spot_img
May 15, 2024, 2:57 am
spot_img

முதியோருக்கு சேவை குறைபாடு புரிந்த வங்கி ரூபாய் ஒரு லட்சம் இழப்பீடு வழங்க நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

கோயம்புத்தூர், விளாங்குறிச்சி சாலை, அபிராமி நகரில் வசித்து வருபவர் கணபதி மகன் ஜி. கணேசன் (63). இவர் கடந்த 2022 செப்டம்பர் மாதத்தில் கோவை மாநகராட்சிக்கு பணம் செலுத்துவதற்கான வங்கி கணக்கில் ரூ 1,88,500/-   ஐ   ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, கோயம்புத்தூர் சிட்டி கிளையில் செலுத்தியுள்ளார். ஆனால், வங்கியின் தரப்பில் கோவை மாநகராட்சி வங்கி  கணக்குக்கு பணத்தை அனுப்பாமல் கோவையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ்  வங்கியில் முகமது அஸ்லாம் என்பவருக்கு சொந்தமான கணக்கிற்கு பணத்தை அனுப்பிவிட்டது. பணம் செலுத்திய கணேசன் மாநகராட்சி அலுவலகத்தில் விசாரித்த போது இன்னும் பணம் கணக்குக்கு வரவில்லை என தெரிவித்ததால் அதிர்ச்சி அடைந்து வங்கிக்குச் சென்று தெரிவித்துள்ளார்.

வங்கியின் தரப்பில் வங்கியில் சமர்ப்பிக்கப்பட்ட   செலுத்து சீட்டில் (challan) உள்ள  கணக்கு எண்ணுக்குதான் தங்களால் பணம் அனுப்பப்பட்டது என்று தெரிவித்துள்ளனர். செலுத்துச்சீட்டையும் எந்த கணக்குக்கு பணம் சென்றது என்பதையும் பார்த்தபோது கணக்கெண்ணில் ஒரு எண்ணை மாற்றி பணத்தை அனுப்பியது தெரியவந்துள்ளது.

கணேசனின் வேண்டுகோளின்படி வங்கியின் தரப்பில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியை  தொடர்பு கொண்டு பணத்தை திரும்ப அனுப்புமாறு ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா கேட்டுக் கொண்டுள்ளது. ஆனால், முழு பணத்தையும் திருப்பி அனுப்புவதற்கு முன்னதாகவே இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கணக்கு வைத்திருந்த முகமது அஸ்லாம்   ரூபாய் 80 ஆயிரத்தை வங்கியில் இருந்து எடுத்து விட்டார். மீத பணத்தை மட்டும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவிற்கு கணேசனின் கணக்கிற்கு அனுப்பி வைத்தது. 

தவறான கணக்கிற்கு பணத்தை அனுப்பி வங்கி சேவை குறைபாடு   புரிந்து மன உளைச்சலையும் இழப்பையும் வங்கி ஏற்படுத்தி விட்டது என்று கணேசன் கடந்த 2023 ஜனவரி மாதத்தில் கோயம்புத்தூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கானது விரைவான விசாரணைக்கு கடந்த பிப்ரவரி மாதத்தில் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ் தலைமையிலான அமர்வு (16-04-2024) வழங்கிய தீர்ப்பில் வங்கி சேவை குறைபாடு புரிந்துள்ளது சாட்சியம் மற்றும் ஆவணங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.

தவறான கணக்கின் வாடிக்கையாளர் எடுத்த ரூபாய் 80 ஆயிரம் காவல்துறை மூலம் வசூலிக்கப்பட்டு விட்டது. இருப்பினும் சேவை குறைபாடு புரிந்ததால் மூத்த குடிமகனுக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் சிரமங்களுக்கு இழப்பீடாக வங்கி நிர்வாகம் வழக்கு தாக்கல் செய்தவருக்கு ரூபாய் ஒரு லட்சத்தை நான்கு வாரங்களுக்குள் வழங்க வேண்டும் என்றும் தவறினால் ஆண்டொன்றுக்கு 9 சதவீத வட்டி சேர்த்து வழங்க வேண்டும் என்றும் நாமக்கல் மாவட்ட நுகர்வோர்  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

நுகர்வோர் பூங்கா
நுகர்வோர் பூங்கா
நுகர்வோர் பூங்காவின் படைப்பு

தொடர்புடைய கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்