spot_img
September 14, 2024, 3:13 pm
spot_img

எப்போது கிடைக்கும் நுகர்வோருக்கு முழு சுதந்திரம்?

உலகெங்கும் நிலவிய மன்னர் ஆட்சி முறை ஒழிக்கப்பட்டு மக்களாட்சி அரசுகள் தோன்றி சுமார் 200 ஆண்டுகள் கழித்தே நுகர்வோர் பாதுகாப்பு குறித்து மக்களாட்சி அரசுகள் பேச தொடங்கின. 1950- களுக்கு பின்னரே நுகர்வோர் பாதுகாப்பு குறித்த விவாதங்கள்   அரசுகளிடையே ஏற்பட்டன. சர்வதேச அளவில் 1959 ஆம் ஆண்டில்தான் ஐக்கிய நாடுகளின் நுகர்வோர் பாதுகாப்புக்கான  வழிகாட்டுதல்கள் உருவாகின. ஒவ்வொரு நாடும் தமது நாட்டின் பொருளாதார சுதந்திரத்தை நிலைநாட்ட மேற்கொள்ளும்முயற்சிகளின் பாதி அளவு நுகர்வோர் சுதந்திரத்திற்கான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை.

உற்பத்தி, விற்பனை மற்றும் சேவை துறைகளின் வளர்ச்சி நாட்டின் பொருளாதாரத்தை வளரச் செய்து பொருளாதார சுதந்திரத்தை அடைய உதவிகரமாக இருக்கிறது. இந்த துறைகளின் வளர்ச்சிக்கு நுகர்வோரின் நுகர்வு கலாச்சாரம் மிக அத்தியாவசியமான ஒன்றாகும். அதே சமயத்தில் நுகர்வோர் எந்த வகையிலும் சுரண்டப்படாமல் நுகர்வோருக்கு பாதுகாப்பு வழங்குவது அரசின் தலையாய கடமைகளில் ஒன்றாகும். மக்களாட்சி நாட்டில் ஒவ்வொரு நுகர்வோரும் நாட்டின் குடிமக்களே. குடிமக்கள் அமைதியாக, மகிழ்ச்சியாக வாழ தேவையான நடவடிக்கைகளில் ஒன்றான நுகர்வோர் பாதுகாப்பை மேற்கொள்வது அரசின் முதன்மை பணிகளில் ஒன்றாக இருக்க வேண்டும்.

நுகர்வோர் சுரண்டப்படாமல் இருக்க நாட்டில் விற்பனை செய்யப்படும் எந்த ஒரு பொருள் அல்லது சேவையின் விலை நியாயமானதாக இருப்பது மிக முக்கியமானதாகும். விலை நிர்ணயம் மற்றும் விலை கட்டுப்பாடு ஆகிய அரசின் கைகளில் மேலோங்கி இருந்து நுகர்வோரின் பணத்தை நியாயமற்ற முறையில் வர்த்தக நிறுவனங்கள் சுரண்டுவது எப்போது தடுக்கப்படுகிறதோ, அப்போதுதான் உண்மையான நுகர்வோர் சுதந்திரம் நிலவுகிறது என கூறலாம்.

தட்டுப்பாடு ஏற்படாத பொருட்களை கூட செயற்கையாக தட்டுப்பாட்டை உருவாக்கி விலை உயர்வை ஏற்படுத்தவும் கள்ளச் சந்தையில் விற்கவும் நடத்தப்படும் நியாயமற்ற  வர்த்தகத்திலிருந்து நுகர்வோருக்கு முழு சுதந்திரம் வழங்குவதற்கு கடுமையான நடவடிக்கைகளை மக்களாட்சி அரசுகள் மேற்கொள்ள வேண்டும். நுகர்வோரை தவறாக வழிநடத்தும் விளம்பரங்களின் மூலம் நுகர்வோரின் சுதந்திரம் பறிபோக தவறான விளம்பரங்கள் காரணிகளாக அமைகின்றன. நுகர்வோரின் சுதந்திரத்தை பேணிக்காக்க நுகர்வோரை தவறாக வழி நடத்தும் விளம்பரங்களும் முழுவதும் அகற்றப்பட வேண்டும்.

நுகர்வோருக்கு உற்பத்தி குறைபாடுள்ள பொருட்களை விற்பனை செய்தல், நியாயமற்ற வணிக நடைமுறையை கடைபிடித்தல், சேவை குறைபாட்டை புரிதல் போன்றவற்றின் மூலம்   நுகர்வோருக்கு ஏற்படும் பாதுகாப்பாற்ற தன்மையை முற்றிலும் மாற்றி நுகர்வோருக்கு பாதுகாப்பான   சுதந்திரத்தை ஏற்படுத்திக் கொடுப்பது மக்களாட்சி அரசுகளின் கடமையாகும்.  இணையதள பயன்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில் இருண்ட வணிக  நடைமுறைகளும் அதிகரித்து வருகின்றன. இருண்ட வணிக நடைமுறைகளின் மூலம் நுகர்வோரின் சுதந்திரம் பறிபோவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

உண்ணும் உணவுப் பொருட்களிலும் வாங்கும் ஒவ்வொரு பொருட்களிலும் கலப்படம் செய்யும் கயவர்களின் செயல்களில் இருந்து நுகர்வோருக்கு சுதந்திரம் வேண்டும். கலப்படத்தை முற்றிலும் ஒழிப்பதோடு உணவு பொருட்களில் தேவைக்கு அதிகமான ரசாயன கலப்பையும் ஒழிக்க நடவடிக்கைகள் எடுக்காவிட்டால் மக்களின் உடல்நலம் காணாமல் போய்விடும். அத்தியாவசிய பொருட்கள் மக்களுக்கு  நியாயமான விலையில் தடையில்லாமல் கிடைக்காவிட்டால் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாகி விடும். உணவு பாதுகாப்புச் சட்டம், அத்தியாவாசிய பொருட்களுக்கான சட்டம் ஆகியவற்றை வலுப்படுத்தி அதனை தீவிரமாக நடைமுறைப்படுத்துவது காலத்தின் கட்டாயமாகும்.

கல்வி என்பது சேவை என்று உலகளாவிய வர்த்தக ஒப்பந்தத்தில் இந்திய தேசம் கையெழுத்து செய்துள்ள நிலையில் கல்வி நிலையங்கள் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நுகர்வோர் நீதிமன்ற வரையறைக்குள் வருவதில்லை என்ற தேசிய நுகர்வோர் ஆணையத்தின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டியது அவசியமானதாகும். சாதாரண மக்களுக்கு மருத்துவ சேவைகள் கிடைப்பதற்கு தகுந்த அமைப்பு முறையையும் ஏற்பாட்டையும் செய்து மருத்துவ சேவைகளில் நுகர்வோருக்கு அலட்சியம் ஏற்படாமல் உத்தரவாதம் வழங்குவது அரசின் கடமையாகும். மருந்துகள் மற்றும் மருந்து பொருட்களில் கலப்படங்களும் போலிகளும் அதிகரித்து மக்களின் பணத்தையும் உயிரையும் எடுக்கின்ற நிலை மாற்றப்பட வேண்டும்.

பொருட்களின் விற்பனைகளிலும் மருத்துவம், போக்குவரத்து, இன்சூரன்ஸ், வங்கி சேவைகள், வீட்டு உபயோகப் பொருட்களுக்கான சேவைகள் உள்ளிட்ட சேவை துறைகளிலும் நுகர்வோர் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் நுகர்வோர் பாதுகாப்பை உறுதிப்படுத்த 100 சதவீத நுகர்வோர் விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும். நுகர்வோர் எந்தவித அழுத்தங்களுக்கும் ஆட்படாமல் தங்களுக்கு தேவையான பொருட்களையும் சேவைகளையும் பணம் கொடுத்து வாங்க  கூடிய சுதந்திரம், அவ்வாறு வாங்கப்படும் பொருட்கள் மற்றும் சேவைகள் குறித்த முழுமையான விவரங்களை அறிந்து கொள்ளக்கூடிய சுதந்திரம், பாதிப்பு ஏற்படும்போது விரைவான நீதியை நீதித்துறையின் கீழ் இயங்கும் நீதி பரிபாலன அமைப்புகள் மூலம் பெறும் சுதந்திரம் ஆகியவற்றை பெற போதிய நடவடிக்கைகளை ஆளும் கட்சிகளும் எதிர்க்கட்சிகளும்  பொதுமக்களும் தகுந்த முன்னெடுப்பை செய்தால் மட்டுமே உண்மையான நுகர்வோர் சுதந்திரத்தை அடைய முடியும்.

தேவை மக்களுக்கான இரண்டாம் விடுதலைப் போர்

நுகர்வோர் பூங்கா
நுகர்வோர் பூங்கா
நுகர்வோர் பூங்காவின் படைப்பு

தொடர்புடைய கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்