spot_img
October 6, 2024, 8:35 am
spot_img

நுகர்வோரை பல வழிகளிலும் ஏமாற்ற முயற்சிக்கும் இணைய வர்த்தக முறைகளை அறிவோம்!

இருபத்தோராம் நூற்றாண்டில் தகவல் தொழில்நுட்பத்தின் பரிணாம வளர்ச்சி இணையதளத்தில் பொருட்களை வாங்குவது மற்றும் விற்பது. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் கொரோனா பெருந்தொற்று காலத்திற்கு பிறகு நேரடியாக வணிக வளாகங்களில் சென்று பொருட்களை வாங்குவதை தவிர்த்து இணையதளத்தின் மூலமாக பொருட்களை வாங்குவது விற்பது ஒரு கலாச்சாரமாக உருவாகியுள்ளது. 

ஒவ்வொரு ஆண்டும் விழாக்காலங்களில் மட்டும் 60 ஆயிரத்திலிருந்து 70 ஆயிரம் கோடி அளவிற்கு இணையதளத்தில் நம் இந்தியர்கள் பொருட்களை வாங்கி வருகின்றார்கள். சர்வதேச மற்றும் இந்திய தயாரிப்புகள் இணையதளத்தில் கிடைப்பதும், பண்டிகை காலங்களில் விலை மலிவாக பொருட்கள் இருப்பதும், கடன் வசதிகள் மூலமாக பொருட்களை வாங்குவது போன்ற பல்வேறு வசதிகள் இருப்பதினால் இளைய தலைமுறைகள் அதிக அளவில் இணையதளத்தை நாடி தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி வருகின்றார். இவ்வாறு இணையதளத்தில் பொருட்களை வாங்கும் பொழுதும் விற்கும் பொழுதும் ஒரு சில எச்சரிக்கை வழிமுறைகளை நுகர்வோர்கள் பின்பற்ற வேண்டும். தங்களுடைய உரிமைகள் மறுக்கப்பட்டால் அதை மீட்டெடுப்பது எப்படி? என்கின்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவது ஒவ்வொருவருடைய கடமையாகும். 

போலியான விளம்பரங்கள் மூலமாக தரம் குறைவான பொருட்களை விற்பது, தரமற்ற அல்லது விற்பதற்கு உகந்ததற்ற பொருட்களை ஏமாற்றி விற்பனை செய்வது, தேர்வு செய்த பொருட்களுக்கு பதிலாக மற்ற பொருட்களை நுகர்வோர்களுக்கு விநியோகம் செய்வது, பிரபல பிராண்ட் பெயர்களில் போலியான தயாரிப்புகளை நுகர்வுகளிடம் புழக்கத்தில் விடுவது, குறித்த நேரத்தில் சரியான தேர்வு செய்த பொருட்களை டெலிவரி செய்யாதது, பொருட்களை வேண்டாம் என்று திருப்பி அளிக்கும் பொழுது உரிய பணத்தை திருப்பித் தராமல் அலைக்கழிப்பது  போன்ற வகைகளிலும் நுகர்வோர் ஏமாற்றப்படுகிறார்கள்.

நுகர்வோர் வியாபாரத்தில் வெளிப்படை தன்மையை பின்பற்றாமல் மறைமுகமாக வரிகளை விதிப்பது, நுகர்வோர்களுக்கு தெரியாமல் அவர்களுடைய தகவல்களை மூன்றாம் நபர்களுக்கு பெரும் லாபத்திற்கு விற்பது,  பண்டிகை காலங்கள் மற்றும் தேவைப்படுகின்ற நாட்களில் பன் மடங்கு பொருட்கள் உடைய விலைகளை உயர்த்தி விற்பது, தரப்பட்ட பொருட்களுக்கு தாங்களாகவே கருத்துக்களை உருவாக்கி அந்த பொருட்களை மிகைப்படுத்தி தகவல்களை முன்வைத்து புறம்பாக இணையதளத்தில் வெளியிடுவது, சந்தையில் பொருட்கள் உடைய அளவு அதிகமாக இருந்த போதிலும் பற்றாக்குறை போன்ற தோற்றங்களை உருவாக்கி நுகர்வோர்களை கட்டாயப்படுத்தி பொருட்களை வாங்கக்கூடிய நிலைமை உருவாகுவது போன்ற வகைகளிலும் நுகர்வோர் ஏமாற்றப்படுகிறார்கள்

பாதுகாப்பற்ற வழிமுறைகளின் மூலமாக நுகர்வோர்களிடமிருந்து பணத்தை பெறுவதன் மூலம் பெரும்பாலான பல இணையதள குற்றங்கள் நடப்பதற்கு வழி வகுக்கப்படுகிறது. 21ம் நூற்றாண்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகளில் முதன்மையாக திகழ்வது இணையதள குற்றங்கள் அதனால் ஏற்படக்கூடிய பாதுகாப்பு பிரச்சனைகளும்தான். சர்வதேச அளவில் இணையதள குற்றங்கள் உட்படும் நாடுகளில் மிக முக்கியமான நாடாக நம் நாடு இருந்து வருகின்றது.  எதிர்காலத்தில்  இணையத்தை பயன்படுத்தி நடத்தக்கூடிய குற்றங்களின் எண்ணிக்கையானது பெருகுவதற்கும் வாய்ப்புகள் உண்டு. அதை எதிர் கொள்ளக் கூடிய வகையில் அரசு மற்றும் அரசு சாராத பொது நிறுவனங்கள், தனி மனிதர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்வது இன்றியமையாத ஒரு செயலாக கருதப்படுகிறது.

கவர்ச்சிகரமான விளம்பரங்கள்,  பொருட்கள் நேரடியாக தங்களுடைய வீடுகளுக்கு வந்து சேரக்கூடிய ஒரு நிலை,  பிரபல முன்னணி நிறுவனங்களின் பொருட்கள் உள்ளூரில் கிடைக்காத பொழுது இணையதள மூலமாக வாங்கக்கூடிய வசதி போன்ற பல்வேறு காரணங்களால் இன்று ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தங்களுடைய வருமானத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை செலவு செய்யக் கூடிய பழக்கம் ஏற்பட்டுள்ளது.  இது நேரடியாக நுகர்வோர்களின் சேமிப்பை பாதிப்பதோடு தேவைக்கு அதிகமாக பொருட்களை வாங்கி குவிக்க கூடிய ஒரு மோசமான நுகர்வோர் கலாச்சாரத்தை ஏற்படுத்தியுள்ளது.  உதாரணமாக பயன்பாட்டிற்கு அதிகமாக உள்ள மொபைல் போன் வாங்குவது வருமானத்திற்கு அதிகமாக உடை, காலணிகள் மற்றும் அழகு பொருட்களுக்கு செலவு செய்வது பொருட்கள் இருக்கும் பொழுதே மீண்டும் அதே பொருட்களை வாங்கி குவிப்பது, தேவையில்லை என்றாலும் இணையதளத்தில் பொருட்களை தேடுவது, வாங்குவது போன்ற மோசமான நுகர்வோர் கலாச்சாரத்தை இந்தியாவில் ஏற்படுத்தி உள்ளது. இன்று இந்தியர்களின் சேமிப்பு குறைவதற்கு இணையதள வர்த்தக முறையும் ஒரு காரணி என்று கூறலாம்.

நுகர்வோர்கள் எவ்வாறு ஏமாற்றப்படுகின்றார்கள்? அவர்களுடைய மனித உரிமைகள் எவ்வாறு மீறப்படுகிறது? என்பதை பற்றி சரியாக புரிந்து கொண்டோமானல் எதிர்காலத்தில் இணைய வர்த்தகத்தில் நாம் ஏமாறாமல் இருப்பதோடு நம்முடைய பொருளாதார உரிமைகளை பாதுகாப்பது மற்றும் மீட்டெடுப்பதற்கான வழிமுறைகளை ஏற்படுத்திக் கொள்ள முடியும். 

முனைவர் பி.சக்திவேல்
முனைவர் பி.சக்திவேல்
முனைவர் பி.சக்திவேல், பேராசிரியர், அரசறிவியல் துறை, அண்ணாமலை பல்கலைகழகம்

தொடர்புடைய கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்