அமைவிடம்
கடல் மட்டத்திலிருந்து 800 அடிக்கு மேல் ஆனைமலை மலைத் தொடரிலும் ஆனைமலை புலிகள் காப்பகத்திலும் டாப்சிலிப் அமைந்துள்ளது. சுற்றிலும் பசுமையான மலைகள் மற்றும் தனித்துவமான தேக்கு, மூங்கில் காடுகளுடன் டாப்சிலிப் அமைந்துள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து 26 கிலோ மீட்டர் தரை வழியாக பயணித்து டாப்சிலிப் நுழைவு சோதனைச் சாவடியை அடைந்து அங்கிருந்து மலைப் பாதையில் சுமார் 10 கிலோ மீட்டர் பயணித்தால் டாப்சிலிப் சென்றடையலாம். வழியில் ஆழியார் நீர்த்தேக்கமும் வானுயர்ந்த மூங்கில் மற்றும் தேக்கு மரங்களும் நம்மை வரவேற்கும். வால்பாறையில் இருந்து டாப்சிலிப் 65 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
சரித்திரம்
இங்கிலாந்தில் மரங்கள் தட்டுப்பாடு ஏற்பட்டபோது இந்தியா, பர்மா நாடுகளில் உள்ள காடுகளில் மரங்களை வெட்டி எடுத்து இங்கிலாந்துக்கு கொண்டு செல்ல ஆங்கிலேயர்கள் திட்டமிட்டனர். அப்போது ஆனைமலை காடுகளில் வலிமை மிகுந்த தேக்கு மரங்கள் உயர்ந்து வளர்ந்து இருப்பதை அவர்கள் கண்டறிந்தனர். ஆனைமலை காடுகளில் தேக்கு மரங்களை வெட்டி கீழே கொண்டு வருவதற்கு சிரமமாக இருந்ததால் மரங்களை ஒரு இடத்தில் குவித்து அங்கிருந்து தரைப்பகுதிக்கு ஆங்கிலேயர்கள் உருட்டி விட தேர்ந்தெடுக்கப்பட்ட குக்கிராமத்தை டாப்ஸ்லிப் என ஆங்கிலேயர்கள் பெயரிட்டனர். தரைப்பகுதியில் இருந்து மாட்டு வண்டிகளில் மரங்களை பொள்ளாச்சிக்கு கொண்டு சென்று அங்கிருந்து ரயிலில் கொச்சிக்கு எடுத்துச் சென்று அங்கிருந்து மும்பை துறைமுகம் வழியாக இங்கிலாந்துக்கு தேக்கு மரங்களை ஆங்கிலேயர்கள் எடுத்துச் சென்றனர்.
காட்டு யானைகளை பிடித்து அவற்றிற்கு பயிற்சி அளித்து மரக்கட்டைகள் இழுத்துச் செல்லப்பட்டன. இதற்காகவே கடந்த 1920 ஆம் ஆண்டில் ஆனைமலை சுங்கத்தில் வளர்ப்பு யானை முகாம் ஏற்படுத்தப்பட்டது. இந்த முகாம் கடந்த 1956 ஆம் ஆண்டில் வரகழியாருக்கு மாற்றம் செய்யப்பட்டது. கடந்த 1889 ஆம் ஆண்டு டாப்சிலிப்பில் இருந்து 11 கிலோமீட்டர் தண்டவாளம் அமைக்கப்பட்டு தேக்கு மரங்கள் கீழே கொண்டு செல்லப்பட்டன.
ஆனைமலை காடுகள் அழிக்கப்பட்டு வந்த நிலையில் ஆங்கிலேய அதிகாரியான ஹியூகோ பிரான்சிஸ் ஆண்ட்ரவ் வுட் என்பவர் கோவை வன சரகத்தில் துணை வன பாதுகாவலராக 1956 ஆம் ஆண்டில் பொறுப்பேற்றார். ஆனைமலையை அழிவிலிருந்து காப்பதற்காக மரங்களை வேரோடு வெட்டாமல் மரங்கள் துளிர்பதற்காக ஓரிரு அடிகள் மரங்களை தரைக்கு மேலாக விட்டு மரங்களை வெட்டும் முறையை அவர் அறிமுகப்படுத்தியதால் ஆனைமலை காடுகள் அழிவில் இருந்து காப்பாற்றப்பட்டது.
இயற்கை
கூட்டம் கூட்டமாக யானைகள் உலா வரும் பகுதி என்பதால் யானை மலை என்று அழைக்கப்பட்ட இந்த பிரதேசம் பெயர் மருவி ஆனைமலை என மாறியது. இந்த ஆனைமலை தொடரில் அமைந்துள்ள டாப் ஸ்லிப் பகுதியில் கண்ணை மயக்கும் வனப்பகுதிகளும் இந்தப் பகுதியில் யானைகள், மான்கள், காட்டெருமைகள் என பல விதமான வனவிலங்குகளும் அதிகமாக உள்ளன. அக்டோபர் முதல் ஜனவரி மாதம் வரை இந்த பகுதியில் மிதமான சுற்றுலாவுக்கு ஏற்ற மிதமான தட்பவெப்பம் நிலவுகிறது.
சுற்றுலா
டாப்சிலிப்புக்கு செல்ல பொள்ளாச்சியில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் அனுமதி பெற வேண்டும். இங்கு தங்குவதற்கு அரசு நிர்வாகிக்கும் தங்கும் இடங்களில் முன்பதிவு செய்வது நல்லது. தனியார் தங்குமிட வசதிகள் இங்கு கிடையாது. வனத்துறையால் பராமரிக்கப்படும் மர வீடுகள் மற்றும் மூங்கில் வீடுகள் உள்ளன. இங்கு வனத்துறையினரிடம் கட்டணம் செலுத்தி காட்டுக்குள் யானை மீது 20 நிமிடம் சவாரி செய்யலாம். இனிமையான அனுபவமாக இருக்கும். வாகனங்கள் மூலம் காட்டுக்குள் சவாரி செல்ல (safari) போதுமான நபர்கள் இருந்தால் வனத்துறையினர் அழைத்துச் செல்கின்றனர். இதற்கு செல்லும் வழியில் மான்கள், மயில்கள், கரும் குரங்குகள் போன்றவற்றை பார்க்கலாம். யானைகள் வளர்க்கும் இடத்திற்கும் இந்த பயணத்தில் அழைத்துச் செல்வார்கள்.
டாப்சிலிப்சில் ட்ரக்கிங் செல்வது நல்ல அனுபவமாக இருக்கும். கொலம்புமலை- 10 கி.மீ., அம்புலி காவற்கோபுரம்- 6 கி.மீ., கோழிகம்முத்தி-12 கி.மீ. மற்றும் கரியன் சோலா- 4 கி.மீ. ஆகியவை மலையேற்றப் பாதைகளில் சில. இதற்கென பாதுகாப்பு அம்சங்களை அறிந்த வழிகாட்டிகள் உள்ளனர். நீங்களும் ஒருமுறை டாப்சிலிப் செல்லலாம் இயற்கை அழகை ரசித்துப் பார்க்கலாம்.