ராஜஸ்தான் மாநிலம், பிவாடா மாவட்டம், பீடஸ் தெஹ்சில் மண்டலில் வசித்து வருபவர் நந்த் ராம் பாலாய் மகன் ராம் லால் பாலாய். இவருக்கு சொந்தமான டிராக்டர் ஒன்றை எச்டிஎப்சி எர்கோ ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 22 செப்டம்பர் 2010 முதல் ஓராண்டு காலத்துக்கு பிரிமியம் செலுத்தி இன்சுரன்ஸ் செய்துள்ளார். கடந்த 2011 ஏப்ரல் 16 அன்று டிராக்டர் உரிமையாளரின் ஓட்டுநர் பீதாஸிலிருந்து தூல்கேடாவுக்குப் வாகனத்தை ஓட்டிச் சென்ற போது இரவு 8.00 மணியளவில் சுராஸ் சௌக் என்ற இடத்தில் டிராக்டர் பழுதடைந்துள்ளது. அங்கேயே வாகனத்தை நிறுத்திவிட்டு பழுதை சரி செய்ய மெக்கானிக்கை அழைத்து வர ஓட்டுநர் சென்றுள்ளார். அவர் திரும்பி வந்து டிராக்டரை விட்டுச் சென்ற இடத்தில் பார்த்த போது அங்கு அந்த வாகனம் இல்லை.
வாகன திருட்டு
பல இடங்களில் டிராக்டரை தேடியும் கிடைக்காததால் காவல் நிலையத்தில் வாகனம் திருடப்பட்டதாக டிராக்டர் உரிமையாளர் ராம் லால் பாலாய் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்த விசாரணை செய்து வாகனத்தை கண்டுபிடிக்கவில்லை இயலவில்லை என்ற இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் 2011 ஜூலை மாதத்தில் காவல் அதிகாரி தாக்கல் செய்துள்ளார். இதன் பின்னர் வாகனத்திற்கு இன்சூரன்ஸ் தொகை வழங்குமாறு வாகன உரிமையாளர் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் விண்ணப்பம் செய்துள்ளார். இந்நிலையில் இன்சூரன்ஸ் நிறுவனம் 2011 செப்டம்பர் இறுதியில் “நோ கிளைம்” (no claim) என்ற தகவலை வழங்கி இன்சூரன்ஸ் பணத்தை தரவில்லை.
நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு
இதனால் மனமுடைந்த வாகன உரிமையாளர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மீது தாக்கல் செய்த வழக்கில் 2012 ஜூன் மாதம் தீர்ப்பளித்த நீதிமன்றம் வாகன உரிமையாளரின் புகாரை தள்ளுபடி செய்து விட்டது. இதனை எதிர்த்து வாகன உரிமையாளர் ராஜஸ்தான் மாநில நுகர்வோர் ஆணையத்தில் மேல்முறையீடு செய்ததில் கடந்த 2015 டிசம்பர் மாதத்தில் மேல்றையீட்டை ஏற்று இன்சூரன்ஸ் நிறுவனம் வாகன உரிமையாளருக்கு இன்சூரன்ஸ் தொகையை வழங்க மாநில ஆணையம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து இன்சூரன்ஸ் நிறுவனம் தேசிய ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த தேசிய நுகர்வோர் ஆணையம் கடந்த ஜூலை 8 அன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
தேசிய ஆணையத்தில் இன்சுரன்ஸ் நிறுவனத்தின் வாதம்
வாகனம் காணாமல் போனதாக கூறப்படும் நாளில் இருந்து ஆறு நாட்கள் கழித்து வாகன உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் செய்து தாமதமாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. வாகனம் காணாமல் போனது குறித்து உடனடியாக இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு தகவல் வழங்கப்படவில்லை. இதனால் தங்களால் தகுந்த விசாரணையை நடத்தி வாகனத்தை கண்டுபிடிப்பதற்கான வாய்ப்புகள் இல்லாமல் போனது. வாகனத்துக்கு விபத்து அல்லது வாகன திருட்டு ஏற்பட்டால் உடனடியாக தகவல் வழங்க வேண்டும் என்ற பாலிசி நிபந்தனையை வாகன உரிமையாளர் மீறி உள்ளதால் இன்சூரன்ஸ் வழங்க வேண்டிய அவசியம் கிடையாது. வாகனம் வாடகைக்கு விடப்பட்டு வணிகப் பயன்பாட்டுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. வணிக பயன்பாட்டுக்காக பயன்படுத்தினால் வாகன உரிமையாளர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய இயலாது என்று இன்சூரன்ஸ் நிறுவனம் தேசிய நுகர்வோர் ஆணையத்தில் வாதங்களை முன் வைத்தது.
தேசிய ஆணையத்தின் தீர்ப்பு
“வாகன உரிமையாளர் வாகனம் காணாமல் போனது தொடர்பாக உடனடியாக காவல் நிலையத்தில் தகவல் வழங்கியதாகவும் காவல் நிலைய அதிகாரி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய தாமதம் செய்து விட்டார் என்றும் இதனால் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து பதில் ஏற்பட்ட கால தாமதத்திற்கு வாகன உரிமையாளர் பொறுப்பல்ல என்றும் வாகன உரிமையாளர் தரப்பில் வாதிடப்பட்டது ஏற்றுக் கொள்ளத்தக்கதாக உள்ளது. வாகனத்தை வாடகைக்கு விட்டு வணிக பயன்பாட்டுக்கு வாகன உரிமையாளர் பயன்படுத்தியுள்ளார் என்ற இன்சூரன்ஸ் நிறுவனத்தின் குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் கிடையாது” தேசிய நுகர்வோர் ஆணையம் வழங்கிய தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
“மாண்புமிகு உச்ச நீதிமன்றம் தர்மேந்தர் எதிர் யுனைடெட் இந்தியா இன்சூன்ஸ் கம்பெனி லிமிடெட் என்ற வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதில் 7 நாட்கள் தாமதம் மற்றும் காப்பீட்டு நிறுவனத்திற்குத் தெரிவிக்க 78 நாட்கள் தாமதம் ஏற்பட்ட போதும் வாகன உரிமையாளருக்கு இன்சூரன்ஸ் பணத்தை வழங்க உத்தரவிட்டுள்ளது” என தேசிய நுகர்வோர் ஆணையம் அதன் தீர்ப்பில் சுட்டிக்காட்டி உள்ளது (Dharamender Vs. United India Insurance Co. Ltd. and Others, Civil Appeal No. 575 of 2021).
குர்ஷிந்தர் சிங் எதிர் ஸ்ரீராம் ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் மற்றும் ஓம் பிரகாஷ் எதிர் ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் (Gurshinder Singh Vs. Shriram General Insurance Company Ltd. and Another. (2020) 1 SCC 612 & Om Parkash Vs. Reliance General Insurance and Another in Civil Appeal No. 15611 of 2017) உள்ளிட்ட வழக்குகளில் “திருட்டு சம்பவம் குறித்து காப்பீட்டு நிறுவனத்திடம் அறிவிப்பதில் சிறிது காலதாமதம் உள்ளது என்ற காரணத்திற்காக உரிமை கோருபவருக்கு கோரிக்கை மறுக்கப்படுமானால் அது அதிநவீன தொழில்நுட்ப (hyber technical view) பார்வையாக இருக்கும்” எனக் கூறி இழப்பீட்டுத் தொகைகளை வழங்க இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது மாண்புமிகு உச்ச நீதிமன்றம் வழங்கி உள்ள தீர்ப்புகளில் என்பதையும் என தேசிய நுகர்வோர் ஆணையம் அதன் தீர்ப்பில் சுட்டிக்காட்டி உள்ளது.
13 ஆண்டுகளுக்கு பின்னரே நீதி
இன்சூரன்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீட்டை தள்ளுபடி செய்த தேசிய நுகர்வோர் ஆணையம் வாகன உரிமையாளருக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட்ட மாநில நுகர்வோர் ஆணையத்தின் தீர்ப்பு சரியானது என்று தீர்ப்பளித்துள்ளது. நுகர்வோருக்கு ஆதரவாக தீர்ப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும் பிரச்சனை ஏற்பட்டு இதில் தீர்ப்பை பெற நுகர்வோருக்கு 13 ஆண்டுகளுக்கு பின்னரே நீதி கிடைத்துள்ளது என்பது வருத்தம் அளிக்க கூடியதாகவும் உள்ளது.