spot_img
October 6, 2024, 9:51 am
spot_img

காலி மனை இடத்தை வரன்முறைபடுத்துவதில் சேவை குறைபாடு புரிந்த நகராட்சி ரூ 50,000/- இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே உள்ள கருவேப்பம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் கார்த்திகேயன் மனைவி எஸ். தமிழ்ச்செல்வி (56). இவர் கடந்த 2000 ஆம் ஆண்டில் நாமக்கல் நகராட்சி எல்லைக்குள் உள்ள 3,200 சதுர அடி பரப்பு காலி மனை இடத்தை விலைக்கு வாங்கியுள்ளார். தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட காலி மனை இடங்களுக்கான வரன்முறைபடுத்துதல் திட்டத்தின் கீழ் விண்ணப்ப பதிவு கட்டணமாக ரூ 500/- செலுத்தி கடந்த 2021 பிப்ரவரி மாதத்தில் தேவையான ஆவணங்களுடன் நாமக்கல் நகராட்சியில் தமிழ்ச்செல்வி சமர்ப்பித்துள்ளார்.

தமிழ்ச்செல்வியின் அங்கீகரிக்கப்படாத வீட்டு மனை இடத்தை அங்கீகரிப்பதற்கான ஒப்புதலுக்காக நாமக்கல் மாவட்ட நகர ஊரமைப்பு உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு நாமக்கல் நகராட்சியின் சார்பில் அவரது விண்ணப்பம் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த 2021 மே மாதத்தில்  வரன்முறைபடுத்துதல் கட்டணம் மற்றும் வளர்ச்சி கட்டணத்தைப் பெற்றுக் கொண்டு வரன்முறைபடுத்துவதற்கான ஆணையை வழங்குமாறு நாமக்கல் நகராட்சிக்கு நகர ஊரமைப்பு உதவி இயக்குனர் அலுவலகத்தில் இருந்து ஒப்புதல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழ்ச்செல்வியும் அவரது கணவரும் நாமக்கல் நகராட்சியை பலமுறை அணுகி கேட்டபோது சரிவர பதில் அளிக்காத நகராட்சி அலுவலர்கள் வரன்முறைபடுத்துவதற்கு மீண்டும் விண்ணப்பம் செய்யுமாறு தெரிவித்துள்ளனர். இதனால் வேறு வழியின்றி   காலி மனை இடத்திற்கு வரன்முறைப்படுத்தி ஆணை வழங்கமாறு விண்ணப்ப பதிவு கட்டணத்தை மீண்டும் கடந்த 2021 ஆகஸ்ட் மாதத்தில் செலுத்தி ஆவணங்களை நாமக்கல் நகராட்சியில் தமிழ் செல்வி சமர்ப்பித்துள்ளார்.

இரண்டாவது முறையும் தமிழ்ச்செல்வியின் விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்டு வரன்முறைப்படுத்துவதற்கான கட்டணத்தையும் வளர்ச்சி கட்டணத்தையும் பெற்றுக் கொண்டு வரன்முறைபடுத்துதல் ஆணை வழங்குமாறு நாமக்கல் மாவட்ட நகர ஊரமைப்பு உதவி இயக்குனர் நாமக்கல் நகராட்சிக்கும் தமிழ் செல்விக்கும் கடிதம் அனுப்பி உள்ளார். இதன் அடிப்படையில் கடந்த 2021 அக்டோபர் மாதத்தில் நாமக்கல் நகராட்சியில் வரன்முறை கட்டணம் ரூ 26,820/-, வளர்ச்சி கட்டணம் ரூ 74,500, கொடி நாள் நிதி ரூ 500/- ஆகியவற்றை தமிழ்ச்செல்வி செலுத்தியுள்ளார்.

உரிய கட்டணங்களை செலுத்திய பின்னரும் காலி மனை இட வரன்முறைபடுத்துதல் ஆணையை நகராட்சி வழங்கவில்லை என்பதால் தமிழ்ச்செல்வி கடந்த 2023 ஏப்ரல் மாதத்தில் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். நகராட்சி சார்பில் தமிழ் செல்வியின் கட்டிட பொறியாளரிடம் வரன்முறைபடுத்துதல் ஆணையை வழங்கி விட்டோம் என்று வாதிடப்பட்டது. விசாரணை முடிவடைந்த நிலையில் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ் தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

தமிழ்ச்செல்வி முதல் முறையாக வரன்முறைப்படுத்துவதற்கு விண்ணப்பித்த போது நகர   ஊரமைப்பு அலுவலகம் அதற்கு ஒப்புதல் வழங்கி உள்ளது. இதனை முறையாக விண்ணப்பம் செய்தவருக்கு நாமக்கல் நகராட்சி தெரிவிக்கவில்லை என்பதும் இரண்டாவது முறையாக தமிழ்ச்செல்வியால் சமர்ப்பிக்கப்பட்ட   விண்ணப்பம்   நகர ஊரமைப்பு அலுவலகத்தால் ஒப்புதல் வழங்கப்பட்டு உரிய  கட்டணங்கள் செலுத்தப்பட்ட பிறகும் தமிழ்ச்செல்விக்கு வரன்முறைபடுத்துதல் ஆணை வழங்கப்படவில்லை என்பதும் சாட்சியங்கள் மூலமும் ஆவணங்கள் மூலமும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால், வழக்கு தாக்கல் செய்தவருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் சிரமங்களுக்கு இழப்பீடாக ரூபாய் 50,000/-த்தை நான்கு வாரங்களுக்குள் வழக்கு தாக்கல் செய்தவருக்கு வழங்க வேண்டும் என்று நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் நாமக்கல் நகராட்சி உத்தரவிட்டுள்ளது.

சாஜ். ம
சாஜ். ம
சாஜ். ம, வழக்கறிஞர்/ சட்டக் கல்லூரி விரிவுரையாளர்

தொடர்புடைய கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்