spot_img
November 23, 2024, 11:54 pm
spot_img

இன்சூரன்ஸ் நிறுவனம் வாடிக்கையாளருக்கு ரூ. 2.85 லட்சம் வழங்க எர்ணாகுளம் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

கேரள மாநிலம் கொச்சியில் வசித்து வரும் ப்ரீத்தி குளோரியா, அவரது மோட்டார் வாகனத்தை நியூ இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனியில் இன்சூரன்ஸ் செய்திருந்தார். இந்த சமயத்தில் வாகனம் விபத்துக்குள்ளானதால் காப்பீட்டு நிறுவனத்திடம் இழப்பீட்டு கோரிக்கை சமர்ப்பித்து அவர் இழப்பீட்டைப் பெற்றுள்ளார். நியூ இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி பாலிசி காலாவதியானதும் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனியின் ஏஜென்ட் வாகன இன்சூரன்ஸ்- ஐ புதுப்பிக்க அணுகி உள்ளார். ப்ரீத்தி குளோரியாவிடம் ரூ. 26,306/- ஐ பிரிமிய தொகையாக பெற்றுக்கொண்ட யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் ரூ. 6,00,000/- மதிப்புடைய (IDV) புதிய இன்சூரன்ஸ் பாலிசியை வாகனத்துக்கு வழங்கியுள்ளது. 

இந்நிலையில் டிசம்பர் 14, 2017 அன்று மீண்டும் குளோரியாவின் வாகனம் விபத்துக்குள்ளாகி உள்ளது. வாகனத்தை அங்கீகரிக்கப்பட்ட பழுது நீக்கும் பணிமனைக்கு கொண்டு சென்ற போது சேதத்தின் மதிப்பீடு ரூ. 5,09,117/- என தெரிவிக்கப்பட்டுள்ளது. இழப்பீட்டுத் தொகையை வழங்குமாறு ப்ரீத்தி குளோரியா இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் விண்ணப்பித்த போது தகவல்கள் மறைக்கப்பட்டு பாலிசி பெறப்பட்டுள்ளது என்ற அடிப்படையில் இழப்பீட்டுத் தொகையை வழங்க இன்சூரன்ஸ் நிறுவனம் மறுத்துவிட்டது.

இன்சூரன்ஸ் நிறுவனம் இழப்பீட்டு கோரிக்கையை மறுத்ததால் இன்சூரன்ஸ் செய்திருந்தவர் எர்ணாகுளம் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு வழக்கு தாக்கல் செய்திருந்தார். தங்களிடம் இன்சூரன்ஸ் பாலிசி பெறுவதற்கு முன்னதாக வாகனத்திற்கு ஏற்பட்ட விபத்து குறித்து தங்களுக்கு எதுவும் தெரிவிக்கவில்லை என்றும் தங்களிடம் இன்சூரன்ஸ் பெறுவதற்கான முன்மொழிவு படிவத்திலும் (proposal) தங்களது நிறுவனத்தில் இன்சூரன்ஸ் செய்யும் போது செய்வதற்கு முன்னதாக வேறு நிறுவனத்தில் இன்சூரன்ஸ் தொகை  எதனையும் சேதத்துக்காக பெறவில்லை (no claim bonus) என்பதற்கான படிவத்திலும் வாடிக்கையாளர் கையொப்பம் செய்யவில்லை என்றும் இதனால் தாங்கள் அசல் பாலிசியை வாடிக்கையாளருக்கு வழங்கவில்லை என்றும் விபத்து நடந்த பின்னர் பாலிசியை இணையதளத்தில் பதிவிறக்கம் (download) செய்து அதன் மூலம் இழப்பீட்டுத் தொகையை வாடிக்கையாளர் கேட்டுள்ளார் என்றும் அவரது   வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் இன்சூரன்ஸ் நிறுவனம் நுகர்வோர் நீதிமன்றத்தில் வாதிட்டது.

இந்த வழக்கில் எர்ணாகுளம் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் கடந்த ஜூன் 24 அன்று வழங்கிய தீர்ப்பில் சேதத்துக்கான காப்பீட்டுத் தொகையை வழங்க மறுத்தது இன்சூரன்ஸ் நிறுவனத்தின் நேர்மையற்ற வர்த்தக நடைமுறை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இன்சூரன்ஸ் பாலிசியை வழங்குவதற்கு தேவையான முன்மொழிவு படிவத்தில் பாலிசி வழங்குவதற்கு முன்பு வாடிக்கையாளரின் கையொப்பத்தை பெற வேண்டியது இன்சூரன்ஸ் நிறுவனத்தின் கடமை என்றும் தேவையான ஆவணங்களை பாலிசியை வழங்குவதற்கு முன்பு பெறாமல் பணத்தை மட்டும் பெற்றுக்கொண்டு பாலிசியை வழங்கியுள்ளது சரியானது இல்லை என்றும் சம்பந்தப்பட்ட வாகனம் முன்பு விபத்தில் சிக்கியுள்ளது என வாதிட்ட இன்சூரன்ஸ் நிறுவனம் அதற்கான ஆவணங்களை தாக்கல் செய்யவில்லை என்றும் வாடிக்கையாளர் தாக்கல் செய்துள்ள வழக்கு நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

வாடிக்கையாளரின் வாகனத்துக்கு விபத்தால் ஏற்பட்ட சேதத்தை சரி செய்ய இழப்பீட்டு தொகையாக ரூ 2,50,000/- மற்றும் வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் சிரமங்களுக்கு இழப்பீடாக ரூ 25,000/-   மற்றும் வழக்கு  செலவு தொகையாக ரூ  10,000/- ஆக மொத்தம் ரூ 2,85,000/- ஐ    இன்சூரன்ஸ் நிறுவனம் வழக்கு தாக்கல் செய்தவருக்கு வழங்க வேண்டும் என்று நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. (Case Title: Preethy Gloria vs The United India Insurance Co. Ltd., Case Number: CC/20/416, Date of Order: 24th June 2024)

தொடர்புடைய கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்