spot_img
January 29, 2025, 5:23 am
spot_img

இரண்டு வார்த்தைகளை வைத்து இழப்பீடு வழங்கிய நுகர்வோர் நீதிமன்றம்

பாராளுமன்றம், சட்டமன்றம் ஆகியன சட்டம் இயற்றும் போது ஒரு குறிப்பிட்ட நலன் மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு சட்டத்தை இயற்றுகின்றன.  சட்டத்தை அமல்படுத்துவதில் பிரச்சனை ஏற்படும் போது சட்டத்திற்கான விளக்கத்தை கொடுத்து தகுந்த தீர்ப்பை வழங்க வேண்டியது நீதிமன்றங்களின் பணியாகும். சமீபத்தில் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் இரண்டு வார்த்தைகளை விளக்கி (interpretation) வழங்கி நுகர்வோருக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது.  

நாமக்கல் அருகே உள்ள எருமைப்பட்டியில் வசித்து வந்த குமார் (56)  லாரி ஒன்றை வைத்து தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு கனரக வாகனங்கள் ஓட்டுவதற்கான லைசென்ஸ் இருந்துள்ளது. இவரிடம் இரண்டு சக்கர வாகனம் ஓட்டுவதற்கான லைசென்ஸ் இல்லை. இவர் நாமக்கல் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத்தின்   உறுப்பினராக இருந்து வந்துள்ளார்.  இந்த சங்கம் உறுப்பினர்களின் நலனுக்காக அரசுக்கு சொந்தமான பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனம் ஒன்றில் குரூப் இன்சூரன்ஸ் பாலிசியை பெற்றுள்ளது. இந்த குழு காப்பீட்டு திட்டத்தில் குமார் உறுப்பினராக இருந்து வந்துள்ளார்.

கடந்த 2020 அக்டோபர் மாதத்தில் இரு சக்கர  வாகனத்தை ஓட்டி செல்லும் போது திடீரென விபத்து ஏற்பட்டு தலையில்   காயமடைந்து மருத்துவமனையில் இறந்து விட்டார்.    குரூப் இன்சூரன்ஸ் திட்டப்படி இறந்தவரின்   மனைவி தேவகி, மகன் அமர்நாத், மகள் கோகிலா ஆகியோர் இன்சூரன்ஸ் தொகை ரூபாய் 10 லட்சம் வழங்குமாறு இன்சூரன்ஸ் நிறுவனத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இரு சக்கர வாகனத்தை   லைசென்ஸ் இல்லாமல்   அவர்   ஓட்டி உள்ளதாலும் வாகனத்தை ஓட்டும் போது தலைக்கவசம் அணியாததாலும் இன்சூரன்ஸ் தொகையை கொடுக்க முடியாது என இன்சூரன்ஸ் நிறுவனம் தெரிவித்துவிட்டது.  இன்சூரன்ஸ் நிறுவனம் காப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் என்று தேவகி, அமர்நாத், கோகிலா ஆகியோர் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.   லாரி உரிமையாளர்கள் சங்கத்துக்கு வழங்கிய குரூப் இன்சூரன்ஸ் பாலிசியில்   உறுப்பினர்கள்   சட்டத்தை மீறி செயல்பட்டு இறப்பு ஏற்பட்டால் காப்பீட்டுத் தொகை வழங்கப்பட மாட்டாது என   நிபந்தனை உள்ளது என இன்சூரன்ஸ் மூலம் நீதிமன்றத்தில் வாதிட்டது

இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில் சில நாட்களுக்கு முன்னர்   நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ் தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்தது.   இரு சக்கர வாகனத்தை  லைசன்ஸ் இல்லாமல் இறந்து போன குமார் ஓட்டியுள்ளார். அப்போது அவர் தலைக்கவசமும் அணியவில்லை.  அவரது செயல் சட்டத்தை மீறியது உண்மை.   ஆனால், இன்சூரன்ஸ் பாலிசி நிபந்தனையில் குற்றம் புரியும் நோக்கத்துடன் சட்டத்தை மீறி செயல்படும் போது இறந்தால் மட்டுமே இன்சூரன்ஸ் தொகை வழங்கப்படாது என்று உள்ளது (violated the law with criminal intention). 

இந்த வழக்கில் விபத்தில் இறந்தவர் குற்றம் புரியும் நோக்கத்துடன் சட்டத்தை மீறி தலைக்கு கவசமும் ஓட்டுனர் வாகனத்தை ஓட்டுவதற்கான லைசென்ஸ் இல்லாமல் செயல்பட்டார் என்பதை நிரூபிக்க இன்சூரன்ஸ் நிறுவனம் எந்த சாட்சியங்களையும் சான்றாணங்களையும் சமர்ப்பிக்கவில்லை. இதனால் இன்சுரன்ஸ் நிறுவனம் இறந்து போனவரின் வாரிசுகளுக்கு இன்சூரன்ஸ் தொகையை வழங்காதது சேவை குறைபாடு என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் இறந்தவர் சட்டத்தை பின்பற்றாவிட்டாலும் “குற்றம் புரியும் நோக்கத்துடன்” செயல்பட்டால் மட்டுமே இழப்பீடு வழங்க இயலாது என்ற விளக்கத்தை வழங்கி நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது. இன்சூரன்ஸ் தொகை 10 லட்சம் என்றாலும் இறந்து போனவர் சட்டத்தை மீறி அஜாக்கிரதையாக செயல்பட்டதால் இறப்பில் அவருக்கும் பங்கு (contributory negligence)  உள்ளதை கருதி இன்சூரன்ஸ் நிறுவனம் பாதி இன்சுரன்ஸ் தொகை 5 லட்சத்தையும் சேவை குறைபாட்டிற்கு இழப்பீடாக ரூபாய் ஒரு லட்சத்தையும் இறந்து போனவரின் வாரிசுகளுக்கு நான்கு வாரங்களுக்கு   வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்சூரன்ஸ் நிறுவனம் நான்கு வாரங்களுக்குள் 6 லட்சத்தை வழங்க தவறினால் அக்டோபர் 2020 முதல் பணம் வழங்கப்படும் நாள் வரை   ஆண்டுக்கு 9 சதவீத வட்டி சேர்த்து வழங்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பு இரண்டு வார்த்தைகளுக்கு விளக்கத்தை அளித்து சட்டத்தை இயற்றியவர்களின் நோக்கத்தை நிறைவேற்றி பாதிக்கப்பட்ட குடும்பத்தை காப்பாற்றி இருக்கிறது.   மேலும், இழப்பானது நுகர்வோரின் கவனக்குறைவால் ஏற்பட்டுள்ளதால் அவருக்கும் இந்த இழப்பை   ஏற்படுத்தியதில் பங்கு (contributory negligence) உண்டு என்று நுகர்வோர் நீதிமன்றம் முடிவு செய்து அதற்காக   இன்சுரன்ஸ் தொகையில் ஒரு பங்கை பிடித்தம் செய்து கொண்ட பிடித்தம் செய்த விதம் நுகர்வோர்  சட்டவியலில் (consumer jurisprudence) முன்னுதாரணமாக பார்க்கப்படுகிறது. 

தொடர்புடைய கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்