spot_img
October 6, 2024, 10:08 am
spot_img

ஊர் எங்கும் எல்லாவற்றிற்கும் ஜிஎஸ்டி வரி என்பதே பேச்சு – பெட்ரோலையும் டீசலையும் ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் கொண்டு வந்தால் அவற்றின் விலை குறையும்

97 வகையான துறை அதிகாரங்கள் மத்திய அரசுக்கும் (Central List) 66 வகையான துறை அதிகாரங்கள் (State List) மாநில அரசுக்கும் 47 வகையான துறை அதிகாரங்கள் (Concurrent List) மத்திய, மாநில அரசுகளுக்கு பொதுவாகவும் சுதந்திரத்தின் போது உருவாக்கப்பட்ட இந்திய அரசியலமைப்பில் பிரிக்கப்பட்டிருந்தது. 

பொருட்கள் (Goods) மீதான விற்பனை வரி, பொருட்களை தயாரிக்க தேவைப்படும் மூலப் பொருட்கள் (Goods) மீதான விற்பனை வரி, இன்சூரன்ஸ், வங்கி   போன்று வழங்கப்படும் சேவைகள் (Service) மீதான வரி ஆகியவற்றை விதிப்பதற்கும் வசூலிப்பதற்கான அதிகாரம் மத்திய அரசிடமும் மாநில அரசிடமும்   அரசியலமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்ட அதிகார பகிர்வின் (Concurrent List) காரணமாக இருந்து வந்தது. இதனால் சரக்கு மற்றும் சேவைகள் மீதான வரிகளை மத்திய அரசும் மாநில அரசும் தனித்தனியாக விதித்து வசூலித்து வந்தன. இதனால் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு வகையான மாநில அரசின் வரி விகிதங்கள் பொருட்கள் மற்றும் சேவைகள் மீது இருந்து வந்தது.

ஒரே நாடு – ஒரே வரி விகிதம் என்ற மாற்றத்தை உருவாக்கும் வகையில் கடந்த 2016 ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்பின் 101 வது அரசியலமைப்பு திருத்தத்தை பாராளுமன்றம் இயற்றியது. இதன் மூலம் சரக்கு மற்றும் சேவை வரி விகிதத்தை நிர்ணயிப்பது மற்றும் வசூலிப்பது ஆகியோருக்கான அதிகாரத்தை முழுமையாக மத்திய அரசு தனது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தது. கடந்த 2016 ஆம் ஆண்டில் ஜிஎஸ்டி கவுன்சில் அமைக்கப்பட்டதுடன் 2017 ஆம் ஆண்டு ஜிஎஸ்டி சட்டத்தை மத்திய அரசு பாராளுமன்றத்தில் நிறைவேற்றி அமல்படுத்தியது. 

ஜிஎஸ்டி சட்டம் இயற்றப்பட்டதன் காரணமாக பல மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்புகளை சரி செய்ய நிவாரணம் வழங்குவதற்கும் பாராளுமன்றம் சட்டம் ஒன்றை இயற்றியது. ஆனால், இந்த சட்டப்படி நிவாரணம் மத்திய அரசால் எதிர்க்கட்சிகள்  ஆட்சி செய்யும் மாநிலங்களுக்கு சரிவர வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் நிலை வருகிறது.

சரக்கு மற்றும் சேவைகளை வகைப்படுத்தி அதன் அடிப்படையில் சிலவற்றிற்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரியும் சிலவற்றிற்கு 12 சதவீத ஜிஎஸ்டி வரியும் சிலவற்றிற்கு 18 சதவீத ஜிஎஸ்டி  வரியும் சிலவற்றுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி  வரியும் வசூலிக்கப்படுகிறது.    சில பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு இந்த வரி வசூலிக்கப்படுவதில்லை.  இவ்வாறான வரி விலக்கு அரிதாகவே கொடுக்கப்பட்டுள்ளது.  

நீங்கள் தீப்பெட்டி வாங்கினாலும் விமானம் வாங்கினாலும் ஜிஎஸ்டி வரியை அரசுக்கு செலுத்துகிறீர்கள்.  நீங்கள் இன்சூரன்ஸ் பாலிசியை பெற்று சேவையை பெற்றாலும் கேபிள் டிவி இணைப்பைப் பெற்று சேவையை பெற்றாலும் எல்லா வகையான சேவைகளுக்கு செலுத்தப்படும் தொகையில் ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படுகிறது.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்றவற்றிற்கு ஜிஎஸ்டி வரி சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.  ஆனால், பெட்ரோல், டீசல் போன்ற பொருட்களுக்கு மத்திய, மாநில அரசுகளால்   கலால் (Exercise) மற்றும் மதிப்பு கூட்டு வரி (VAT) உள்ளிட்ட வரிகளையும்   விற்கப்படும் விலையில் சுமார் 50 சதவீதம் நீங்கள் வரி செலுத்துகிறீர்கள். ஒரே நாடு – ஒரே வரி விகிதம் என்ற கொள்கையை மத்திய அரசு வலியுறுத்தும் நிலையில் பெட்ரோல், டீசல் சட்டத்திலிருந்து விலக்கு அளித்து வேறு சட்டப்படி வரி வசூலிப்பது சரியானதா?  என்பது பலரின் கேள்வியாக உள்ளது. 

அரிதான விதிவிலக்குகளை தவிர எல்லா பொருட்களையும் சேவைகளையும் ஜிஎஸ்டி வரிச் சட்டத்தில் கொண்டு வந்துள்ள மத்திய அரசு பெட்ரோல், டீசல் பொருட்களையும் இந்த சட்டத்தின் கீழ் கொண்டு வந்தால் உடனடியாக பெட்ரோல், டீசல் ஆகியன தற்போது   விற்கப்படும் விலையில் இருந்து நான்கில் ஒரு பங்கு உடனடியாக குறையும் என்பதில் ஐயமில்லை. மத்திய அரசு இதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமா?

நா.சின்னச்சாமி
நா.சின்னச்சாமி
நா.சின்னச்சாமி, பணி நிறைவுபெற்ற வருவாய்துறை அலுவலர்

தொடர்புடைய கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்