spot_img
May 14, 2024, 8:32 am
spot_img

துவரம் பருப்பு பற்றி அறிந்ததும் அறியாததும்! கலப்படங்களைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்!

இந்தியாவில் தக்காண பீடபூமியில் 5,400 ஆண்டுகளுக்கு முன்பே பருப்பு  விதைகள் இருந்ததாக தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். மேலும், துவரஞ்செடியின் (pigeon pea plant) விதைகள் உலர்த்தப்பட்டு பிரிக்கப்படுவதன் மூலம் கிடைக்கக்கூடிய துவரம் பருப்பின் தாயகம் இந்தியா என்றும்   ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

சத்துக்கள்

100 கிராம் துவரம் பருப்பில் 22.86 கிராம் புரோட்டின், 62.86 கிராம் கார்போஹைட்ரேட் கிராம், 17.1  கிராம் நார்ச்சத்து,  2.86 கிராம் சர்க்கரை உள்ளது.  343 kcal ஆற்றல், 1,392 மில்லி கிராம் பொட்டாசியம்,  86    மில்லி கிராம் சோடியம், 57 மில்லி கிராம் கால்சியம், 3.09 மில்லி கிராம் இரும்புச்சத்து உள்ளிட்டவையும் உள்ளன.

நன்மைகள்

துவரம் பருப்பில் உள்ள முக்கிய கனிமமான பொட்டாசியம்  வாசோடைலேட்டராக  செயல்பட்டு  ரத்த அழுத்தத்தை குறைப்பதால் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு துவரம் பருப்பு சிறந்ததாகும். துவரம் பருப்பில் உள்ள நல்ல நார்ச்சத்து (Fibre) பசியை குறைத்து மெட்டபாலிசத்தை அதிகரித்து அதிக கலோரியை உட்கொள்வதில் இருந்து தடுத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது.

நீரிழிவு இரண்டாம் வகை பாதிப்பு உள்ளவர்களுக்கு    துவரம் பருப்பு மிகுந்த பயனளிக்கக் கூடியதாகும். துவரம் பருப்பில் உள்ள ஆக்ஸிஜனேற்ற செயல்பாடு மற்றும் அதிக நார்ச்சத்து காரணமாக மொத்த கொழுப்பு மற்றும் கெட்ட கொழுப்பை (LDL) குறைக்க துவரம் பருப்பு பயன்படுகிறது.

துவரம்  பருப்பில் உள்ள   மெக்னீசியம் ஆரோக்கியமான நோயெதிர்ப்பு மண்டலத்தை உருவாக்கவும் நோய்  தொற்றுக்களை தடுக்கவும் பயன்படுகிறது. இரத்த சோகை மற்றும் பிறக்காத இளம் குழந்தைகளில் சில நரம்பு குழாய் குறைபாடுகளுக்கு ஃபோலேட்டின் குறைபாடு முக்கிய காரணமாகும். துவரம் பருப்பில் ஃபோலேட்டின்  உள்ளதால் ரத்த சோகையை தடுக்க துவரம் பருப்பு உதவுகிறது.  கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் மெக்னீசியம் போன்றவை துவரம் பருப்பில் கிடைப்பதால் வளரும் குழந்தைகளின் எலும்புகளை பலப்படுத்தவும் வயதானவர்களுக்கு ஏற்படும் எலும்பு அடர்த்தி குறைவை மீட்டெடுக்கவும் துவரம் பருப்பு உதவுகிறது,  

ஒவ்வாமை

துவரம் பருப்பினால் பக்க விளைவுகள் இல்லை எனினும்   சிலரது உடல் துவரம் பருப்பை   ஏற்றுக் கொள்வதில்லை. இவ்வாறு ஒவ்வாமை இருந்தால் தோல் நோய்கள், சுவாச பிரச்சனைகள், வயிறு வீக்கம் போன்றவை ஏற்படுகிறது. ஒவ்வாமை பிரச்சினை உள்ளவர்கள் துவரம் பருப்பை முற்றிலும் உட்கொள்ளக் கூடாது. செரிமான பிரச்சனைகள் உள்ளவர்கள் துவரம் பருப்பை அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

பளபளப்பான பருப்பு

செயற்கை சுவைகளை கூட்டும்  பாலிஷ் செய்யப்பட்ட பருப்பானது பளபளப்பு செய்யப்படும் போது ஊட்டச்சத்துக்களை இழப்பதோடு சமைக்கவும் அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது. பருப்புகளை பளபளப்பாக மாற்றம் செய்து விற்பதால் பருப்பின் மேல் அடுக்கில் உள்ள பூச்சிக்கொல்லிகள் அகற்றப்படும் என விற்பனையாளர்கள் தெரிவிப்பது உண்மையானது அல்ல. பருப்பை பாலிஷ் செய்யும் போது பருப்பை அதிக காலத்துக்கு இருப்பு வைத்து விற்பனை செய்ய முடியும்.  அதுவும் பழையதாகிவிட்டால் மீண்டும் பாலிஷ் செய்தும் விற்பனை செய்கிறார்கள். எண்ணெய், நீர், நைலான் மற்றும் தோல் மெருகூட்டல் போன்றவற்றால் பருப்பு பாலிஷ் செய்யப்படும் போது உடலுக்கு தீங்கு விளைவிக்கிறது.

மெருகூட்டப்படாத பருப்பில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துகள் நிறைந்துள்ளன, மேலும் புரதம், மெக்னீசியம், பொட்டாசியம், இரும்பு துத்தநாகம் மற்றும் தியாமின் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் உள்ளன.  பருப்பை தண்ணீரில் கழுவும் போது பருப்பு பாலிஷ் செய்யப்பட்டதா? அல்லது செய்யப்படாததா?  என்பதை கண்டறிய முடியும்.

கலப்படம்

துவரம் பருப்பு பதப்படுத்தும் போது உடலுக்கு தீங்கு விளைவிக்கும்   கேசரி பருப்பு மற்றும் பத்தரிப்பருப்பு (kesari dal, Batri dal) போன்ற பருப்புகள்   கலப்படம் செய்யப்படுகிறது. நீங்கள் வாங்கும் தயாரிப்புகளில் உரிம எண், பொருட்களின் பட்டியல், உற்பத்தி தேதி மற்றும் காலாவதி தேதி ஆகியவற்றுடன் FSSAI-சரிபார்க்கப்பட்ட லேபிளும் இருப்பதை எப்போதும் உறுதி செய்யவும்.

பறக்கும் பருப்பு

துவரம் பருப்பு விலை உயர உயர பறப்பதால் துவரம் பருப்பில் கலப்பட விற்பனையும் பாலீஸ் பருப்பின் விற்பனையும்   அதிகரிக்கிறது.  பருப்பு விலை உயர்ந்தாலும் விவசாயி கிடைப்பது என்னவோ எப்போதும் போல குறைவான தொகைதான். இடைத்தரகர்களின் ஆதிக்கத்தால்தான் பருப்பின் விலை உயர்வும் கலப்பட விற்பனையும் அதிகரிக்கிறது   என்றே கருத வேண்டிய சூழ்நிலை உள்ளது.  நியாயமான விலையில் தரமான துவரம் பருப்பு கிடைக்க உணவு பாதுகாப்பு துறை தகுந்த நடவடிக்கை மேற்கொள்வதும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுவதும் மிக அவசியமானது. பருப்பு வகைகளின் விலையை அரசு நிர்ணயம் செய்வதும் கண்காணிப்பதும் கட்டுப்படுத்துவதும் அவசியமாகும். உழவர்- விற்பனையாளர் கூட்டுறவு சங்கங்கள் மூலம் நேரடி விற்பனை மக்களுக்கு நல்ல பருப்பு கிடைக்க உதவும் எனலாம்.

நுகர்வோர் பூங்கா
நுகர்வோர் பூங்கா
நுகர்வோர் பூங்காவின் படைப்பு

தொடர்புடைய கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்