இயற்கையான ஏரியாகும். இந்த ஏரியில் படகு பயணம் தமிழ்நாடு சுற்றுலா துறையால் நடத்தப்படுகிறது. இந்த ஏரியின் கரையில் பூங்காக்கள் உள்ளன.
ஏற்காட்டில் உள்ள பட்டுப்பண்ணையும் புகழ்பெற்றதாகும். ஏற்காட்டில் தாவரவியல் பூங்காவும் உள்ளது. இங்குள்ள ரோஜா தோட்டம் கண்ணை கவரும் வகையிலானதாகும். பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்காட்டின் கிழக்கு முனையில்அமைந்துள்ள பக்கோடா பாயிண்ட் எனப்படும் காட்சி முனை உள்ளது. இந்த காட்சிமுனை பிரமிட் பாய்ன்ட் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த இடத்துக்கு அருகாமையில் உள்ளூர் மக்களுக்கும் பழங்குடியினருக்கும் முக்கியமான தெய்வத்தலமாக ஸ்ரீ ராமர் கோவில் உள்ளது.
பேருந்து நிலையத்திலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் ஏரியிலிருந்து வழிந்து ஓடும் கிள்ளியூர் நீர்வீழ்ச்சி ஏற்காட்டில் பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்றாகும். ஏற்காட்டில் உள்ள லேடிஸ் சீட், ஜென்ஸ் சீட் என்று அழைக்கப்படும் காட்சி முனைகள் (view points) உயரமான பாறைகளாக அமைந்துள்ளதால் அங்கிருந்து சேலத்தின் அழகை கண்டு களிக்க முடியும். ஏற்காடு அருகே உள்ள கரடி குகை என அழைக்கப்படும் குகை ஒன்று தரை மட்டத்திலிருந்து 7 அடிக்கு கீழே அமைந்து கண்ணை கவருவதாக உள்ளது. ஆதிகாலத்தில் மக்கள் குகைகளில் வாழ்ந்த போது பயன்படுத்தப்பட்டதாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
புகழ்மிகு சேர்வராயன் கோவில்
ஏற்காட்டில் இருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் சேர்வராயன் மலையின் உச்சியில் மலை குகைக்குள் காவேரி தாயுடன் சேர்வராயன் சுவாமி தோற்றம் அளிக்கும் கோயில் உள்ளது. மிகவும் சக்தி படைத்தது என கருதப்படும் இந்த கோயிலுக்கு ஏற்காட்டுக்கு செல்லும் மக்கள் இங்கு செல்ல தவறுவதில்லை. ஒவ்வொரு மே மாதத்திலும் இங்கு நடைபெறும் திருவிழா மலைவாழ் மக்கள் கொண்டாடுவதாகவும் வண்ணமயமானதாகவும் உள்ளது. ராஜ ராஜேஸ்வரி கோவில் ஏற்காட்டிலிருந்து சேர்வராயன் கோவில் வழித்தடத்தில் உள்ளது. ஏற்காட்டில் இருந்து 7 கி.மீ. தொலைவில் நாகலூர் லலிதா திரிபுரசுந்தரி திருக்கோயில், நாகலூர் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது.
ஏழைகளின் உதகமண்டலம் என்று ஏற்காடு அழைக்கப்பட்டாலும் இங்குள்ள தட்பவெட்ப நிலை எப்போதும் குளிர்ச்சியான காலநிலையை கொண்டதாக இல்லை. எவ்வாறு இருப்பினும் ஏற்காடு சுற்றுலா அனைவருக்கும் விருப்பமானதாகவே அமையும்..