spot_img
November 21, 2024, 3:39 pm
spot_img

ஒரே நாடு… ஒரே நாளில் நாடு முழுவதும் தேர்தல்… ஆச்சரியம் ஆனால் உண்மை

வணக்கம். இது பிபிசிசியின்  இந்திய தேர்தல் சிறப்பு செய்தி அறிக்கை. எங்கள் சிறப்புச் செய்தியாளர்கள் திரட்டிய தகவல்கள்,  மக்களிடையே எடுக்கப்பட்ட பேட்டிகள் ஆகியவற்றின் தொகுப்பு.  

140 கோடி மக்கள் தொகையைக் கொண்ட இந்திய தேசத்தில் 97 கோடி மக்கள் வாக்காளர்களாக இருக்கிறார்கள். இந்திய பாராளுமன்றத்தின் 543 மக்களவைத் தொகுதிகளுக்கும் நேற்று தேர்தல்கள் நடைபெற்று முடிந்தன. 

இந்தியாவில் சுதந்திரம் பெற்ற பின்னர் 77 ஆண்டுகளில் 17 முறை மக்களவை தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. ஆனால், ஒவ்வொரு மக்களவைத் தேர்தலிலும் பல்வேறு கட்டங்களாக பல நாட்களில் தேர்தல்கள் நடத்தப்படுவது வழக்கமாக இருந்தது. ஆனால், இந்த முறை நாடு முழுவதும் ஒரே நாளில் தேர்தல் நடத்தப்பட்டது மிகப்பெரிய சரித்திர சாதனையாக பார்க்கப்படுகிறது. இவ்வாறு ஒரே நாளில் நாடு முழுவதும் தேர்தல் நடத்தப்படுவதற்கு கடந்த 10 ஆண்டுகளாக திட்டமிடப்பட்டது.  

நாடு முழுவதும் பல கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் போது குறைந்தபட்சம் இரண்டு மாதங்கள் முதல் அதிகபட்சமாக நான்கு மாதங்கள் வரை மத்திய, மாநில அரசுகள் அன்றாட அரசின் பணிகளை தவிர (except routine works) வளர்ச்சி பணிகள் எதனையும் செய்யாமல் “அரசு முடக்கம்“ என்ற அளவிற்கு நிலைமை இருந்து வந்தது. ஒரே நாளில் நாடு முழுவதும் தேர்தல்கள் நடத்தப்பட்டதன் மூலம் இந்த நிலை மாற்றப்பட்டு  இருப்பது மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

தேசம் முழுவதும் ஒரே நாளில் தேர்தல் நடத்தப்பட்டதால்   கள்ள வாக்குப்பதிவு, வாக்குச்சாவடிகளை கைப்பற்றுதல், வாக்குகளுக்கு பணம் வழங்குதல் உள்ளிட்ட தேர்தல் குற்றங்கள் பல மடங்கு   குறைந்துள்ளது.  தேர்தல் நடைபெற்று பல நாட்கள் கழித்து வாக்குகள் எண்ணப்படுவதால் இடைப்பட்ட காலத்தில் வாக்கு பெட்டிகளில் மோசடி செய்யப்படுமோ? என்று மக்களிடையே நிலை வந்த அச்சம் அகற்றப்பட்டிருக்கிறது.

இந்த முறை நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அரசியல் கட்சிகள் நடத்தும் பேரணிகள், பொதுக்கூட்டங்கள் உள்ளிட்ட பிரச்சாரங்களுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்திருந்தது.  இதற்கு மாற்று ஏற்பாடாக தேர்தல் ஆணையத்தின் சார்பில் பிரச்சாரக் கூட்டங்களும் தொலைக்காட்சியில் பிரச்சார இயக்கமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  

ஒவ்வொரு தொகுதியிலும் தேர்வு செய்யப்பட்ட இடங்களில் தேர்தல் ஆணையம் பிரச்சாரக் கூட்டங்களை ஏற்பாடு செய்து அந்த கூட்டத்தில்   அரசியல் கட்சியின் வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தங்கள் கருத்துக்களை எடுத்துக் கூறும் வகையில் பேச வைத்தது இந்திய தேர்தல் வரலாற்றில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.  ஒரே நாளில் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நேரங்களை ஒதுக்கி அரசின் தொலைக்காட்சியில் அரசியல் கட்சிகளின் சாதனைகளையும் வாக்குறுதிகளையும்   பேசுவதற்கு இந்த முறை இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்திருந்தது. வேறு வகையான அனைத்து தேர்தல் பிரச்சாரங்களுக்கும் தேர்தல் ஆணையத்தால் தடை விதிக்கப்பட்டிருந்தது.  இதனால் ஒவ்வொரு தேர்தலிலும் தேர்தல் கட்சிகளும் வேட்பாளர்களும் செய்யும் செலவுகள் முற்றிலும்  இல்லாமல் போனது.

இந்த முறை நடைபெற்ற தேர்தலில் புதிய அம்சம் என்னவெனில் அரசியல் கட்சிகளின் தொலைக்காட்சி பிரச்சார நாளில் விடுமுறை அறிவிக்கப்பட்டு கட்டாயம் தொலைக்காட்சி வாக்காளர்கள் அனைவரும் பிரச்சாரத்தை கேட்க வேண்டும் என்ற புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டதாகும்.  பார்க்க தவறியவர்களுக்கு அபராதங்கள் விதிக்கப்பட்டதோடு  அவர்களுக்கு பிரத்தியோகமாக மறு ஒளிபரப்புக்கும் ஏற்பாடு  செய்யப்பட்டிருந்தது.

இந்த முறை நடைபெற்ற தேர்தலில் புதிய விதி என்னவெனில் தேர்தல் கட்சிகள் அல்லது வேட்பாளர்கள் வழங்கும் வாக்குறுதிகள் எவ்வாறு சாத்தியம்? என்பதையும் எவ்வளவு காலத்துக்குள் வாக்குறுதி நிறைவேற்றப்படும்? என்பதையும் குறித்த அறிக்கையை தேர்தல் ஆணையத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும்.  

இன்னும் ஆச்சரியமான தகவல் என்னவெனில் தேர்தல் முடிவடைந்து 24 மணி நேரத்திற்குள் முடிவுகள் வர உள்ளன என்பதாகும்.  நடந்து முடிந்த தேர்தல்கள் இத்தகைய சாதனைகளைப் படைத்துள்ள நிலையில் ஒரே நாடு, முதல் நாள் தேர்தல், இரண்டாவது நாள் முடிவு, மூன்றாவது நாள் வாக்குறுதிகள் நிறைவேற்றம் என்ற சிறப்பு செய்தி அறிக்கை  பூங்கா இதழில் ( www.thenewspark.in ) வெளியாகி உள்ளது. படிக்கத் தவறாதீர்.

ஏதோ சத்தம் கேட்க ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த வாக்காளர்சாமி கண்ணை விழித்துப் பார்த்தார். அப்போதுதான் தெரிந்தது தான் கனவில் செய்தி   அறிக்கையை கேட்டுக் கொண்டிருந்தது. 

நுகர்வோர் பூங்கா
நுகர்வோர் பூங்கா
நுகர்வோர் பூங்காவின் படைப்பு

தொடர்புடைய கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்