ஆந்திர பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் (Visakhapatnam, Andhra Pradesh) வசிக்கும் பெத்த நாராயண சுவாமி மகன் சிவப்பிரசாத் (வயது 27) என்பவர் பி. டெக்., படிப்பை முடித்துவிட்டு தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். 2006 டிசம்பர் 12 அன்று சிவப்பிரசாத் கீழே விழுந்ததில் இடது காலில் முழங்காலுக்கு மேலே எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு விசாகப்பட்டினத்தில் உடனடியாக ஆரம்ப நிலை சிகிச்சை (preliminary treatment) மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிறகு மேல் சிகிச்சைக்காக (further management) விசாகப்பட்டினத்தில் இருந்து ஹைதராபாத்துக்கு (Hyderabad) சாலை வழியாக பயணம் செய்து கடந்த 2006 டிசம்பர் ஆறாம் தேதி அன்று காலை 9 மணிக்கு ஹைதராபாத்தில் உள்ள காமினேனி மருத்துவமனைக்கு (Kamineni Hospitals) அவர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
காமினேனி மருத்துவமனையில் சிவ பிரசாத்தை எலும்பு முறிவு சிகிச்சை நிபுணர் மருத்துவர் ஜெபிஎஸ் வித்தியாசாகர் என்பவர் பரிசோதனை செய்து 2006 டிசம்பர் 7ஆம் தேதி அன்று அவருக்கு எலும்பு முறிவை சரி செய்ய அறுவை சிகிச்சை (surgery) செய்துள்ளார். அறுவை சிகிச்சைக்குப் பின்னர் தொடர் மருத்துவ சிகிச்சையில் சிவப்பிரசாத் இருந்த நிலையில் கடந்த 2006 டிசம்பர் 12 அன்று மாலை 4 மணிக்கு இறந்து விட்டதாக அன்று மாலை 5 மணிக்கு சிவபிரசாத்தின் தந்தையிடம் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைக் கேட்டு சிவப்பிரசாத்தின் குடும்பத்தினரும் நண்பர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், மருத்துவ சிகிச்சை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் (medical reports) சிவப்பிரசாத்தின் குடும்பத்தினர் கேட்ட போதும் மருத்துவமனை நிர்வாகம் முழுமையான ஆவணங்களை வழங்கவில்லை.
தனது மகனுக்கு கவனக்குறைவாக சிகிச்சை (medical negligence) வழங்கப்பட்டது குறித்த புகாரை சிகிச்சை அளித்த மருத்துவர் மற்றும் மருத்துவமனை மீது பெத்த நாராயண சுவாமி ஆந்திர பிரதேச மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் (State Consumer Disputes Redressal Commission) பெத்த நாராயண சுவாமி தாக்கல் செய்துள்ளார். தமக்கும் தமது குடும்பத்தினருக்கும் மருத்துவரும் மருத்துவமனை நிர்வாகமும் ரூபாய் 25 லட்சமும் இழப்பீடும் வழக்கு செலவு தொகையாக ரூபாய் 25 ஆயிரமும் வழங்க உத்தரவுடுமாறு புகாரில் கேட்கப்பட்டது. இந்த வழக்கில் மருத்துவ கவனக்குறைவு எதுவும் ஏற்படவில்லை என்று மருத்துவரும் மருத்துவமனையும் மாநில நுகர்வோர் ஆணையத்தில் வாதிட்டனர் அவர்களது வாதத்தை நிராகரித்த மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் கடந்து 2011 ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பில் இறந்த சிவப்பிரசாத்தின் தந்தை பெத்த நாராயண சுவாமிக்கு மருத்துவரும் மருத்துவமனையும் இழப்பீடாக ரூபாய் இரண்டு லட்சத்து 50 ஆயிரமும் வழக்கின் செலவு தொகையாக ரூபாய் இரண்டு ஆயிரமும் வழங்க உத்தரவிட்டது.
வழங்கப்பட்ட தீர்ப்பில் போதிய இழப்பீடு வழங்கவில்லை என்று இறந்தவரின் தந்தையும் (F.A. No. 215 of 2011) தவறாக மருத்துவ கவனக்குறைவு ஏற்பட்டதாக தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது என்று மருத்துவரும் மருத்துவமனையும் F(.A. No. 278 of 2011) தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் (National Consumer Disputes Redressal Commission) மேல்முறையீடு செய்தனர். இந்த இரண்டு மேல் முறையீடுகளையும் விசாரித்த தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் சுமார் 11 ஆண்டுகள் கழித்து கடந்த 2022 ஆகஸ்ட் 26 அன்று தீர்ப்பு வழங்கியது.
இறந்தவருக்கு விபத்தால் ஏற்பட்ட எலும்பு முறிவோடு அவருக்கு நுரையீரல் காயம் ஏற்பட்டு ஆக்சிஜனை சுவாசிப்பது பிரச்சினை ஏற்பட்டுள்ளது என்பதை மருத்துவமனை தாக்கல் செய்துள்ள ஆவணங்கள் காட்டுகின்றன. அவர் அனுமதிக்கப்பட்டவுடன் நுரையீரல் காயத்தை சரி செய்து சுவாசப் பிரச்சனையை குணமாக்கி அதன் பின்னரே எழும்பு முறிவை சரிசெய்ய அறுவை சிகிச்சையை மருத்துவமனை செய்திருக்க வேண்டும். பொது மருத்துவரின் கருத்துரையைப் பெற்று அறுவை சிகிச்சையை செய்திருக்க வேண்டும். அறுவை சிகிச்சையின் போது மயக்க மருந்து கொடுத்த மருத்துவர் அவரது உடல் நிலையை கவனிக்க தவறிவிட்டார். இதற்கு இதன் தொடர்ச்சியாகவே விபத்துக்கு உள்ளானவருக்கு இறப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு மருத்துவச் சிகிச்சையை மேற்கொண்ட மருத்துவரும் பகர பொறுப்பு (vicarious liability) உடைய மருத்துவமனையும் முழு காரணமாகும் என்பதால் மருத்துவரும் மருத்துவமனையும் கவனக்குறைவாக சிகிச்சை வழங்கியுள்ளனர் என்பது நிரூபணம் ஆகிறது என்று தேசிய நுகர்வோர் ஆணையம் தீர்ப்பில் தெரிவித்தது. நுரையீரல் காயத்துக்கும் சுவாச பிரச்சனைக்கும் சரியான சிகிச்சை வழங்கிய பின்னர் காலில் எலும்பு முறிவுக்கு அறுவை சிகிச்சை செய்திருந்தால் இறப்பு ஏற்பட்டிருக்காது என்பது இதன் பொருளாகும்.
மருத்துவரும் மருத்துவமனையும் கவனக்குறைவான மருத்துவ சிகிச்சையை வழங்கியது சாட்சியங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி மருத்துவர் மற்றும் மருத்துவமனையின் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்த தேசிய நுகர்வோர் ஆணையமானது பாதிக்கப்பட்டவர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டை ஏற்று இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி மருத்துவர் ரூபாய் 5 லட்சத்தையும் மருத்துவமனை ரூபாய் 15 லட்சத்தையும் வழக்கு தாக்கல் செய்தவருக்கு ஆறு வாரங்களுக்குள் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
தேசிய நுகர்வோர் ஆணையம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மருத்துவமனை நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் (Supreme Court) மேல்முறையீடு செய்தது. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த 22 ஏப்ரல் 2025 அன்று தீர்ப்பு வழங்கியுள்ளது (SLP (CIVIL) NO(S). 2948 – 2949 of 2023). தேசிய நுகர்வோர் ஆணையம் வழங்கிய தீர்ப்பில் மருத்துவரும் சம்பந்தப்பட்ட மருத்துவர் கவனக்குறைவாக சிகிச்சை வழங்கியுள்ளார் என கூறப்பட்டுள்ளதும் மருத்துவமனை மருத்துவரின் கவனக்குறைவுக்கு பகர பொறுப்பு கொண்டது என கூறப்பட்டுள்ளதும் சரியானது என்றும் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் இருந்து அனுப்பப்பட்ட அறிவிப்பை பெற்றுக்கொண்ட சம்பந்தப்பட்ட மருத்துவர் இழப்பீட்டுத் தொகை ரூபாய் 5 லட்சத்தை உச்சநீதிமன்றத்தில் செலுத்தி வைத்துள்ளார். மேல்முறையீட்டை ஏற்றுக் கொண்ட போது விதித்த நிபந்தனையின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட மருத்துவமனை ரூபாய் 10 லட்சத்தை செலுத்தி வைத்துள்ளது. இறந்தவரின் தந்தைக்கு மருத்துவர் செலுத்தி ரூபாய் 5 லட்சத்தையும் மருத்துவமனை செலுத்திய ரூபாய் 10 லட்சம் மற்றும் அதற்கு வங்கியில் வழங்கப்பட்டுள்ள வட்டியையும் இறந்தவரின் தந்தைக்கு இழப்பீடாக (compensation) வழங்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. மருத்துவரின் கவனக்குறைவுக்கு மருத்துவமனை பகர பொறுப்புடையது என்று உச்ச நீதிமன்ற தீர்ப்பு உறுதிப்படுத்தி உள்ளது.
நுகர்வோர் பூங்கா (The Consumer Park) கருத்து: உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு மகிழ்ச்சியானது. ஆனால், ஒரு நபர் பாதிக்கப்பட்டு 19 ஆண்டுகள் கழித்தே தீர்ப்பு கிடைக்கிறது என்பது வேதனையானது.