spot_img
September 14, 2024, 3:50 pm
spot_img

இறந்தவரின் உடலை மாற்றி கொடுத்த மருத்துவமனை – ரூபாய் 25 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம்

கடந்த 2009 டிசம்பர் 30 அன்று ஆர். புருஷோத்தமன் என்பவர் உடல் நலக்குறைவால் எர்ணாகுளம் மெடிக்கல் சென்டர் என்ற மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அன்றிரவே இறந்து விட்டார். முக்கிய குடும்ப உறுப்பினர் வரும்வரை இறந்தவரின் உடலை பிணவறையில் வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதால் இறந்தவரின் உடலை பிணவறையில் குளிர்சாதன பெட்டியில் மருத்துவமனை நிர்வாகத்தினர் வைத்துள்ளனர். ஆர். புருஷோத்தமன் இறந்ததற்கு மறுநாள், அதாவது 31 டிசம்பர் 2009 அன்று, இதே மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்து போன ராணுவ உயர் அதிகாரியான லெப்டினன்ட் கர்னல் ஏ.பி. காந்தி அவர்களது உடலும் பிணவறையில் குளிர்சாதன பெட்டியில் மருத்துவமனை நிர்வாகத்தினர் வைத்துள்ளனர்.  

ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியான கோபிநாதன் இறந்து போன புருஷோத்தமனின் மகன் ஆவார். ஜெயஸ்ரீ மற்றும் ராணி என்பவர்கள் இறந்தவரின் மகள்கள் ஆவார்கள். கடந்த 01 ஜனவரி 2010 அன்று, இறந்தவரின் மகன் கோபிநாதனும் இறந்தவரின் பேரன் ஜெயசங்கரும் மருத்துவமனைக்குச் சென்று புருஷோத்தமனின் உடலை தருமாறு கேட்டுள்ளனர். மருத்துவமனையால் அவர்களுக்கு வழங்கப்பட்ட சடலத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த புருஷோத்தமனின் குடும்பத்தினர், “தங்களிடம் வழங்கப்படுவது புருஷோத்தமனின் சடலம் அல்ல” என மருத்துவமனை அலுவலர்களிடம் தெரிவித்துள்ளனர். இதன் பின்னர்தான், இறந்து போன லெப்டினன்ட் கர்னல் ஏ.பி. காந்தி அவர்களது குடும்பத்தினரிடம் புருஷோத்தமன் சடலத்தை கொடுத்துள்ளதும் ஏ.பி. காந்தியின் சடலம் மருத்துவமனையில் உள்ளதும் மருத்துவமனை நிர்வாகத்திற்கு தெரிய வந்துள்ளது.

உடனடியாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் இறந்த லெப்டினன்ட் கர்னல் ஏ.பி. காந்தியின் குடும்பத்தை தொடர்பு கொண்ட போது, தங்களிடம் வழங்கப்பட்ட சடலத்தை மத வழக்கப்படி தகனம் செய்து விட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். தவறுதலாக புருஷோத்தமனின் சடலத்தை வழங்கி விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து மன்னிப்பு கேட்டதால் லெப்டினன்ட் கர்னல் ஏ.பி. காந்தியின் குடும்பத்தினர் புருஷோத்தமனின் அஸ்தியை கொண்டு வந்து புருஷோத்தமனின்   குடும்பத்தினரிடம் வழங்கி விட்டு மருத்துவமனையில் இருந்து லெப்டினன்ட் கர்னல் ஏ.பி. காந்தியின்   சடலத்தை எடுத்துச் சென்றுள்ளனர்.

தங்களது தந்தையின் இறந்த உடலை மாற்றி கொடுத்ததால் தங்களால் தந்தைக்கு செய்ய வேண்டிய இறுதிச் சடங்குகளை செய்ய  இயலவில்லை என்றும் தங்களுக்கு பெருத்த மன  உளைச்சலும் சிரமங்களும் ஏற்பட்டுவிட்டது என்றும் புருஷோத்தமனின் மகள்கள் டாக்டர் ஜெய ஸ்ரீ மற்றும் ராணி ஆகியோர் கேரள மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு நிர்வாகத்தின் மீது தங்களுக்கு ரூபாய் ஒரு கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என வழக்கு தாக்கல் செய்தனர் (Consumer Complaint No. 21/2011).

இறந்த லெப்டினன்ட் கர்னல் ஏ.பி. காந்தியின் நெருங்கிய உறவினர்களான நான்கு பேர், ஆர். புருஷோத்தமனின் சடலம் இறந்த காந்தியின் சடலம் என்று தவறாக அடையாளம் காட்டினர். இதன் காரணமாக எந்த சந்தேகமும்   வராததால் எவ்வித உள்நோக்கமும் இல்லாமல் மருத்துவமனையின் மக்கள் தொடர்பு அலுவலர் புருசோத்தமனின் உடலை காந்தியின் குடும்பத்தினருக்கு வழங்கிவிட்டார். இதனால், தங்கள் தரப்பில் எவ்வித   சேவை குறைபாடும் ஏற்படவில்லை. மேலும், இந்த புகாரை விசாரிக்க நுகர்வோர் நீதிமன்றத்திற்கு அதிகாரம் கிடையாது என்று மருத்துவமனையின் தரப்பில் வாதிடப்பட்டது. விசாரணைக்கு பின் கடந்த 2016 அக்டோபர் 05 அன்று, கேரளா மாநில நுகர்வோர் ஆணையம் வழங்கிய தீர்ப்பில், வழக்கு தாக்கல் செய்தவர்களுக்கு மருத்துவமனை நிர்வாகம் ரூபாய் 25 லட்சத்தை இழப்பீடாக, புகார் தாக்கல் செய்த நாளிலிருந்து ஆண்டொன்றுக்கு 12 சதவீதம் வட்டி சேர்த்து, வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

மாநில நுகர்வோர் ஆணையத்தின் தீர்ப்பை எதிர்த்து தேசிய நுகர்வோர் ஆணையத்தில் மருத்துவமனை நிர்வாகம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் (First Appeal No. 273 of 2017) கடந்த 2019 ஜூலை 04 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பில் வழக்கை தாக்கல் செய்துள்ளவர்களுக்கு ரூபாய் 5 லட்சம் இழப்பீடு வழங்கினால் போதுமானது என்றும் ஆனால், வழக்கின் தீவிரத் தன்மையை கருத்தில் கொண்டு, மருத்துவமனை நிர்வாகம் மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் சட்ட உதவி கணக்கில் ரூபாய் 25 லட்சத்தை செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.

தேசிய நுகர்வோர் ஆணையத்தின் தீர்ப்பை எதிர்த்து மருத்துவமனை நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கில் கடந்த 2024 ஆகஸ்ட் 08 அன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றமானது, “மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் வழங்கியது தீர்ப்பு சரியானது என்றும் தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து மாநில ஆணையத்தின் தீர்ப்புப்படி மருத்துவமனை நிர்வாகம் ரூபாய் 25 லட்சத்தை வழக்கு தாக்கல் செய்தவர்களுக்கு இழப்பீடாக ஆண்டொன்றுக்கு 7.5% வட்டி வீதம் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நாளில் இருந்து கணக்கிட்டு வழங்க வேண்டும்” என்றும் உத்தரவிட்டது (SLP(C) No. 009814 / 2020). ஆனால், நீதியை பெற 16 ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது  வருத்தமாக உள்ளது.

நுகர்வோர் பூங்கா
நுகர்வோர் பூங்கா
நுகர்வோர் பூங்காவின் படைப்பு

தொடர்புடைய கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்