spot_img
July 27, 2024, 12:13 pm
spot_img

விண்ணைத் தொடும் காலி மனை இடம், நிலத்தின் விலை  – காரணம் என்ன? எப்படி கட்டுப்படுத்துவது?

சமீப காலமாக ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வீட்டு மனை இடங்களையும் நிலங்களையும் வாங்குவது மிக சிரமமான செயலாக மாறி வருகிறது. பெரும்பாலானோர் சொந்த வீட்டு கனவில் உள்ள நிலையில் வங்கியில் அல்லது தனியார் நிறுவனங்களில் கடன் வாங்கியாவது காலி மனை இடத்தை வாங்கி வீடு கட்ட வேண்டும் என்ற எண்ணத்தை கொண்டுள்ளனர்.  கடன் வாங்கி இடம் வாங்கும் போது காலி மனை இடங்களுக்கு அதிக பணத்தை முதலீடு செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளதால் ஏழை மற்றும் நடுத்தர   மக்கள் அவர்களது வருமானத்தில் பெரும்பகுதியை   மாதாந்திர தவணைத் தொகையாக செலுத்த வேண்டி உள்ளது. 

காலி மனை இடத்தின் விலை என்பது அந்த இடம் இருக்கக்கூடிய பகுதி, அங்கு உள்ள உள்கட்டமைப்பு வசதிகள், அங்கிருந்து வேலை பார்க்கும் இடத்துக்குச் செல்லக்கூடிய   வசதி,  அரசின் கொள்கைகள், விதிகள்  மற்றும் சந்தைப் போக்குகள் ஆகியவற்றைப்   பொறுத்தே அமைகிறது. விலையை நிர்ணயம் செய்வதில் இருக்கக்கூடிய நிலப்பரப்பும் தேவைப்படும் காலி மனை இடங்களின் அளவும் (demand and supply) முக்கிய காரணிகளாக உள்ளன. நகர்ப்புறங்களில் நிலத்தின் இருப்பு குறைவாக உள்ளது.  விரைவான வளர்ச்சி மற்றும்   கிராமப்புறங்களிலிருந்து நகரங்களுக்கு மக்கள் இடம்பெயர்வதால் நிலத்திற்கான   விலை எப்போதும் உயர்கிறது. அதிக வருமானம் பெறக்கூடிய பலர் நகரப்புறங்களில் காலி மனையிடங்கள் மற்றும் வீடுகள் வாங்குவதில் முதலீடு செய்வது அதிகரித்துள்ளது. அதிக வருமானம் உள்ளவர்கள் கூடுதல் விலை கொடுத்து கூட சொத்தை வாங்க தயாராக உள்ள நிலையில் சாதாரண மக்களுக்கு விலை உயர்வு பிரச்சினையாக உள்ளது. விவசாயம் மற்றும் விவசாயம் தொடர்பான தொழில்களுக்காகவும் சிறு தொழில்களுக்காகவும் நிலத்தை  வாங்க   திட்டமிடும் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கும் தற்போது அதிகரித்துள்ள நிலத்தின் விலை மிகுந்த சவால்களை ஏற்படுத்தியுள்ளது.  

சென்னை, மதுரை, கோயம்புத்தூர், சேலம் திருச்சி, திருநெல்வேலி போன்ற பெருநகர பகுதிகளில்   மட்டும் அல்லாமல்  மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளிலும் மாநில நெடுஞ்சாலைகளிலும் பயணம் செய்யும்போது சாலையின் இருபுறமும் பெரும்பாலான விவசாய நிலங்கள் எவ்வித விவசாயமும் இல்லாமல் கம்பி வேலி போடப்பட்டு இருப்பதை பார்க்க முடிகிறது.  சமீப காலமாக கிராம சாலைகளின்   இரு புறங்களிலும் கூட இத்தகைய நிலை அதிகரித்திருப்பதை அறிய முடிகிறது.  இதற்கு முக்கியமான காரணமாக கருதப்படுவது  மிக அதிகமான பணத்தை வருமானமாக பெறுபவர்கள் வேறு சொத்துக்களில் முதலீடு செய்தால் முதலீட்டுக்கான பணத்தின் வருமானம் எவ்வாறு வந்தது என்பதை தெரிவிக்க வேண்டிய நிலை உள்ளதால் அரசு நிர்ணயம் செய்துள்ள சந்தை மதிப்பு தொகையை மட்டும் ஆவணத்தில் காட்டிவிட்டு மீத தொகையை நேரில்   பணமாக கொடுத்து விவசாய நிலங்களை ஏக்கர் கணக்கில் வாங்கி கம்பி வேலி போட்டு கொள்வதாக கூறப்படுகிறது.  

பணத்தை நிலத்தில் முதலீடு செய்பவர்கள் உண்மையாக சந்தையில் ஒரு ஏக்கர் நிலம் எவ்வளவு விலைக்கு  விற்கப்படுகிறது என்பதை காட்டிலும் பல மடங்கு கொடுத்து ஒரே இடத்தில் நிலத்தை வாங்குகிறார்கள்.   தமிழகம் முழுவதும் விவசாயம் செய்யாமல் கம்பி வேலி போடப்பட்ட நிலங்கள் அதிகரித்துள்ளதால் விவசாயத்திற்காக சிறிது நிலம் வாங்க விரும்பும் சிறு விவசாயிகளும் சிறு தொழில் நடத்த நிலம் வாங்க விரும்பும் குறுந்தொழில் புரிபவர்களும் நிலத்தை வாங்க முற்படும் போதும் அதிக வருமானம் பெறுபவர்கள் உண்மையான விலையைக் காட்டிலும் கூடுதலாக கொடுத்து வாங்கிய விலையைத்தான் நிலத்தின் உரிமையாளர்கள் கேட்கிறார்கள்.    முதலாவதாக, விளைநிலங்களில் விவசாயம் செய்யாத நிலை ஏற்படுவதால் விவசாய உற்பத்தி பாதிக்கப்படுகிறது.  இரண்டாவதாக, சாதாரண மக்கள்   விவசாயம் மற்றும் தொழில் புரிவதற்கு நிலங்களை வாங்க முடியாத நிலை ஏற்படுகிறது. 

காலி மனை இடங்களுக்கும் நிலத்திற்கும் அரசு சந்தை மதிப்பை நிர்ணயம் செய்துள்ளது.  தரவுகளை ஆய்வு செய்தால் பதிவு செய்யப்படும் விற்பனை ஆவணங்களில் 99 சதவீதம் சந்தை மதிப்பு தொகைதான் குறிப்பிடப்பட்டு இருக்கும். ஆனால் நில விற்பனை முகவர்களை அணுகி  அரசு நிர்ணயம் செய்துள்ள சந்தை மதிப்பில் நிலம் வாங்கிய தருமாறு கேட்டால் நம்மை மேலேயும் கீழேயும்தான் பார்ப்பார்கள்.  நில விற்பனை முகவர்களும் நிலத்தின்   விலை உயர்வதற்கு காரணம் என்று பலரால் கூறப்படுகிறது.

நிலத்தின் மீதான முதலீடுகளை கண்காணிக்கவும் நில விற்பனை முகவர்களை நெறிப்படுத்தவும் தேவையான சட்ட   நெறிமுறைகளை உருவாக்குவது காலத்தின் கட்டாயமாக உள்ளது.  உடனடியாக மாநில அரசு ஒவ்வொரு மாவட்டத்திலும் நில விற்பனை ஒழுங்குமுறை அமைப்பு ஒன்றை ஏற்படுத்தி காலி மனை இடத்தை அல்லது நிலத்தை விற்பனை செய்பவர்கள் அந்த அமைப்பில் பதிவு செய்ய வேண்டும் என்றும் வாங்க விரும்புபவர்களும் அவர்களது விருப்பத்தை பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் நெறிமுறைபடுத்த வேண்டும்.  நில விற்பனை முகவர்களையும் இந்த அமைப்பின் கீழ் கொண்டு வர வேண்டும்.  இவ்வாறான அமைப்புகளை மாவட்ட அளவில் உருவாக்கி பினாமியாக நிலம் பரிவர்த்தனை செய்வதை கட்டுப்படுத்தி நிலம்  வாங்குபவர்கள் செலுத்தும் உண்மையான விலையை அறிந்து அதற்கான ஆதாரங்களை ஆய்வு செய்து செயற்கையாக காலி மனை இடங்களின், விளை நிலங்களின் விலை கூடுவது கட்டுப்படுத்தப்பட வேண்டும்.  இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளா விட்டால் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வீடு கட்டும் கனவும் விவசாயம் மற்றும் தொழில் செய்யும் கனவும் எட்டாக்கனியாகிவிடும்.

பின்குறிப்பு: இங்கு அதிக வருமானம் பெறக்கூடியவர்கள் என குறிப்பிட்டு இருப்பதை தவறுதலாக   கணக்கில் காட்டாமல் வருமானம் பெறக் கூடியவர்கள் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம்.

நுகர்வோர் பூங்கா
நுகர்வோர் பூங்கா
நுகர்வோர் பூங்காவின் படைப்பு

தொடர்புடைய கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்