கோயம்புத்தூர், காளப்பட்டி அருகில் உள்ள நேரு நகரில் வசிப்பவர் முருகேசன் மகன் சக்திவேல் (40). கடந்த 2021 டிசம்பர் மாதத்தில் கவர்ச்சிகரமாக வெளியிடப்பட்ட கியூப் ஸ்கொயர் கன்ஸ்ட்ரக்ஷன் என்ற நிறுவனத்தின் விளம்பரத்தை பார்த்து அதன் உரிமையாளர் கலைவாணி அவர்களை அணுகி தமக்கு வீடு கட்டித் தர வேண்டும் என்று கேட்டுள்ளார்.
இடத்தை தேர்வு செய்து ஒப்புதல் வழங்கிய பின்னர் நான்கு சென்ட் நிலத்தில் இரண்டு அறைகள், ஒரு குளியலறை, ஒரு சமையலறை கொண்ட வில்லா வீடு ஒன்றை கட்டி தருவதற்கு ரூ 76,31,804/- செலுத்த வேண்டும் என்று கலைவாணி தெரிவித்ததன் அடிப்படையில் ரூபாய் 21 லட்சத்தை வங்கி கணக்கு மூலமாக சக்திவேல் செலுத்தியுள்ளார்.
கலைவாணியின் வாக்குறுதியை நம்பி ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் கடன் கேட்டு விண்ணப்பம் செய்து வங்கியும் கடன் வழங்க ஒப்புதல் தெரிவித்துள்ளது. சக்திவேல் பலமுறை ரியல் எஸ்டேட் அதிபரை சந்தித்து இடத்தை தமது பெயரில் கிரைய ஆவணம் எழுதிக் கொடுத்தால்தான் வங்கியில் கடன் தருவார்கள் என கூறியுள்ளார். பணத்தைப் பெற்றுக் கொண்ட கலைவாணி இடத்தை வாடிக்கையாளரின் பெயரில் எழுதிக் கொடுக்கவும் கட்டிடப் பணிகளை ஆரம்பிக்கவும் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.
மனமுடைந்த சக்திவேல் ரியல் எஸ்டேட் அதிபரை சந்தித்து கொடுத்த பணத்தை திரும்ப வழங்குமாறு கேட்டுள்ளார். ஆனால், அவர் பணத்தை திருப்பி தர நான்கு மாதம் அவகாசம் வேண்டும் என்று வழக்கறிஞர் மூலம் அறிவிப்பு கொடுத்துள்ளார். வங்கியும் கடன் வழங்குவதாக கொடுத்த அனுமதியை ரத்து செய்து விட்டது.
நான்கு மாதம் கழித்தும் பணம் கிடைக்காததால் பாதிக்கப்பட்ட சக்திவேல் ரியல் எஸ்டேட் அதிபர் மீது கடந்த 2022 நவம்பர் மாதத்தில் கோயம்புத்தூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கானது விரைவான விசாரணைக்காக நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்திற்கு கடந்த பிப்ரவரி மாதம் மாற்றம் செய்யப்பட்டது.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ் தலைமையிலான அமர்வு கடந்த செவ்வாய்க்கிழமை வழங்கிய தீர்ப்பில் கியூப் ஸ்கொயர் கன்ஸ்ட்ரக்ஷன் உரிமையாளர் கலைவாணி சேவை குறைபாடு புரிந்துள்ளதாக வாய்மொழி சாட்சியம் மற்றும் ஆவண சாட்சியங்களால் நிரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் சேவை குறைபாட்டால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு அதன் உரிமையாளர் நான்கு வார காலத்திற்குள் வாடிக்கையாளர் செலுத்திய ரூபாய் 21 லட்சத்தை பணம் செலுத்தப்பட்ட நாளிலிருந்து பணம் வழங்கப்படும் நாள் வரை ஆண்டொன்று ஒன்பது சதவீத வட்டி சேர்த்து வழங்கவும் வாடிக்கையாளருக்கு ஏற்படுத்திய மன உளைச்சல் மற்றும் சிரமங்களுக்கு இழப்பீடாக ரூபாய் 5 லட்சம் வழங்கவும் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.