பழைய காரை விற்பதாக ஓஎல்எக்ஸ் என்ற ஆன்லைன் செயலியில் விளம்பரம் செய்து மோசடி செய்த வழக்கில் பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு ரூபாய் நான்கு லட்சம் வழங்க நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நாமக்கல்லில் நடராஜபுரத்தில் வசித்து வருபவர் முத்துசாமி மகன் சேகர். கடந்த 2017 மார்ச் மாதத்தில் கார் ஒன்று விற்பனைக்கு உள்ளதாக ஓஎல்எக்ஸ் என்ற ஆன்லைன் செயலியில் வந்த விளம்பரத்தை பார்த்து அதில் உள்ள தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு மதுரைக்குச் சென்று நியூ ராயல் கார் நிறுவன உரிமையாளர் சுதர்சன் என்பவரை சந்தித்துள்ளார். அவர் காட்டிய காரை விலைக்குப் பேசி ரூ 2,81,000/- செலுத்தி மதுரையில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் ஓட்டி வந்த நிலையில் கார் பழுதாகி நின்றுவிட்டது. இதுகுறித்து காரை விற்பனை செய்தவருக்கு தகவல் தெரிவித்த போது அவர் ஒரு மெக்கானிக்கை அனுப்பி காரை எடுத்துச் சென்று விட்டார். காரை வாங்கிய சேகரையும் அவருடன் இருந்த இருவரையும் நாமக்கல் செல்லுமாறும் காரை சரி செய்து கொண்டு வந்து கொடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அதனை நம்பி சேகரும் அவருடன் சென்றவர்களும் நாமக்கல் வந்து விட்டனர்.
காரை வாங்கியவர் பலமுறை காரை விற்ற சுதர்சனை தொடர்பு கொண்ட போதிலும் அவர் காரை சரி செய்து திருப்பி வழங்கவில்லை. இதனால் பாதிப்படைந்த சேகர் நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ் தலைமையிலான அமர்வு கடந்த 2023 மே மாதத்தில் தீர்ப்பு வழங்கியது.
வழக்கு தாக்கல் செய்வதற்கு முன்னர் காரை ஒப்படைக்குமாறு சேகர் சுதர்சனுக்கு வழக்கறிஞர் அறிவிப்பு அனுப்பியுள்ளார். காரை எடுத்து வருவதற்கு ஏற்பட்ட செலவு, பழுதை சரி செய்த பின்னர் காரை கட்டண காப்பகத்தில் பாதுகாத்து வருவதற்கான செலவு ஆகியவற்றை வழங்கினால் காரை எடுத்துச் செல்லுமாறு சுதர்சன் பதில் அனுப்பி உள்ளார்.
வழக்கு விசாரணையின் போது, காரை ஓட்டி பார்த்து நல்ல நிலையில் கார் இருப்பதை உறுதி செய்த பின்னர் சேகர் பணம் கொடுத்து விட்டு காரை எடுத்துச் சென்றார். எதிர்பாராத விதமாக காரில் பழுது ஏற்பட்டு நின்று விட்டதாக சொன்னதால் உதவிக்காக மெக்கானிக்கை அனுப்பி வைத்தேன். அந்த கார் யார் வசம் உள்ளது? என்று எனக்கு தெரியாது என்று காரை விற்றவர் உண்மைக்கு புறம்பாக நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்துள்ளார்.
காரை வாங்கியவர் வழக்கறிஞர் மூலம் அறிவிப்பு அனுப்பிய போது செலவு செய்த பணத்தை கொடுத்தால் காரை தருவதாக கூறிவிட்டு நீதிமன்றத்தில் கார் எங்கு உள்ளது? என்று தெரியாது என காரை விற்றவர் கூறுவது முழு பூசணிக்காய் சோற்றில் வைத்து மறைப்பது போல் உள்ளது என்றும் இதன் மூலம் காரை விற்றவர் நேர்மையற்ற வர்த்தக நடைமுறையை கையாண்டுள்ளார் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது என நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட சேகருக்கு அவர் செலுத்திய தொகை ரூபாய் 2 லட்சத்து 81 ஆயிரத்தை ஒன்பது சதவீத வட்டியுடனும் அவருக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு இழப்பீடு ரூபாய் ஒரு லட்சமும் வழக்கின் செலவு தொகையாக ரூபாய் 19 ஆயிரமும் (மொத்தம் ரூபாய் நான்கு லட்சம்) காரை விற்பனை செய்த சுதர்சன் நான்கு வார காலத்துக்குள் வழங்க வேண்டும் என்று நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.